மண்டோதரியின் துயரம்!

🌸
🌸..பாகம்-144🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-36,
……………………………………………………..
மண்டோதரியின் துயரம்!

………………………………………………………………
தன்னுடைய மூத்த சகோதரனாகிய ராவணன் கொல்லப் பட்டு யுத்த களத்தில் விழுந்து கிடந்த காட்சியைக் கண்டவுடன், விபீஷணன் அளவு கடந்த துக்கத்தால் பீடிக்கப் பட்டவனாக, கதறத் தொடங்கினான். பெரும் புகழ் படைத்த வீரனே! ராஜ நீதியை முற்றும் அறிந்தவனே! மிகவும் மேன்மையான படுக்கையின் மீது உறங்க வேண்டிய நீ, ஏன் இப்படி த் தரையில் வீழ்ந்து கிடக்கிறாய்? காமத்தினால் கவரப் பட்டவனாக, என்னுடைய வார்த்தையைக் கேட்காமல், இந்த கதியை அடைந்து விட்டாயே! நான் சொன்னது தான் நன்மை பயக்கும் என்பதை ப்ரஹஸ்தனோ, இந்திரஜித்தோ, கும்ப கர்ணனோ, அதிகாயனோ, நீயோ- யாருமே உணராமல் போய் விட்டீர்களே!

இவ்வாறு கூறி அழுத விபீஷணன், மேலும் சொன்னான், இந்த வீரன் கீழே விழுந்து கிடப்பதால்- ஆயுதம் ஏந்தியவர்களில் சிறந்தவன் எவனோ, அவன் வீழ்ந்து விட்டான் என்றே ஆகிறது. முறை அறிந்து நடப்பவர்களில் முதன்மையானவன் மறைந்து விட்டான். தர்மமே உருவானவன் மறைந்து விட்டான்.

பலத்தின் இருப்பிடமானவன் மறைந்து விட்டான். தர்மமே உருவானவன் மறைந்து விட்டான். பலத்தின் இருப்பிடமானவன் மறைந்து விட்டான். சிறந்த வீரர்களால் நாடப் பட்டவன் மறைந்து விட்டான். சூரியன் பூமியில் வீழ்ந்து விட்டது. சந்திரன் இருளில் கலந்து விட்டது. தீ மங்கியது. சக்தி ஒடுங்கியது. ராவணனே மறைந்து விட்டதால், இலங்கை மக்கள் பெற்ற சிறப்பே அழிந்து விட்டது.

மன உறுதியை தனது இலைகளாகவும், பிடிவாதத்தைத் தனது மலராகவும், தவத்தினால் கிடைத்த பயனை தனது பலமாகவும், வீரத்தை தனது வேராகவும் கொண்ட ராவணன் என்கிற மரம்- ராமன் என்கிற புயலில் சிக்கி யுத்த களத்தில் வீழ்ந்து விட்டது.

மண்டோதரியின் துயரம்!

மண்டோதரியின் துயரம்!

விடா முயற்சியைத் தனது தந்தமாகவும், பெருமை வாய்ந்த முன்னோர்கள் தோன்றிய பரம்பரையைத் தனது முதுகெலும்பாகவும், கோபத்தைத் தனது கால்களாகவும், கண்டோர் வியக்கும் கவர்ச்சியைத் தனது துதிக்கையாகவும் கொண்ட ராவணன் என்கிற மதம் கொண்ட யானை- ராமன் என்கிற சிங்கத்தினால் வீழ்த்தப் பட்டு விட்டது.

பராக்கிரமத்தையும், ஆர்வத்தையும் தனது ஜ்வாலையாகவும் , பெரு மூச்சைத் தனது புகையாகவும், உடன் பிறந்த பலத்தைத் தன்னிடமிருந்து வீசுகிற அனலாகவும், கொண்டு திகழ்ந்த ராவணன் என்கிற பெரும் தீ- ராமன் என்கிற பெரு மழையினால் யுத்த களத்தில் அணைக்கப் பட்டது.

தன்னைச் சார்ந்த அரக்கர்களை, தனது வால் மற்றும் கொம்புகளாகவும், தனது காம வேட்கையை காதுகள் மற்றும் கண்களாகவும் கொண்ட ராவணன் என்கிற, காற்றுக்கு நிகரான சக்தி படைத்த காளை- ராமன் என்கிற புலியினால் வீழ்த்தப் பட்டது.

பெரும் துக்கத்தில் ஆழ்ந்து விட்டவனும், சரியான காரணங்களோடு கூடிய வார்த்தைகளைப்பேசியவனுமாகிய விபீஷணனைப் பார்த்து, ராமர் பேசத் தொடங்கினார்.

