விபீஷணன் பட்டாபிஷேகம்

🌸 வால்மீகி  ராமாயணம்

🌸..பாகம்-145🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-37
……………………

விபீஷணன் பட்டாபிஷேகம்

………………………………………….
என்னைத் தனியே விட்டு விட்டு, நீங்கள் எங்கே செல்லப் புறப் பட்டு விட்டீர்கள்! ஏன் என்னிடம்பேச மறுக்கிறீர்கள்? இந்த துர்பாக்கியவதியைக் கண்டு உங்கள் மனம் இரங்க வில்லையா? என்னைக் கண்டு உங்களுக்குக்கோபம் கூட வரவில்லையா? நகரத்தின் கதவுகளைத் தாண்டி, கால் நடையாக, துணையில்லாமல் இப்படி வெளியே வந்து நிற்கிறேனே?

அதைக் கண்டு உங்களுடைய கோபம் பொங்கி எழவில்லையா? என் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லக் கூடாதா? என்றெல்லாம் கதறி அழுத மண்டோதரிமேலும் சொன்னாள், நல்ல குலத்தில் பிறந்து, பெரியவர்களுக்குரிய மரியாதையைக் காட்டி கணவனிடம் மாறாத அன்பு கொண்டு வாழ்ந்த, பல பெண்மணிகள் உங்களால் விதவைகளாக்கப் பட்டு விட்டனர்.

அவர்களுடைய சாபத்தின் காரணமாகத் தான் இன்று ராமரின் கையில் உங்களுக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது. கணவனிடம் மாறா அன்பு கொண்ட பெண்களின் கண்ணீர் பூமியில் விழுந்தால், அது வீணாவதில்லை என்கிற பெரியவர்களின் வார்த்தை இப்போது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

நடந்ததையும், நடக்க இருப்பதையும் நன்றாக அறிந்த விபீஷணன், நீங்கள் ஸீதையைக் கடத்தி வந்தபோது, அரக்கர்களிடையே மேம்பட்டவர்களின் அழிவுகாலம்ஆரம்பித்து விட்டது” என்று கூறிய வார்த்தைகள் இன்று பலித்து விட்டன. துன்பத்தினால் பீடிக்கப் பட்டாலும் என் இதயம் ஆயிரம் துகள்களாக இன்னமும் சிதறாமல் இருப்பது, என்னுடைய துரதிர்ஷ்டமே!
இவ்வாறெல்லாம் புலம்பிய மண்டோதரி ராவணனின் உடல் மீது விழுந்தாள்.

மயக்கமுற்றாள். பின்னர் அவள் மூர்ச்சை தெளிந்து எழுந்த போது, ராவணனின் மற்ற மனைவிகள், ” உலக வாழ்க்கை நிச்சயமற்றது என்பது நீங்கள் அறியாததாதேவி? காலம் முற்கொள்ளும் கோலத்தின் காரணமாக, மன்னர்களின் செல்வமும், மேன்மையும் என்றுமே நிச்சயமற்ற வை தான்” என்று மண்டோதரியைப் பார்த்துக் கூறி விட்டு, அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

இதற்கிடையில் ராமர், விபீஷணனைப் பார்த்து, ” அரக்க பெண்மணிகளுக்கு ஆறுதல் கூறப் படட்டும். உன்னுடைய மூத்த சகோதரனின் இறுதி சடங்குகள் முறையாக நடத்தப் படட்டும்” என்று கூறினார்.
இப்படி ராமர் சொன்னவுடன் விபீஷணன், தர்மத்தின் பாதையிலிருந்து தவறியவனும், கொடூரமானவனும், கருணையற்றவனும், நன்னடத்தையைக் கைவிட்டவனும், மற்றவர்களின் மனைவிமார்களைக் கவர்ந்தவனுமாகிய ஒருவனுக்கு- இறுதிச் சடங்குகளை நடத்துவது என்னால் இயலாத காரியம்.

மற்றவர்களுக்கு த் தீமை புரிவதையே லட்சியமாகக் கொண்ட ராவணன், சகோதரன் உருவில் வந்த என்னுடைய எதிரியே! மூத்த சகோதரன் என்றாலும் கூட, அவன் என்னுடைய மரியாதைக்குத் தகுதியானவன் அல்ல. அவனுடையஇறுதிச் சடங்குகளை நடத்த நான் மறுப்பதால், என்னை கொடுமையானவன் என்று கூட சிலர்கருதலாம். ஆனால், ராவணனின் குற்றங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும்போது, நான் உரிய முறையில் தான் நடந்து கொண்டேன் என்பது அனைவருக்கும்புரிய வரும், என்று கூறினான்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

