அக்னிப் பிரவேசம்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸

🌸..பாகம்-148🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-40
……………………………………..

அக்னிப் பிரவேசம்

…………………………
ஒரு மிகச் சாதாரண மனிதன், ஒரு மிகச் சாதாரணப் பெண் மணியிடம் பேசுவது போல, அன்பு நீங்கிய, பேசத் தகாத வார்த்தைகளை நீங்கள் ஏன் என்னிடம் பேசுகிறீர்கள்?நீங்கள் நினைப்பது போன்றவள் அல்ல நான்.

என்னுடைய நன்னடத்தை பற்றி நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தன் துன்பத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு, மெதுவான குரலில் பேசத் தொடங்கிய ஸீதை, ராமரைப் பார்த்து மேலும் சொன்னாள்.

ஒழுக்கமற்ற பெண்மணிகளின் நடத்தையை வைத்து, பெண்ணினத்தையே நீங்கள் எடை போடுகிறீர்கள் போலும்! ராவணனிடம் சிக்கியபோது நான் கதியற்றவளானேன். அப்பொழுது என் விருப்பப் படி எதையும் செய்யும் சக்தியை இழந்தவளானேன். இதற்கு என்னுடைய விதியை நொந்து கொள்வதைத் தவிர, எனக்கு வேறு வழியில்லை.

ஆனால் அப்போதும் கூட என் வசத்தில் இருந்த என்னுடைய இதயம், உங்களை விட்டு அகலவில்லை. மற்றவர்களுக்கு மதிப்பளிப்பவரே! நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டோம். ஒன்றாக வாழ்ந்தோம். அப்படியிருந்தும் என்னைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால் அத்துடன் என் வாழ்வு முடிந்தது.

அக்னிப் பிரவேசம்

நான் இலங்கையில் இருந்தபோது, என்னைச் சந்திக்க ஹனுமானை அனுப்பினீர்கள் அல்லவா? அப்போதே நீங்கள் ஏன் என்னைத் துறந்து விடவில்லை? நீங்கள் என்னைத் துறந்து விட்டீர்கள் என்ற செய்தியைத் தாங்கி ஹனுமான் என்னை வந்து சந்தித்திருந்தால், அந்த நொடியிலேயே நான் என் உயிரைவிட்டிருப்பேன்? அப்படி ஒரு செய்தியை நீங்கள் அப்பொழுதே ஹனுமான் மூலமாக அனுப்பியிருந்தால், இந்த யுத்தமே தேவையற்றதாகி இருக்குமே?

உங்கள் உயிரைப் பயணம் வைத்து, இவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்கொண்டு, உங்களுடைய நண்பர்களையும் சிரமப் படுத்தி, இப்படி ஒரு பயனற்ற முயற்சியில் நீங்கள் இறங்கி இருக்க வேண்டிய அவசியதே இருந்திருக்காதே! ஒரு மிகச் சாதாரண மனிதன்போல கோபத்திற்கு இடம் கொடுத்து விட்ட நீங்கள், பெண்மையின் பலவீனத்தைப் பற்றி மட்டுமே மனதில் நினைக்கிறீர்கள்.

நீங்களே அறிந்த என்னுடைய குணத்தை , நீங்கள் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க மறந்து விட்டீர்கள். உங்கள் மீது நான் வைத்திருக்கும் பக்தியையும், என்னுடைய தூய்மையையும் நீங்கள் நினைத்துப் பார்க்க மறந்து விட்டீர்கள்.

இப்படி ராமரைப் பார்த்துக் கூறிய ஸீதை தொடர்ந்து அழுதவாறே, லக்ஷ்மணனைப் பார்த்துச் சில வார்த்தைகள் கூறினாள்.எனக்கு நேர்ந்திருக்கும் துக்கத்திற்கு, ஒரே மருந்து நெருப்பு தான். எனக்காக இங்கே தீ மூட்டுவாயாக! பொய்யான அவதூறுகளைக்கேட்டுக் கொண்ட நான், இனி வாழ விரும்பவில்லை .