சக்தியற்றுப்போனதால் உயிர் இழந்தவன் அல்ல ராவணன், பெரும் வல்லமை படைத்தவனாக இருந்தாலும், எடுத்த காரியத்தில் ஆர்வம் குன்றாதவனாக இருந்தாலும், மன உறுதி தளராதவனாக இருந்தாலும், ராவணன் வீழ்ந்தான் என்றால், அது உலக நன்மைக்காகவே,யுத்த களத்தில் முனைப்புடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது உயிரை இழக்கிற க்ஷத்ரியர்களின் பிரிவு, வருத்தத்துக்குரியது அல்ல.

மண்டோதரியின் துயரம்!

மண்டோதரியின் துயரம்!

மூன்று உலகங்களையும், தேவர்களின் அதிபதியான இந்திரனையும், அச்சுறுத்தும் வகையில் திகழ்ந்த ராவணனைக் குறித்து துக்கிப்பது தகாது. எப்போதுமே வெற்றியை மட்டுமே கண்டவர் எவருமில்லை. தவிர, யுத்த களத்தில் ஒரு வீரன் கொல்கிறான், அல்லது கொல்லப் படுகிறான்.

யுத்தம் புரிகையில் மடிகிற வீரனுக்காக,துக்கம் கொண்டாடக் கூடாது என்று சாத்திரங்கள் கூறுகின்றன.ஆகையால், விபீஷணா! துக்கத்தை விடுவித்து, அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவாயாக!

இவ்வாறு ராமர் ஆறுதல் கூறிய பிறகு, விபீஷணன், தேவர்கள் உட்பட எவராலும் வீழ்த்தப் படாத ராவணன், உங்களைப்போர்க் களத்தில் எதிர் கொண்டு வீழ்ந்து விட்டான்” என்று கூறி விட்டு, மேலும் தொடர்ந்தான். தன்னை நாடி வந்தவர்களுக்குப் பரிசளித்து, தன்னை ச் சார்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, தன்னுடைய நண்பர்களுக்கு ஆதரவளித்து,எதிரிகள் மீது பழி தீர்த்து வாழ்ந்தவன் ராவணன்.

என்றும் அணையாத யாகத் தீயை வளர்த்து, கடுமையான விரதங்களைக் கடைப் பிடித்து, வேதங்களை முழுமையாகக் கற்றுணர்ந்த, யாக விதி முறைகளையும் நன்றாக அறிந்து திகழ்ந்தவன் ராவணன். உங்கள் ஆசியுடன், என்னுடைய மூத்த சகோதரனாகிய அவனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய நான் விரும்புகிறேன்.

ராமர், ” மரணத்தோடு விரோதங்கள் மறைந்து விடுகின்றன. நமது காரியம் நிறைவேறியது. ராவணனுக்கு நடத்தப் பட வேண்டிய இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தப் படட்டும். உன்னவனாகிய அவன், என்னவனுமாகிறான்” என்று கூறினார்.

( தன்சொல்லைக்கேளாமல் ராவணன் தீய வழியிலேயே சென்ற போது, விபீஷணன் அதைக் கண்டித்துப்பேச, ராவணன் அவனை அவமதிக்க,விபீஷணன் ராவணனிடமிருந்து அகன்று, ராமரைசென்று அடைகிறான்.

மண்டோதரியின் துயரம்!

மண்டோதரியின் துயரம்!

யுத்தத்தில் அரக்கர்களை வெல்லும் உபாயங்களை ராமருக்கு அவன் எடுத்துரைக்கிறான். குறிப்பாக, இந்திரஜித்தை வெல்வதற்கு லக்ஷ்மணனுக்கு விபீஷணன் பெரிதும் உதவுகிறான். இப்படியெல்லாம் செயல்பட்டு, ராவணனின் அழிவுக்கு வழிதேடிய விபீஷணன், இந்த கட்டத்தில் ராவணனின் பெருமைகளைப்பேசி கதறி அழுகிறான்.

தன்னுடைய மூத்த சகோதரனின் மரணம், விபீஷணனின் மனதை இளகச் செய்திருக்கலாம்- என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். விபீஷணன், ராவணனை தர்மமே உருவெடுத்தவன்” என்று வர்ணிக்கும் அளவுக்குப்போகிறான். வால்மீகியோ, விபீஷணன் பேசிய பிறகு, ” சரியான காரணங்களோடு கூடிய வார்த்தைகளை” அவன் பேசியதாகக் குறிப்பிடுகிறார்.

விபீஷணனின் பேச்சு வெறும் புலம்பலாக வர்ணிக்கப் படவில்லை. பெண்களிடத்தில் ராவணன் நடந்து கொண்ட முறை, மிக மிகக்கேவலமானது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், அவனிடம் பாராட்டக் கூடிய அம்சங்களும் இருந்தன என்பதைத்தான் விபீஷணனின் பேச்சும், அது பற்றிய வால்மீகியின் கருத்தும் நமக்குக் காட்டுகிறது.