இதைக்கேட்டு திருப்தியுற்ற ராமர், விபீஷணனுக்கு அறிவுரை சொன்னார். யுத்தத்தில் வெற்றி பெற எனக்கு உதவிய உனக்கு நல்லதைச் செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன். இப்பொழுது எது செய்யத் தக்கது என்று உனக்கு எடுத்துரைப்பதுஎன் கடமை. ராவணன், தர்மத்திற்கு விரோதமான வழிகளிலேயே சென்றான். என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், அதே சமயத்தில் அவன் பெரும் வீரனாகத் திகழ்ந்தான் என்பதும் மறுக்க முடியாததே. நூறு அச்வமேத யாகங்களைச் செய்த இந்திரனின் தலைமையில் தேவர்கள், ராவணனை எதிர் கொண்ட போதும் அவர்களால் வெற்றி காண முடியவில்லை. பலம் பொருந்திய ராவணன், பலரை துன்புறுத்தினாலும் கூட, அவன் பெரிய மனிதனே.

ஒரு மனிதன் மரணமடையும் வரையில் தான் அவன் மீதான விரோதங்கள் வாழ்கின்றன. நமது காரியம் முடிந்து விட்டது. இப்பொழுது இறுதிச் சடங்குகள் நடத்தப் படட்டும். நான் முன்பு சொன்னது போல, அவன் உன்னவன் மட்டுமல்ல, என்னவனும் கூட. இந்த வீரனுக்கு சாஸ்த்திர விதிமுறைகளின்படி இறுதிச் சடங்குகளைச் செய்து முடிப்பது தான் உன்னுடைய கடமை. அப்படிச் செய்வதால், உனக்கு நற்பெயரே உண்டாகும்.

 

ராமரின் இந்த அறிவுரையை ஏற்ற விபீஷணன், உடனடியாக இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.
அவனுடைய உத்திரவிற்கேற்ப, சந்தன மரக் கட்டைகள் உட்பட, வாசனை திரவியங்களும், முத்துக்களும், பவழங்களும், ரத்தினங்களும், கொண்டு வந்து குவிக்கப் பட்டன. ராவணனால் முறையாக பராமரிக்கப் பட்டு வந்த மூன்று புனித அக்னிகளும் கொண்டு வரப் பட்டன.

விபீஷணன் பட்டாபிஷேகம்

மால்யவானின் துணையுடன் விபீஷணன், ராவணனின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தான். மிகவும் உயர்ந்த பட்டாடையில் போர்த்தப் பட்ட அந்த அரக்கர் மன்னனின் உடல், சடலமேடையின் மீது வைக்கப் பட்டது. ராவணனைப் பறி கொடுத்த துக்கத்தினால், கண்களில் நீர் ததும்ப நின்ற அந்தணர்கள் வேதம் ஓதினார்கள். கலைஞர்கள், பல்வேறு வாத்தியங்களை இசைத்துக் கொண்டு குளமாகி விட்ட கண்களோடு, ராவணனின் புகழைப் பாடினார்கள்.

யஜுர் வேதத்தில் பாண்டித்தியம் பெற்ற அந்தணர்கள், தாமிர பாத்திரங்களில் புனிதத் தீயை ஏந்திச் செல்ல, அந்தப் புரத்து பெண்மணிகள் பின் தொடர, மக்கள் பெரும்ஓலமிட்டுக் கொண்டே அவர்களைத் தொடர்ந்து வர, ராவணனின் உடல் தெற்கு நோக்கி எடுத்துச் செல்லப் பட்டு, ஏற்கெனவே குறிக்கப்பட்ட இடத்தில் வைக்கப் பட்டது. இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தி முடிக்கப் பட்டன. ராவணனின் உடலுக்கு விபீஷணன் தீ வைத்தான்.

பின்னர், அழுது கொண்டே நின்று கொண்டிருந்த பெண்மணிகளையெல்லாம் சமாதானப் படுத்தி எல்லோரையும் அழைத்துக் கொண்டு, விபீஷணன் நகரத்திற்குத் திரும்பினான். வான வீதியில் நின்று இலங்கையில் நடக்கிற நிகழ்ச்சிகளையெல்லாம், கவனித்து க் கொண்டிருந்த கந்தர்வர்களும், மற்றவர்களும், ராமரின் போர்த்திறன், வானரர்களின் விடாமுயற்சி, ஸுக்ரீவனின் நல்ல ஆலோசனைகள், ஹனுமானின் வீரம், லக்ஷ்மணனின் போர்த்திறன், மற்றும் பக்தி, ராமரிடம் , ஸீதை கொண்டிருந்த மாறாதஅன்பு.. போன்றவற்றைப் பற்றி யெல்லாம் வியந்து பாராட்டிக் கொண்டே, தாங்கள் வந்தவாறேதிரும்பினர்.