என்னுடைய நற்குணத்தின் மீது நம்பிக்கையிழந்து விட்ட எனது கணவரால் இப்படிப் பலர் நடுவில் நான் நிராகரிக்கப் பட்ட பிறகு, அக்னிப் பிரவேசம் செய்வது ஒன்று தான் எனக்கு உகந்த வழி.

அக்னிப் பிரவேசம்

ஸீதையின் வார்த்தைகளைக்கேட்டு மனம் நொந்து போன லக்ஷ்மணன், ராமரின் முகத்தைப் பார்த்தான். ஸீதை கேட்டுக் கொண்டவாறே தீ மூட்டப் படுவதை, ராமர் ஏற்கிறார் என்பதை அவருடைய முக பாவத்திலிருந்து புரிந்து கொண்ட அவன், தீ மூட்டப் படுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.

உலகின் அழிவு காலத்தில் எமன் எப்படி தோற்றமளிப்பானோ, அப்படிக் காட்சியளித்துக் கொண்டு நின்ற ராமரின் கோபத்தைத் தணிக்கவோ, அவரிடம் பேசவோ கூட எவரும் துணியவில்லை. அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் கூட, அனைவரும் தயங்கியே நின்றார்கள். ராமரை வலம் வந்து, ஸீதை அக்னியை நெருங்கினாள். அந்தத் தீயின் சமீபமாக நின்று கையைக் கவித்தவாறு, தெய்வங்களை மனதில் நினைத்துத் துதிக்கத் தொடங்கினாள்.

என்னுடைய இதயம் ராமரை விட்டு அகலாதது என்றால் அக்னிதேவனே! நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாயாக! என்னுடைய நடத்தை அப்பழுக்கற்றது என்றால், அக்னிதேவனே! நான்கு திசைகளிலும் என்னை காப்பாயாக! மனதாலோ , வாக்காலோ, சரீரத்தினாலோ, ஒரு பொழுதும் நான் ராமருக்குத் துரோகம் இழைத்தது இல்லை என்பது உண்மையானால்,

அக்னிதேவனே! நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாயாக! நான் தூய்மையான குணமுடையவள் என்பதை சூரிய தேவனும், வாயு தேவனும், நான்கு திசைகளின் அதிபதிகளும், சந்திரனும், இரவும் பகலும், மாலையும், பூமாதேவியும் நன்கு அறிவார்கள் என்பது உண்மையானால், அக்னிதேவனே! நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாயாக!இவ்வாறு வேண்டிக் கொண்டு அக்னியை வலம் வந்து, சற்றும் அச்சமில்லாதவளாக ஸீதை அக்னியில் பிரவேசித்தாள்.

அக்னிப் பிரவேசம்

அனைவரும் பார்த்துக் கொண்டு நிற்கையில் ஸீதை, தங்கத்தைப்போல் பிரகாசித்துக் கொண்டு அக்னியில், பிரவேசித்தாள்.
வேள்வித் தீயில், சேர்க்கப்படுகிற நெய் அக்னியோடு சேர்வது போல, ஸீதை அக்னியில் பிரவேசித்தாள்.

ரிஷிகளும், தேவர்களும், கந்தர்வர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஸீதை அக்னியில் பிரவேசித்தாள்.
பெண்கள் கதறினர்.

மூவுலகங்களைக் காப்பவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், தானவர்களும், சாபத்திற்குள்ளான பெண் தெய்வம் சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் வீழ்வது போல், ஸீதை அக்னியில் பிரவேசிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கூடியிருந்த வானரர்களும், அரக்கர்களும் ” ஓ” வென்று அலறினர்.
கண்கள் குளமாக ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்போது எமனும், குபேரனும், பித்ரு தேவதைகளும் இந்திரனும், வருணனும், ப்ரம்ம தேவனும், சிவனும் அங்கே தோன்றி, ராமரைப் பார்த்துப்பேசத் தொடங்கினார்கள். எல்லா வற்றுக்கும் அதிபதியான, நீ ,ஸீதை அக்னியில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்த்துக் கொண்டு நிற்கிறாய்? தெய்வங்களில் முதன்மையானவன் அல்லவா நீ? தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும், காட்சியளிப்பவன் நியே அல்லவா? அப்படிப் பட்ட நீ, ஒரு சாதாரண மனிதன்போல, ஸீதையை இப்படி அலட்சியப் படுத்தலாமா?