விபீஷணனின் நடத்தையில் முரண்பாடு இருக்கத் தான் செய்கிறது. அது இதோடு முடியவில்லை. ராவணனின் இறுதிச் சடங்குகள் விஷயத்தில் அந்த முரண்பாடு மீண்டும் தலை யெடுக்கிறது. அந்தக் கட்டத்தில் அதைப் பற்றிப் பார்ப்போம்)

இதற்கிடையில் ராவணனுடைய மனைவி மார்களாகிய பல அரக்கிகள், ராவணனின் உடலைக் காண ஓடி வந்தன. பெரும் சோகத்தினால் பீடிக்கப் பட்ட அவர்களுடைய தலைமுடி கலைந்து கிடந்தது. கன்றை இழந்த பசுக்கள்போல் கதறியஅவர்கள், ராவணனின் உடல் மீது விழுந்து அழுதார்கள். சிலர் மயக்க மடைந்தனர். சிலர் தரையில் விழுந்து புரண்டனர்.

சிலர் ராவணனின் தலையை தங்கள் மடி மீது எடுத்து வைத்துக் கொண்டு கதறினர். உங்களுடைய அழிவுக்காகவே நீங்கள் ஸீதையைக் கொண்டு வந்தீர்கள். விபீஷணனின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருந்தால், ராமர் நமக்கு நண்பராகியிருப்பார். நாங்கள் விதவைகளாகி இருக்க மாட்டோம். நீங்களோ ஸீதையை விடுவிக்க மறுத்தீர்கள். அரக்கர்கள், எங்களைப்போன்ற அரக்க பெண்மணிகள், நீங்கள்- ஆகிய மூன்று வகையினருமே உங்களுடைய பிடிவாதத்தினால் அழிவுற்றோம்.

ஆனால், உங்கள் மனம் போனபடி நீங்கள் நடந்து கொண்டது மட்டும் உங்கள் அழிவுக்குக் காரணமாகி விடாது. எல்லோரையுமே இயக்குவது விதி தானே! எவனுக்கு விதி முடிவை நிர்ணயிக்கிறதோ, அவனே உயிரை விடுகிறான். அரக்கர்களின் அழிவும். உங்கள் முடிவும் விதியினால் நிச்சயிக்கப் பட்டவையே. செல்வத்தினாலோ, ஆசை காட்டியோ, வீரத்தினாலோ , அரச உத்திரவினாலோ விதியின் முடிவை மாற்றி எழுத முடியாது. ஆகையினால் தான், இந்திரன், எமன் போன்றவர்களைக் கூட வென்ற உங்களுக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது தேவர்களாலும், வெல்லப் படாத நீங்கள், ஒரு மனிதனால் கொல்லப் பட்டீர்கள்!

இப்படிப் பல அரக்கிகள், புலம்பிக் கொண்டிருந்த போது, ராவணனையே பார்த்து சிலை போலாகி விட்ட ராவணனின் மூத்த, மனைவியாகிய மண்டோதரி, தன்னுடைய அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு,பேசத் தொடங்கினாள். நீங்கள் கோபமுற்றால், உங்கள் முன் நிற்க இந்திரனும் அஞ்சி நடுங்குவான்” என்பது எல்லோரும் அறிந்த விஷயம். சிறப்பு வாய்ந்த மகரிஷிகளும், புகழ் பெற்ற கந்தர்வர்களும், உங்களை நினைத்து பயந்து, நாற் திசையிலும் ஓடுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அப்படிப் பட்ட நீங்கள் இப்பொழுது ஒரு மனிதனால் வெல்லப் பட்டு, தரையின் மீது கூச்சமில்லாமல் விழுந்து கிடப்பது எப்படி? மூவுலகங்களையும்வென்ற உங்களை வீழ்த்த, காட்டிலே திரிந்து அலைந்து கொண்டிருந்த ஒரு சாதாரண மானிடனால் எப்படி முடிந்தது? மனிதர்களால் அடைய முடியாதகோட்டையில், எவரும் நெருங்க முடியாத அரண்மனையில், நினைத்த மாத்திரத்தில் எந்த உருவத்தையும் எடுக்கும் வல்லமையோடு வாழ்ந்து கொண்டிருந்த நீங்கள், யுத்தத்தில் ராமனால் கொல்லப் பட்டீர்கள் என்பது காரண காரியங்களுக்கு உட்பட்ட விஷயமாக இல்லையே! எல்லா வித ஆயுதங்களையும் கொண்டிருந்தஉங்களை ராமன் வென்றான் என்றால்- அது அவனுடைய சாதனை அல்ல.

