வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸

– சோ
🌸..பாகம்-53🌸
…..
அத்தியாயம்-24

………………………………….

பரதன் சீறினான்

………………………………
பரதனிடம் அழைத்து வரப் பட்ட வசிஷ்டரின் தூதர்கள், குல குருவான வசிஷ்டர் உங்கள் நலம் விசாரிக்கிறார். அதே போல மந்திரி மார்களும் உங்கள் நலன் விரும்புகிறார்கள்.

உங்களால் உடனடியாகச் செய்யப் பட வேண்டிய காரியம் இருப்பதால், விரைவாகப் புறப் பட்டு அயோத்திக்கு வருமாறு நீங்கள் அழைக்கப் படுகிறீர்கள் என்ற செய்தியை த் தெரிவித்தார்கள்.

பரதன், எனது தந்தை மற்றும் ராமர், லக்ஷ்மணர் ஆகியோர் நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். கௌஸல்யை தேவியும், ஸுமித்திராதேவியும் நலமே என்று நம்புகிறேன்.

பிடிவாத குணமுடையவளும், எந்நேரமும் சண்டை போடுபவளும், தனக்கே அனைத்தும் தெரியும் என்ற எண்ணமுடையவளும், சுயநலவாதியுமாகிய எனது தாயார் கைகேயி தேவியும் நோயற்று இருக்கிறாரா? என்ன சொல்லி அனுப்பினார்? என்று அவர்களிடம் கேட்டான்.

அந்தத் தூதர்கள், ” எல்லோரும் நலமே” என்று கூற பரதன் தனது பாட்டனார் கேகய மன்னரிடம் விடை பெற்று, அயோத்திக்குப் புறப் பட்டான். தசரத மன்னரைப் பற்றியும், வசிஷ்டர் முதலானோரைப் பற்றியும், ராமர், லக்ஷ்மணன், ஸீதை ஆகியோரைப் பற்றியும் தான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லுமாறு கேகய மன்னர், பரதனிடம் கூறி, பெரும் செல்வத்தை பரிசாக அளித்து பரதனை அனுப்பி வைத்தார்.

சில நதிகள் பல கிராமங்கள், பல நந்தவனங்கள், ஆகியவற்றையெல்லாம் கடந்து அயோத்தி நகரத்து எல்லையை அடைந்த பரதனுடைய மனம் கலக்கமுற்றது. மக்கள் உற்சாகமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் அவனுடைய கண்ணில் படவில்லை. நகரமே களை இழந்து காணப் பட்டது.

நாடு காடாகி விட்டது போல் உணர்ந்த பரதன், தனது தேரோட்டியைப் பார்த்து, நமது ராஜ்யத்தில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்ற சந்துகம் எனக்கு வருகிறது. நான் எதற்காக உடனடியாக வரவழைக்கப் பட்டேன் என்பது பற்றியும், என் மனம் இப்பொழுது சந்தேக முறுகிறது” என்று கூறியவாறே, நகரத்தினுள் நுழைந்தான்.

முதலில் தந்தையைக் காண வேண்டும் என்பதற்காக தனது தாயாரான கைகேயியின் மாளிகையை பரதன் அடைந்தான். கைகேயி அவனை எதிர் கொண்டு அழைத்தாள்.

தனது கால்களில் விழுந்து வணங்கிய மகனைப் பார்த்து அவள், உனது பாட்டனாரின் நகரத்திலிருந்து புறப் பட்ட உனக்கு, இங்கு வந்து சேர எவ்வளவு தினங்கள் ஆயின? உனது பாட்டனார் நலமாக இருக்கிறாரா? உனது மாமனாகிய யுதாஜித் நலம் தானே? எல்லா வற்றையும் எனக்கு விவரமாகச் சொல்” என்று கேட்டாள்.

வால்மீகி ராமாயணம்

பரதன், ” எனது பாட்டனாரின் நகரத்திலிருந்து புறப் பட்டு இன்று ஏழாவது நாள், அவரும் யுதாஜித்தும் நலமாக இருக்கிறார்கள். பல பரிசுகளைக் கொடுத்து அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள்.

இங்கிருந்து வந்த தூதர்கள் என்னை உடனடியாகப் புறப் பட்டு வரச் சொன்னதற்கு என்ன காரணம்? இங்கே தந்தையைக் காணவில்லையே? இந்த நேரத்தில் வழக்கமாக இந்த மாளிகையில் தானே இருப்பார்ஃ முதலில் அவர் காலில் விழுந்து வணங்க விரும்புகிறேன். அவர் எங்கே? என்று கேட்டான்.

ராஜ்யத்தின் மீது கொண்டு விட்ட பேராசை காரணமாக, தான் சொல்லப்போகிற கொடிய செய்தியைக் கூட நல்ல செய்தி போலவே நினைத்துக் கொண்டு, பரதனுக்கு கைகேயி பதிலுரைத்தாள்.