ராமர், இந்திரனின் தேரோட்டியாகிய மாதலிக்குத் தனது நன்றியைத் தெரிவித்து, அவனுக்கு விடை கொடுத்து இந்திரனிடமே மீண்டும் அந்தத்தேரை அனுப்பி வைத்தார். பின்னர் லக்ஷ்மணன், ஸுக்ரீவன், மற்றும் எண்ணற்ற வானரர்கள் ராமரைக் கொண்டாடிமகிழ, அனைவரும் தங்களுடைய படை முகாமிட்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

அங்கே லக்ஷ்மணனை அழைத்து ராமர், மனதிற்கு இனியவனே! நமக்கு நன்மை புரிந்த விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும்.நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம் இது தான். ராவணனின் இளைய சகோதரனாகிய விபீஷணனை, இலங்கை அரசனாகப் பார்க்க நான் விரும்புகிறேன். பட்டாபிஷேகத்தை தாமதமில்லாமல் செய்து முடிப்பாயாக” என்று கூறினார்.

( தசரதரின் கட்டளையை ஏற்று காட்டுக்கு வந்த ராமர், பதினான்கு வருடங்கள்நகரத்தில் நுழைவதில்லை என்று தீர்மானித்திருந்தார். வனவாசம்செய்கிறேன் என்று கூறிவிட்டு, அதற்கிடையில் ஒரு நகரத்திற்குள் புகுந்து விட அவர் மனம் விரும்ப வில்லை. அதனால் தான் அவரே முன்னின்று விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்செய்விக்காமல், லக்ஷ்மணன் மூலமாக அதை அவர் நடத்தி முடிக்கிறார்.

விபீஷணனைப் பொறுத்த வரையில் அவன், முதலில் ராவணனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, அதற்கான நேரம் வரும் பொழுது, இந்தப்பாவிக்கு நான் இறுதிச் சடங்குசெய்வதா? என்று தயங்க ஆரம்பிக்கிறான்.

விபீஷணனிடம் காணப்படும் இந்த மாதிரி முரண் பாடுகளுக்கெல்லாம் விளக்கம் பெற வேண்டுமென்றால், அவனைப் பற்றி ராமர் முதலில் கூறியதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ராவணனைவிட்டு விபீஷணன் தங்களிடம் வந்து சேர்ந்த போது, மற்றவர்கள் எல்லாம் அவனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்த நேரத்தில், ராமர் இவன் நமக்குத் தீங்கிழைக்க மாட்டான்” ஏனென்றால் இவன் ராஜ்யத்தை விரும்பி நம்மிடம் வருகிறவன்” என்று கூறுகிறார்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

விபீஷணன் பட்டாபிஷேகம்

அதாவது, விபீஷணனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது . அவனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை வந்து விட்டது. ராவணனுடைய அதர்மம், கொடுமை ஆகியவற்றையெல்லாம் விபீஷணன் மனதார எதிர்த்தது உண்மையே, ராவணனுக்கு நல்ல எண்ணத்துடன் அவன் உபதேசம் செய்தும் உண்மையே.

ராவணனை விட்டு பிரிவதற்கு அவனுக்கு நியாயமான காரணங்கள் இருந்தும் உண்மையே, ஆனால்இவை எல்லாவற்றுடன் கூடவே அவனுக்கு ராஜ்யத்தின் மீதான ஆசையும் ஏற்பட்டு விட்டிருந்தது. ” ராஜ்ய காங்க் ஷி”- அதாவது ராஜ்யத்தின் மீது ஆசை கொண்டவன்- என்று ராமர் விபீஷணனை வர்ணிக்கிறார்.

அவன் தங்களுக்கு தீமை செய்ய மாட்டான் என்று, அவர் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு, இது ஒரு மிகப் பெரிய ஆதாரமாக அமைகிறது.

இப்படி விபீஷணனிடம் சுய நலமும் கலந்து தான் இருந்தது என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் ராமர் அவனை இப்படி வர்ணித்திருக்க வேண்டிய அவசியமில்லை. பண்டிதன், நல்லவன், வீரன், விவேகமுள்ளவன் என்ற பல வர்ணனைகள் விபீஷணனுக்குப் பொருந்தும். அத்துடன் கூட சுயநலவாதி என்பதும் பொருந்தும் என்றே நான் நினைக்கிறேன்.