காலனே ராமன் உருவத்தில் வந்திருப்பானோ? அல்லது ஒரு வேளை, யுத்த களத்திற்கு வந்தது இந்திரனோ? ஆனால் அவனுக்கோ உங்களை ஏறிட்டுப் பார்க்கும் தைரியமும் கிடையாதே?
புரிகிறது, சாஸ்வதமானவனும், மூவுலகங்களையும் ஆள்பவனும், யோகிகளில் முதன்மையானவனும்.

ஆரம்பமோ இடையோ, முடிவோ இல்லாதவனும், மேன்மையானவர்களில் மேன்மையானவனும், அறியாமை எனும் இருளைக் கடந்தவனும், சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தியவனும், மார்பிலே ஸ்ரீவத்ஸம் கொண்டவனும், என்றும் இருப்பவனும் , எவராலும் அழிக்கப் பட முடியாதவனும், எல்லாமுமானவனான மஹா விஷ்ணு தான், வானர உருவில் வந்த தேவர்களோடு கூடி, எல்லா உலகங்களின் நன்மைக்காகவும்,, தேவர்களன் விரோதியாகிய உங்களை அழித்திருக்கிறார்.

இந்திரியங்களை அடக்கி, மனதை ஒருமுகப் படுத்தி, தவ வலிமை பெற்று, மூன்று உலகங்களையும் நீங்கள் முன்பு வென்றீர்கள். இன்றோ, அந்த இந்திரியங்களே உங்களை வென்று விட்டன. ஆசைக்கு இடம் கொடுத்து, அழிவைத்தேடிக் கொண்டீர்கள்.

 

முன்பு உங்களால் அடக்கப் பட்டதற்கு உங்களுடைய இந்திரியங்களே பழி வாங்கி விட்டன போலும்! எண்ணற்ற அரக்கர்களால் சூழப் பட்டும் கூட, கரன் எப்போது ராமனால் ஜனஸ்தானத்தில் கொல்லப் பட்டானோ, அப்போதே ராமன் சாதாரண மனிதன் அல்ல என்பது புரிந்து விட்டது.தேவர்களாலும் நுழைய முடியாத இலங்கையில் நுழைந்து பெரும் நாசத்தை ஹனுமான் புரிந்த போதே, நமக்கு வர இருக்கிற ஆபத்து புரிந்தது. ஆனால். நான் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. ராமனோ விரோதம் வேண்டாம் என்று நான் மன்றாடியும் நீங்கள் செவி சாய்க்கவில்லை.

 

உங்களுடைய ராஜ்யம் , உங்களுடைய மக்கள், உங்களுடைய உயிர்- ஆகியவற்றின் அழிவிற்காகவே ஸீதை மீது நீங்கள் ஆசை கொண்டீர்கள் போலும்! அருந்ததி, ரோகினி, ஆகியவர்களை விட மேம்பட்டவளும், மரியாதைக்குரியவளும், பொறுமையில் பூமிக்கே பாடம் கற்றுத் தரக் கூடியவளும், அருளில் மஹாலக்ஷ்மிக்கே வழி காட்டக் கூடியவளும், கணவன் மீது மாறாத அன்பு கொண்டவளுமாகிய ஸீதையை நீங்கள் அவமதித்தது பெரும் குற்றம்.

தனிமையிலிருந்த ஸீதையை கபடத்தின் மூலம் கவர்ந்தபோதே, உங்கள் அழிவையும், உங்களை சார்ந்தவர்கள் அழிவையும், நீங்கள் நிச்சயப் படுத்திக் கொண்டீர்கள். அவளை அடைய வேண்டும் என்ற உங்கள் ஆசை பாழாகியது.எப்போதும் கணவனையே நினைத்திருக்கும் அந்தப் பெண்ணின் தவவலிமை உங்களை அழித்து விட்டது.

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் உங்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதால், ஸீதையை நீங்கள் பற்றிய உடனேயே உங்களுக்கு அழிவு நேரிடாமல் போயிற்று. ஆனால் செய்த குற்றத்திற்கான விளைவை அனுபவிக்க வேண்டிய நேரம் வருகிற போது, தவறு செய்தவன் அதன் பயனை அனுபவித்தே தீருவான். இது பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை.

நல்லதைச் செய்பவன், மகி்ச்சியை அடைகிறான். தீயதைச் செய்பவன் துன்பத்தை எய்துகிறான். விபீஷணன் , மகிழ்ச்சி அடைந்திருக்கிறான். உங்கள் கதியோ நேர்மாறானதாக இருக்கிறது.
மண்டோதரியின் துயரம் தொடர்ந்தது.
……………………………………………………………

தொடரும்… 🌸

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here