பல யாகங்களைச் செய்தவரும், நல்லவர்களுக்கெல்லாம் அடைக்கலம் தருபவரும்,மகாத்மாவுமாகிய உன்னுடைய தந்தை தசரத மன்னர்- எல்லா உயிர்களுக்கும் என்ன முடிவு ஏற்படுமோ அந்த முடிவை அடைந்தார்.

கைகேயி கூறிய இந்த வார்த்தைகளைக்கேட்ட பரதன் அதிர்ச்சி அடைந்து, ஆ! நான் கெட்டேன்” என்று கதறி, பலவாறாகப் புலம்பினான். அதன் பின்னர், தாயே! மன்னர் என்ன வியாதியின் காரணமாக இறந்தார? அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த ராமர் முதலானோர் கொடுத்து வைத்தவர்கள்.

தாய்க்கு நிகரான வரும், தந்தைக்குச் சமமானவருமாகிய என்னுடைய மூத்த சகோதரர் ராமரை நான் காண விரும்புகிறேன். நான் வந்திருக்கும் செய்தியை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். தர்மத்தை அறிந்தவனுக்கு மூத்த சகோதரனே தந்தையாகிறான்.

இனி அவர் தான் எனக்கு கதி” என்று கூறிய பரதன், மேலும் பலவாறாகப்பேசி விட்டு, தசரத மன்னர் இறுதியாக என்ன கூறினார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்று சொன்னான்.

கைகேயி, ”ஹா, ராமா! ஸீதா! லக்ஷ்மணா! என்று புலம்பிக் கொண்டே உன் தந்தை உயிரை விட்டார். எந்த மனிதர்கள் புண்ணியம் செய்தவர்களோ, அவர்கள் தான் ஸீதையுடனும், லக்ஷ்மணனுடனும் ராமன் மீண்டும் அயோத்திக்கு வந்து சேருகிற காட்சியைக் காண்பார்கள்” என்றும் மன்னர் சொன்னார்” என்று பரதனுக்கு பதில் கூறினாள்.

வால்மீகி ராமாயணம்

துக்ககரமான இரண்டாவது செய்தியும் ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து, மேலும் கலக்கமுற்ற பரதன், வாட்டமுற்ற முகத்தோடு, ராமர் லக்ஷ்மணர், ஸீதா தேவி ஆகியோர் எங்கிருக்கிறார்கள், என்று கேட்டான். மகிழ்ச்சி தரப் போகிற நிகழ்ச்சியை விவரிக்கிறவள் போல கைகேயி, நடந்த துக்ககரமான செய்தியைக் கூறினாள்.

லக்ஷ்மணன் பின் தொடர ஸீதையுடன், ராமன் மரவுரி அணிந்து காட்டுக்குச் சென்றான்.

கைகேயி கூறிய செய்தியைக்கேட்டு பரதனின் உள்ளம் நடுக்க முற்றது. என்ன தவறு நடந்ததோ, என்று நினைத்துப் பதறினாள். வேதம் அறிந்த அந்தணர்களின் பொருட்கள் ராமரால் அபகரிக்கப் படவில்லை என்று நம்புகிறேன். பணக்காரனோ, ஏழையோ- எந்த ஒரு மனிதனும் ராமரால் துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.

பிறன் மனைவியை மனதாலும் ராமர் கருத மாட்டார் என்றும் தெரியும். இது இவ்வாறெனில் எந்தக் காரணத்தினால் ராமர் காட்டுக்கு அனுப்பப் பட்டார்? என்று அவன் பதற்றத்துடன் கேட்டான்.

பெண்களுக்கே உரிய குணங்களினால் தூண்டப் பட்ட கைகேயி விளைவைக் கருதாமல் தான் செய்த காரியத்தை அப்படியே எடுத்துரைத்தாள். எவருடைய பொருளையும் ராமன் அபகரிக்கவில்லை. ஒரு பணக்காரனோ, ஏழையோ அவனால் துன்பத்திற்கு ஆளாகவில்லை.

பிறர் மனைவியை ராமன் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க இருக்கிறது என்ற செய்தி கேட்ட நான், உனக்கு அரசு உரிமையையும், ராமனுக்கு வனவாசத்தையும் மன்னரிடம் கோரினேன். ஏற்கெனவே எனக்கு வாக்களித்திருந்ததன் காரணமாக மன்னர் இணங்கினார்.

ராமன், லக்ஷ்மணனுடனும், ஸீதையுடனும் காடு சென்றான். தனது அன்புக்குரிய மகனைக் காணாதவராக, புத்திர சோகத்தினால் பீடிக்கப் பட்ட உன் தந்தை மரணமடைந்தார்.

