வால்மீகி ராமாயணம்

🌸 வால்மீகி ராமாயணம்

🌸

– சோ
🌸..பாகம்-43🌸
…..
அத்தியாயம்-14
……………………….
மூவரும் செல்ல முடிவு

…………………….
தந்தை , தாய், சகோதரன், மகன், மருமகள்– ஆகியோர் தங்கள் தங்கள் முன்வினைக்கேற்ப, நன்மை, தீமைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், மனைவி மட்டுமே, தன் கணவனைச் சார்ந்து நின்று, அவனுடைய இன்ப, துன்பங்களையே பகிர்ந்து கொள்கிறாள்.

ஆகையினால் உங்களுக்குஇப்பொழுது ஏற்பட்டிருக்கும் வனவாசத்தை நானும் அனுபவிக்க வேண்டியவளாகிறேன். தந்தை, மகன், தாய் தோழிகள், யாருமே ஒரு பெண்ணுக்கு அடைக்கலமாக மாட்டார்கள். கணவன் ஒருவனே எல்லா காலத்திலும் அவளுக்கு அடைக்கலம்.

வால்மீகி ராமாயணம்

இவ்வாறு ராமரை ப் பார்த்துக் கூறிய ஸீதை மேலும் சொன்னாள். அரண்மனை வாசத்தை விடவும், தெய்வீக ரதங்களில் செல்வதை விடவும், சொர்க்கத்தில் வசிப்பதை விடவும், தன் கணவனின் காலடியில் கிடைக்கும் பாதுகாப்பே ஒரு பெண்ணுக்கு மேலானது.

உங்களிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் பெற்றோர்கள் எனக்குப் பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், இப்போது நீங்கள் அதைச் சொல்ல வேண்டாம். உங்களோடு நான் காட்டுக்குவருகிறேன்.

மூவுலக மாட்சிமையை விட, கணவனுக்குப் பணிவிடை செய்து நிற்பதே ஒரு பெண்ணுக்கு மேலான தர்மம் என்பதை உணர்ந்து, என் பிறந்த வீட்டில் வசிப்பதுபோல் உங்களோடு நான் காட்டில் வசிப்பேன்.

காட்டில் உங்களை நாடி எத்தனை மனிதர்கள் வந்தாலும். அவர்களுக்கு எல்லாம் ஆதரவு அளிக்கும் வல்லமை படைத்த உங்களுக்கு என்னைக் காப்பாற்றுவது ஒரு பொருட்டல்ல.

வால்மீகி ராமாயணம்

வால்மீகி ராமாயணம்

கனி, கிழங்குகளை உண்டு வாழ்வதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை. மலைகளையும், குளங்களையும், ஏரிகளையும் மற்ற இயற்கைக் காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை உங்களோடு காட்டுக்குச் செல்வதனால் எனக்கு நிறைவேறப்போகிறது.

உங்களை விட்டு, தனியாக சொர்க்கத்தில் வாழ்வதை விட, உங்களோடு காட்டிலே வாழ்வது தான் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். காட்டில் உங்களுக்கு நான் ஒரு சுமையாக இருக்க மாட்டேன். என் வேண்டுகோளை ஏற்று என்னையும் அழைத்துச் செல்லுங்கள். உங்களைவிட்டுப் பிரிந்தால், நான் உயிர் வாழ மாட்டேன்.

வால்மீகி ராமாயணம்

கண்களிலே கண்ணீர் ததும்பஇப்படிப்பேசிய ஸீதையைப் பார்த்து, அவள் மனதை மாற்றும் வகையில் ராமர் பேசத் தொடங்கினார். நீ உயர் குலத்தில் பிறந்தவள், மேன்மையான குணங்களை உடையவள், நான் சொல்வதைக்கேள்! காட்டிலே வாழ்வது என்பது பெரும் துன்பங்களை ஏற்படுத்தக் கூடியது.