இது ராமாயண விளக்கவுரைகள் கூறுகிற கருத்து அல்ல. இது என் சொந்த விமர்சனம். அந்த அளவில் மட்டுமே இதை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)

ராமரின் வார்த்தைகளை ஏற்று, விபீஷணனின் பட்டாபிஷேகத்திற்கான காரியங்களைத் தொடங்கிய லக்ஷ்மணன், வானரத் தலைவர்களின் கைகளில் பொற் குடங்களைக் கொடுத்து, நான் கு சமுத்திரங்களிலிருந்தும் தண்ணீர் கொண்டு வருமாறு அவர்களைக்கேட்டுக் கொண்டான்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

மனோ வேகத்தில் விரைந்து சென்று காரியங்களை முடிக்கும் திறன் படைத்த அவர்கள், லக்ஷ்மணன் கேட்டுக் கொண்ட படியே சமுத்திரங்களிலிருந்து நீரைக் கொண்டு வர, சாத்திர விதி முறைகளின் படி லக்ஷ்மணன், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து முடித்தான். விபீஷணனும், அவனைச் சார்ந்தவர்களும், பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமருக்கும் பெரும் திருப்தியுண்டாயிற்று. விபீஷணன் , ராமரைச் சென்று அடைந்து, அவரை வணங்கி மரியாதைகளைச் செய்தான்.

இதையடுத்து ராமர், ஹனுமானைப் பார்த்து ஓர் உத்திரவிட்டார். பேரரசனாகிய விபீஷணனின் அனுமதி பெற்று இலங்கை நகரத்திற்குள் சென்று, ஸீதையைச் சந்தித்து, அவளுடைய நலன் பற்றி விசாரிப்பாயாக! நான், லக்ஷ்மணன், ஸுக்ரீவன் போன்ற அனைவரும் நலமுடனே இருப்பதாக அவளிடம் நீ தெரிவிக்க வேண்டும். ராவணன், யுத்தத்தில் கொல்லப் பட்டான் என்பதையும் தெரிவிப்பாயாக! இந்த நல்ல செய்திகளை ஸீதையிடம் கூறிவிட்டு அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொண்டு திரும்புவாயாக!

ராமரின்,கட்டளையை ஏற்ற ஹனுமான் விபீஷணனின் அனுமதி பெற்று அசோக வனத்தில் நுழைந்து, சோகமே உருவாக அங்கே அமர்ந்திருந்த ஸீதையைக் கண்டு வணங்கி நின்று, பேசத் தொடங்கினார். ராமர் நலமுடன் இருக்கிறார். ஸுக்ரீவன், லக்ஷ்மணன் மற்றும் அனைவரும் நலமே.

உங்களுடைய நலன்பற்றி ராமர், பெரிதும் விசாரித்தார். வானரர்கள் மற்றும் விபீஷணன் ஆகியோர் உடனிருக்க, ராமர் ராவணனை யுத்த களத்தில் கொன்றார். நீங்கள் ராமர் மீது கொண்ட பக்தி தான் ராமருக்கு, போரில் பெரும் பலமாக அமைந்தது என்பதையும் தெரிவிக்க நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

விபீஷணன் பட்டாபிஷேகம்

ராமர் சொல்லச் சொன்ன தகவல் இது. எங்களுடைய நண்பனாகிய விபீஷணனின் அதிகாரத்தின் கீழ் இலங்கை வந்து விட்டது. ஆகையால் இனி நீ அஞ்சுவதற்கு எதுவுமில்லை. சொந்த இடத்திலேயே வசிப்பது போல நீ நிம்மதி கொள்ளலாம். விபீஷணனும் கூட உன்னைச் சந்தித்து மரியாதைகளைத் தெரிவிக்க ஆவலுடன் இருக்கிறான்” என்று ராமர் தெரிவிக்க ச் சொன்னார்.

இந்தச் செய்திகளையெல்லாம் கேட்ட ஸீதை, மகிழ்ச்சி மிகுதியால் பேசவும் முடியாமல் தடுமாறினாள். அப்போது ஹனுமான், தாங்கள் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னிடம் பேச மாட்டேன் என்கிறீர்கள்? என்று கேட்டார்.

மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக தொண்டை அடைத்துக் கொள்ள, ஸீதை கம்மிய குரலில்,” என் கணவரின் வெற்றிச் செய்தியால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக, என்னால் சிறிது நேரம் பேசவும் இயலாமற் போய்விட்டது.

நான் எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும், நீ இப்பொழுது கொண்டு வந்துள்ள செய்திக்கு நிகரான ஒரு பரிசு எதுவாக இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை இந்த நற்செய்தியை எனக்குக் கொண்டு வந்துள்ள நீ செய்த காரியத்துக்கு ஈடாக, இந்த உலகிலோ வேறு உலகங்களிலோ எதுவுமே இருக்க முடியாது.

வெள்ளியோ, தங்கமோ, ரத்தினங்களோ, வைடூரியங்களோ, மூவுலகங்களின் அரசாட்சியோ, இந்தச் செய்திக்கு ஈடாகாது” என்று கூறினாள்.

………………………………………………………………..

தொடரும்… 🌸

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here