உலகத்தின் நாயகர்கள் இவ்வாறு பேசியபோது ராமர், தசரத மன்னனுக்கு ப் பிறந்த ராமன் என்கிற பெயருடைய மனிதனாகத் ததன் என்னை நான் அறிவேன்” என்று கூறிவிட்டு, ப்ரம்ம தேவனைப் பார்த்து, ” நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என்பதைச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

ராமர்கேட்டுக் கொண்ட தற்கிணங்க ப்ரம்ம தேவர் பதில் உரைக்கத் தொடங்கினார். நீயே ஸுதர்ஸன சக்கரத்தை ஏந்தி நிற்கும் நாராயணன்! நீயே அழியாத ப்ரம்மன்! தொடக்கம், இடை, முடிவு ஆகியநிலைகளில், அழியாத உண்மை நீயே! அனைத்து உலகங்களையும் இயக்கி வைக்கிற விதி நீயே! நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு நீயே! பெரும் பலம் படைத்த கிருஷ்ணன் நீயே! தேவர்களின் படைத்தலைவனாகிய முருகன் நீயே!அறிவும் நீயே! ஆற்றலும் நியே! பொறுமையும் நீயே! தன்னை அடக்கும் தன்மையும் நீயே! நியே தொடக்கம், நீயே முடிவு!

அனைவருக்கும் பாதுகாப்பு நீயே! அனைவருக்கும் அடைக்கலம் நீயே! வேதங்கள் நீயே! மூவுலகங்களையும் படைத்தவன் நீயே! நீயே வேள்வி! ஓம்” எனும் பொருள் நீயே! உயர்ந்தவை எல்லாவற்றிலும் உயர்வு நீயே! உன்னுடைய தோற்றதோ, உன்னுடைய முடிவோ, உன்னுடைய உண்மை நிலையோ யாரும் அறியாததே! எல்லா உயிரினங்களிலும் இருப்பவன் நீயே! எல்லா திசைகளிலும் இருப்பவன் நீயே! ஆகாயத்திலும், மலைகளிலும் , நதிகளிலும் இருப்பவன் நீயே! பூமி அழிகிற போது,

ஆதிசேஷன் மீது காட்சியளிப்பவன் நீயே! மூவுலகங்களையும், கந்தர்வர்களையும், அரக்கர்களையும் படைக்கப் பட்ட அனைத்தையும், தெய்வங்களையும் ஆதாரமாக நின்று காப்பாற்றுபவன் நீயே!
ராமா! ப்ரம்ம தேவனாகிய நான், உன்னுடைய இதயம், சரஸ்வதி உன்னுடைய நா! நீ கண் இமைக்கும்போது, உன் கண்கள் மூடினால், அது இரவு! அது திறந்தால் அது பகல்! உன்னுடைய கோபத்தின் சின்னம் தீ! உன்னுடைய சாந்தத்தின் சின்னம் சந்திரன்! உன்னுடைய உறுதியின் சின்னம் பூமி! மூன்று காலடிகளால் மூவுலகையும் அளந்த மஹாவிஷ்ணு நீயே! ராமா! ஸீதைதான் லக்ஷ்மி தேவி! படைக்கப் பட்டவை அனைத்துக்கும் அதிபதியாகிய நீ, ராவணனை அழிப்பதற்காக இந்தமனித உருவை எடுத்தாய்.

அந்தக் காரியம் முடிந்து விட்டது. உன்னுடைய புகழைக் கூறி உன்னைத் துதிப்பது என்றும் வீணாவதில்லை. உன் மீது பக்தி செலுத்துபவர்கள் தோல்வி அடைவதில்லை. உன்னுடைய பக்தர்கள், இம்மையிலும், மறுமையிலும் நன்மை பெறுவார்கள்.