ஆகையால் அந்த எண்ணத்தை விட்டு விடு. உன்னுடைய நன்மைக்காகத் தான் நான் இதைச் சொல்கிறேன்- காட்டிலே இன்பம் இல்லை. மீள முடியாத துன்பம் தான் உண்டு. அங்கே குகைகளில் வாழும் சிங்கங்களின் கர்ஜனை மட்டுமல்ல, மலைச் சரிவுகளிலே ஓடும் நீரோடைகள் செய்யும் சப்தம் கூட, மனதைக் கலக்கும்.

வால்மீகி ராமாயணம்

வால்மீகி ராமாயணம்

வனவாசம் துக்கம் தரக் கூடியது! காட்டிலே சுதந்திரமாக ஓடித் திரியும் வன விலங்குகள், மனிதனைக் கண்டால் நொடியில்தாக்கி விடும்.

வனவாசம் துக்கம் தரக் கூடியது. முதலைகளால் நிரப்பப் பட்ட காட்டாறுகள் சுழல்கள் நிறைந்து, யாராலும் கடக்க முடியாமல் இருப்பவை. வன வாசம் துக்கம் தரக் கூடியது! பாதைகள் கரடு முரடானவை.

கொடிய முட்களும் புதர்களும் நிறைந்தவை.நெடுந்தூரத்திற்கு நீர் நிலைகளைப் பார்க்க முடியாமல் இவைகளை க் கடந்து செல்ல நேரிடும். வனவாசம் துக்கம் தரக் கூடியது.

பகல் எல்லாம் உணவிற்காக அலைந்து திரிந்து விட்டு, களைத்துப்போய் இரவில் ஓய்வெடுக்க நினைத்தால், மரங்களில் இருந்து தானாக விழுந்த இலைகள் மீது தான் படுக்க வேண்டும்.

வனவாசம் துக்கம் தரக் கூடியது. ஜடை முடி தரித்து மரவுரி அணிந்து, விரதங்களைக் காத்து, கீழே விழுந்த கனிகளை உண்டு, காட்டில் காலம் கழிக்க வேண்டி இருக்கும். வனவாசம் துக்கம் தரக் கூடியது.

வால்மீகி ராமாயணம்

கடுமையாக வீசும் காற்று, கொடிய விஷம் கொண்ட பாம்புகள், முட்புதர்கள் போன்றவை சேர்ந்து காடுகளை மனிதன் வசிக்கத் தகாத இடங்கள் ஆக்குகின்றன.

ஆகையால் வனவாசம் துக்கம் தரக் கூடியது! அஞ்சத் தகுந்தவற்றைப் பார்த்து க் கூட அச்சமுறாமல் வாழ வேண்டிய அந்த வாழ்க்கை உனக்கு உகந்தது அல்ல! ஆகையால் உன் எண்ணத்தை க் கை விடுவாயாக!
ராமர் பேசியதைக்கேட்டு , மனம் வெதும்பிய ஸீதை கண்ணீர் சொரிந்தவாறே பதிலுரைத்தாள்.

” காட்டு வாழ்க்கையில் இருப்பதாக நீங்கள் கூறிய ஆபத்துகள் எல்லாம், எனக்கு உங்கள் அன்பினால் கிடைக்கும் ஆசிகளே! வன விலங்குகள் உங்களைக் கண்டால் அஞ்சி ஓடி விடும்.

உங்கள் அருகில் நான் இருக்கும் போது, தேவர்களின் அதிபதியான இந்திரனால் கூட என்னை ஒன்றும் செய்ய முடியாது எனும்போது, வன விலங்குகள் எம்மாத்திரம்?
ஸீதை தொடர்ந்தாள்.