கைகேயி மேலும் தொடர்ந்தாள். தர்மம் அறிந்தவனே! நீ துயர்படக் கூடாது . தவறு நடந்து விட்டதாக நினைத்து வருந்தவும் கூடாது. மனோதைரியத்தை மேற் கொள்வாயாக! இந்த நாடு உனதாயிற்று.

ராஜ்யத்தின் அதிகாரம் உன் வசமானது. உனக்காகவே இதையெல்லாம் நான் செய்து முடித்திருக்கிறேன். தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு, பிறவியிலேயே நீ பெற்றுள்ள துணிவைத் துணையாகக் கொண்டு, பட்டாபிஷேகம் செய்து கொண்டு, பூமியே ஆள்வாயாக! என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறினாள்.

செய்வதறியாமல் நின்ற பரதன் நினைவிழந்தான். பின்னர் பெரும் கோபத்துடன் பேசத் தொடங்கினான். உலகமே அழிந்தது! இந்த ராஜ்யத்தை அனுபவிப்பதற்காக, மன்னரைப் பிணமாக்கினாய். ராமரைக் காட்டுவாசியாக்கினாய்.

கணவனைக் கொன்ற உன் வயிற்றில் பத்து மாதங்களைக் கழித்தவன் என்பதால், நான் உலகத்தின் நிந்தனைக்குரியயவனாகிறேன்.

கெட்டவளே! உனக்கு நான் செய்த தீமை என்ன? எனக்கு ஏன் இந்த நிலையைக் கொடுத்திருக்கிறாய்? தந்தையை இழந்து விட்டு, தந்தைக்குச் சமமான அண்ணனையும் துறந்து விட்ட எனக்கு, இந்த ராஜ்யத்தால் ஆவதென்ன? இறுதி அழிவை ஏற்படுத்தும் பிரளய காலம் போல, இந்தக் குலத்திற்கு நீ வந்து சேர்ந்தாய்!என்னதென்று தெரியாமல் நெருப்பை அணைத்துக் கொள்வது போல், மன்னர் உன்னை ஏற்றுவிட்டார்.

வால்மீகி ராமாயணம்

பாவியே! இக்ஷ்வாகு குலத்தின்மேன்மையை அழிக்க வந்த கெடுமதியாளே! தர்மம் தவறாத எனது தந்தை, ராமரைத் துறக்க எப்படி சம்மதித்தார்? அவருக்குஏற்பட்ட நிர்பந்தம் என்ன? கௌஸல்யை தேவியாரும், ஸுமித்திரை தேவியாரும், உன்னைக் கண் எதிரில் பார்த்த பிறகும் உயிர் வாழ்கிறார்கள் என்றால், அது ஓர் அதிசயமே! அந்த நல்ல பெண்மணிகளுக்கு எப்பேர்ப்பட்ட தீங்கைச் செய்து விட்டாய்? கௌஸல்யை தேவி உன்னை சகோதரி போல் நடத்தினார்.

ராமரோ உன்னைத் தாயாகவே நினைத்தார். அவரைக் காட்டுக்கு அனுப்பி விட்டு, நீ மகிழ்ச்சியாக இருப்பது மிகப் பெரிய விபரீதம்.

ராமருக்கு என் மனதில் இருக்கும் இடத்தை நீ அறியவில்லை. அதனால் தான் இந்த வினையை நீ செய்திருக்கிறாய். மிகப் பெரியோர்களால் நிர்வகிக்கப் பட்ட பொறுப்பை ஏற்க நான் யார்? அப்படியே பலவித உபாயங்களினாலும், அறிவின் உதவியினாலும் நாட்டை நிர்வகிக்கிற திறன் எனக்கு ஏற்படும் என்றால் கூட, நான் அதை ஏற்க மாட்டேன்.

அதை ஏற்று உன் எண்ணத்தை நிறைவேற்ற மாட்டேன். முன்னோர்களின் ராஜ்யம் மூத்தவனுக்கே உரிமை என்பது உலக வழக்கு. குறிப்பாக, இக்ஷ்வாகு குலத்தில் இவ் வழக்கம் மாறுபடுவதில்லை. ஈவு இரக்கமற்ற பெண்மணியே! இந்த ராஜ மரபைக் கூட நீ மதிக்கவில்லை.

உனது முன்னோர்களும் கூட புண்ணியவான்கள் தானே! அப்படி இருக்க இந்தப் பேராசை உன் மனதில் எப்படி உண்டாயிற்று? நான் ராமரை மீண்டும் அழைத்து வருவேன். அவரை சிம்மாசனத்தில் அமர்த்தி நான் அவருக்குத் தொண்டு புரிவேன். குலத்தைக் கெடுத்த உன்னை மன்னர் மணந்ததால், கௌஸல்யை தேவியும், ஸுமித்திரா தேவியும் இன்று துக்கத்தினால் துடிக்கிறார்கள். கேகய மன்னன் அச்வபதியின் மகள் அல்ல நீ. எப்படியோ அக்குலத்தில் பிறந்து விட்ட அரக்கி நீ.