( ப்ரம்ம தேவன் ராமரைப் பார்த்து, கூறிய வார்த்தைகள் ஒரு துதியாகவே கருதப் படுகிறது. 20 ஸ்லோகங்களைக் கொண்ட இதைச் சொல்பவர்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாமல் இருக்கும்” என்று தனது ராமாயணத்தில் வால்மீகி குறிப்பிட்டிருக்கிறார்)

ப்ரம்ம தேவன் இவ்வாறு கூறி முடித்த போது, அங்கே மூட்டப் பட்டிருந்த தீயிலிருந்து அக்னி தேவன், ஸீதையைக் கையில் ஏந்தியவாறு வெளிப் பட்டான். ஸீதையோ, அக்னியில் எவ்வாறு பிரவேசித்தாளோ அவ்வாறே காணப் பட்டாள். ராமரைப் பார்த்து, அக்னி தேவன், ” இதோ உன்னுடைய மனைவி ஸீதை! அவளிடம் பாவமில்லை.

மனதாலோ, வாக்காலோ சரீரத்தினாலோ அவள் உனக்கு ஒரு துரோகமும் இழைக்காதவள், ராவணனால் கடத்திச் செல்லப் பட்டபோது, சக்தி இழந்தவளாகத் திகழ்ந்த அவள், அந்த நிலையிலும் கூட மனதால் உன்னையே நினைத்தாள். அரக்கிகளால் சூழப் பட்டிருந்த போதும்,அவள் உன்னையே நினைத்தாள். ஒரு பாவமும் இல்லாத தூய்மையானவளான ஸீதையை, சுடு சொல் எதுவும் பேசாமல் ஏற்றுக் கொள்வாயாக! இது என் கட்டளை! என்று கூறினான்.

அக்னி தேவனின் பேச்சைக்கேட்டு, ராமர் பெரிதும் மகிழ்ந்தார். நற்குணத்தைப்போற்றுபவர்களில் முதன்மையானவராகிய அவர், அக்னிதேவனைப் பார்த்து, ” ராணனுடைய இடத்தில் நெடுங்காலம் வாழ்ந்து விட்டதால், மங்களகரமானவளாகிய இவள், மக்கள் மத்தியில் இப்படி ஒரு சோதனைக்கு உள்ளாக வேண்டியவளாகி விட்டாள். அவளுடைய தூய்மையை நிரூபிக்காமல் நான் அவளை ஏற்றிருந்தால், ஆசைக்கு அடிமையாகி நான் செயல்பட்டேன் என்று உலகம் பேசி இருக்கும்.

அக்னிப் பிரவேசம்

ஸீதை என் மீது மாறாத அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியும். அவளுடைய தூய்மையே அவளுக்குப் பாதுகாப்பாக இருந்தபோது, ராவணனால் அவளை ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதையும் நான் அறிவேன். ஆனால், சத்தியத்திலிருந்து மாறாத நான், மூவுலகங்களுக்கும் அவளுடைய மேன்மையை நிரூபிப்பதற்காகவே அவள் அக்னிப் பிரவேசம் செய்தபோது, பேசாமல் இருந்தேன்.

ஸீதை நெருப்பு போன்றவள், அவளை அணுகவும் ராவணனால் முடிந்திருக்காது. சூரியனும், சூரிய ஒளியும் போல, நானும் ஸீதையும் ஆவோம். அவள் என்னிடமிருந்து பிரிக்கப் பட முடியாதவள், நீங்கள் அனைவரும் கூறிய நல் வார்த்தைகளை நான் ஏற்கிறேன். ஸீதையை நான் விடுவது என்பது, ஒரு நல்ல மனிதன் தன் புகழை விடுவது போல.

பெரும் சக்தி படைத்தவரும், இணையற்ற வீரருமாகிய ராமர், அக்னி தேவனையும் , மற்ற தெய்வங்களையும் பார்த்து இவ்வாறு பேசி விட்டு, பெரும் மன மகிழ்ச்சியுடன் ஸீதையோடு இணைந்தார். அவர் மனம் நிறைவடைந்தது.
………………………………………….
….

தொடரும்… 🌸….

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here