முன்பு என் தந்தையோடு நான் இருந்த காலத்தில் ஒரு முறை ஜோதிட நிபுணர்கள், காட்டு வாழ்க்கையை அனுபவிக்கும் நேரம் எனக்கு வரும் என்று கூறியிருக்கிறார்கள். அங்க லக்ஷணங்களை வைத்துக் கொண்டு அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளைக்கேட்டதிலிருந்து,காட்டு வாழ்க்கையைப் பற்றி என் மனதில் ஒரு ஆசையே தோன்றிவிட்டது.

இப்பொழுது அதற்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. வனவாசத்திலுள்ள சங்கடங்களை யெல்லாம் எடுத்துச் சொன்னீர்கள். திட மனமில்லாதவர்களுக்குத் தான் அம்மாதிரி சங்கடங்கள் ஏற்படும்.

பெற்றோர்களால் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டு, இவ்வுலகில் எந்த ஒரு மனிதனை ஒருபெண் மணக்கிறாளோ, அவனுக்கே அவள் மேலுலகிலும் மனைவியாகத் திகழ்வாள் என்று தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.

அப்படியிருக்க,என்னை உடன் அழைத்துச் செல்ல நீங்கள் மறுப்பது ஏன்? இவ்வளவு கூறியும் இறுதியில் நீங்கள் என்னைக் காட்டுக்கு அழைத்துச் செல்ல மறுத்தால், நீர் அல்லது நெருப்பு அல்லது கொடிய விஷம் மூலமாக நான் உயிரை விடுவேன்.

ஸீதை இப்படியெல்லாம் வாதிட்டாலும் கூட ராமர், அவளைக் காட்டுக்கு அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவிக்கவில்லை. ராமர் மீது மாறாத அன்பு கொண்ட ஸீதைக்குக்கோபம் ஏற்பட்டது. ராமரின் சம்மதத்தைப் பெற்று, விடுவதற்காக அவரைக் குத்திக் காட்டியே ஸீதை பேசத் தொடங்கினாள்.

வால்மீகி ராமாயணம்

வால்மீகி ராமாயணம்

உங்களை மருமகனாகஏற்ற என் தந்தை ஜனக மன்னர், நீங்கள் ஆண் வடிவத்தை ஏற்றுள்ள ஒரு பெண் – என்று அறியாமற் போய் விட்டாரோ! சூரியனைப்போல் ஒளி வீசித் திகழ்கின்ற ராமருக்கு தைரியம் என்பது துளியும் இல்லை- என்ற பொய்யான வதந்தி பரவி, அதை அயோத்தி மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்களோ? என்று அஞ்சுகிறேன்.

உங்களையே நம்பி இருக்கும் என்னைப் புறக் கணிக்கிற உங்களுக்கு என்ன காரணம் கொண்டு, அச்சம் ஏற்பட்டிருக்கிறது? குலத்திற்கே இழிவு தேடுகிற வகையில் நடந்து கொள்கிற பெண்போல, நான் நடந்து கொள்ள மாட்டேன்.

மனதாலும் வேறொருவனை நினைக்காத நான், உங்களை விட்டு இங்கே எப்படி வாழ்வேன்?கேளிக்கையின் மூலம் பிழைப்பு நடத்த விரும்புகிறவன்போல, என்னை மற்றவர்களிடம் விட்டுச் செல்ல நீங்கள் நினைப்பது என்ன நியாயம்? நான் இல்லாமல் நீங்கள் வனம் செல்லக் கூடாது.

வால்மீகி ராமாயணம்

உங்களோடு காட்டுப் பாதையில் நடப்பது எனக்கு அரண்மனையின் நந்தவனத்தில் நடப்பது போலத் தான், காட்டு வழியில் இருக்கும் புதர்களும், முட்களும் எனக்கு மென்மையான பஞ்சு களே. காட்டிலே வீசக் கூடிய புழுதிக் கா்றினால், என் மீது படரக் கூடிய மணி, எனக்கு சந்தனப் பொடியே.