கன்றைப் பிரிந்த பசுவும் கூட துடிக்குமே? அப்படியிருக்க, ராமரைப் பிரிந்த கௌஸல்யை தேவியார் இனி எப்படி உயிரோடு இருப்பார்? அவருக்கு இந்தக் கொடிய நிலையை உண்டாக்கிய நீ, இறந்தாலும் கூட துக்கத்தை அனுபவிப்பாய்.

எனக்கு பெரும் அவப் பெயரை உண்டாக்கி விட்ட உன்னுடைய திட்டம் நிறைவேறுவதற்கு நான் உதவ மாட்டேன். நான் காட்டுக்குப்போக ப்போகிறேன். ராமர் மீண்டும் அயோத்தி திரும்பி சிம்மாசனத்தில் அமர்ந்தால் தான் எனது பாவம் ஒழியும்.

தீய ஒழக்கம் உடையவளே! நீ இந்த ராஜ்யத்தை விட்டு ஓடி, காட்டுக்குப் போ. நெருப்பில் விழு. விஷத்தை அருந்து. அல்லது கழுத்தில் சுருக்கி ட்டு வாழ்வை முடித்துக் கொள். உனக்கு வேறு கதியில்லை. நீ பாழ் நரகத்தைத் தான் அடைவாய். அதிலும் சந்தேகமில்லை.

இவ்வாறு பொரிந்து தள்ளிவிட்டு, பாம்பு போல் சீறிக் கொண்டே பரதன் தரையில் வீழ்ந்தான். பின்னர் அங்கே வந்த மந்திரி மார்கள் முன்னிலையில் பரதன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

இந்த ராஜ்யத்தை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை . ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க மன்னர் எடுத்த முடிவு பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. எனது தாயாரிடத்தில் அது பற்றி நான் எப்போதும் எதுவும் பேசவுமில்லை.

நான் தான் சத்ருக்னனுடன் கேகய நாட்டில் இருந்தேனே! ராமரும், லக்ஷ்மணரும், ஸீதையும் நாடு கடத்தப் பட்டு வனவாசம் தொடங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போது தான் தெரியும்.

இவ்வாறு பரதன் பேசிக் கொண்டிருந்த போது, அவனுடைய குரல் கௌஸல்யைக்குக்கேட்டது. அவள் ஸுமித்திரையிடம், தீய காரியம் செய்கிற கைகேயியின் மகன் பரதன் வந்திருக்கிறான்” என்று கூறிவிட்டு, நடுங்கிக் கொண்டிருக்கிற தனது உடலைத் தாங்கிக் கொண்ட, பரதனைப் பார்க்கப் புறப் பட்டாள்.

அதே நேரத்தில் பரதன் சத்ருக்னனுடன், கௌஸல்யை தேவியைச் சந்திப்பதற்காகப் புறப் பட்டான். நடுவழியில் கௌஸல்யையைச் சந்தித்து வணங்கிய அவர்களை, அவள் அணைத்துக் கொண்டாள்.

மனவேதனையைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கௌஸல்யை அப்போது பரதனைப் பார்த்து கடுமையான வார்த்தைகளைக் கூறினாள். ” கொடிய எண்ணமுடைய கைகேயி, என் மகனை காட்டுக்கு அனுப்பியதில் என்ன மேன்மையைக் காண்கிறாய்?

அவன் இருக்கும் இடத்திற்கு என்னையும் இப்போதே அவள் அனுப்பி விடுவது நல்லது. இல்லாவிட்டால் நானும், ஸுமித்திரையும் புறப் பட்டு அங்கே போய்ச்சேருகிறோம். அல்லது நீயே இப்பொழுது அங்கே எங்களைக் கொண்டு போய் விட்டு விடு! கைகேயினால் தானே எல்லா சிறப்புகளும் நிறைந்த இந்த ராஜ்யம் உனக்குக் கிட்டியிருக்கிறது!

நாட்டை ஆளும் உரிமை பெறுவதில் விருப்பம் கொண்டு விட்ட உனக்கு ஒரு வித இடையூறுயில்லாமல், கைகேயியின் கொடிய காரியத்தால் ராஜ்யம் கிட்டிவிட்டது,. இனி என்ன?

புண்ணில் ஊசி கொண்டு குத்துவது போல், கௌஸல்யை கூறிய கொடூரமான வார்த்தைகளால் பெரிதும் துன்புற்ற பரதன், அவள் காலில் விழுந்து வணங்கி விட்டு இரு கைகளையும் கூப்பியபடி பேசத் தொடங்கினான்.
……………………………………………..
…………………….

தொடரும்… 🌸

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here