அங்கே கிடக்கிற கிழங்காயினும் சரி, கனி ஆயினும் சரி, அது எனக்கு அமிர்தமே. உங்களோடு நான் பகிர்ந்து கொள்ளும் இருப்பிடம் எதுவாயினும் அது எனக்குச் சொர்க்கமே. இந்த என் வார்த்தைகளை மீறி நீங்கள் என்னை இங்கு விட்டுச் சென்றால், நான் விஷம் அருந்திச் சாவேன். உங்களால் கைவிடப் பட்ட பிறகு நான் வாழ்வதில் அர்த்தமில்லை.

இப்படிக் கூறிய ஸீதை, ” கோ” வென்று உரக்கக் கதறி அழுதாள். அதைக் கண்ட ராமர் அவளை வாரி அணைத்து, அவளுக்கு ஆறுதல் கூறினார். நீ இல்லாவிடில் எனக்கு சொர்க்கமும் கூட துன்பம் தருகிற இடமே.

எதை நினைத்தும் என் மனதில் அச்சமும் இல்லை. தன்னை உணர்ந்தவனால் எப்படி கருணையை விட்டு விட முடியாதோ, அதே போல, என்னால் உன்னைவிட்டு விட முடியாது. உன் மனதில் இருக்கும் எண்ணத்தை அறிந்து கொள்ளவே நான் பற்பல வார்த்தைகளைப்பேசினேன்.

வால்மீகி ராமாயணம்

என்னுடன் வந்தே தீர்வது என்ற உன்னுடைய மன உறுதியைப் புரிந்து கொண்டேன். நானோ தந்தையின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு நடக்கிறேன். கண் எதிரே தெரிகிற, நேரடியாகவே உத்திரவிடுகிற தாய், தந்தை, ஆச்சார்யன், ஆகியோரை திருப்தி செய்ய முடியாத மனிதனால், கண்ணுக்குத் தெரியாமல் எங்கிருந்தோ கட்டளையிடுகிற தெய்வத்தை எப்படி திருப்தி செய்ய முடியும்? நீயும் என்னோடு வந்து, விரதங்களை மேற்கொண்டு, வனத்தில் வாழ்வாயாக! எனது குலத்திற்கும், உனது குலத்திற்கும் பெருமை தருகிற முடிவை நீ எடுத்திருக்கிறாய்! அந்தணர்களுக்கும், யாசகர்களுக்கும், ஊழியர்களுக்கும், உன்னிடமுள்ள பொருட்களையெல்லாம் எடுத்து தர்மம் செய்வாயாக! உன்னை நம்பி இங்கு இருப்போர்க்கு உன்னுடைய ஆபரணங்கள், ஆடைகள், மற்ற செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விடுவாயாக! இது முடிந்த பின் நாம் விரைவில் புறப்படுவோம்.

ராமரின் பேச்சைக்கேட்டு பெரு மகிழ்வு கொண்ட ஸீதை தான தர்மங்களைச் செய்யத் தொடங்கினாள். இவர்கள் இருவரும் பேசியதைக்கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன் துக்கம் தாங்க முடியாமல் அழுதான். பின்னர் ராமரின் காலில் தலை வைத்து, வணங்கி உள்ளம் குமுறி அவன்பேசினான்.

காட்டுக்குச் செல்வது என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால், நான் உங்களோடு வந்து, உங்களுக்கு முன்பாக கையில் வில்லேந்தி நடந்து பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் இல்லாமல் எனக்கு மூவுலக ஆட்சி வேண்டாம்! சொர்க்கலோகம் வேண்டாம். தேவர்கள் அடையக் கூடிய நிலையும் வேண்டாம்.

ராமரோ லக்ஷ்மணன் சொல்லை ஏற்காமல் அவனைத் தடுக்க முனைந்தார். நற்குணம், வீரம், மன உறுதி, தர்மத்தின் பாதை தவறாத நடை- ஆகியவற்றை உடைய லக்ஷ்மணா! என்னிடம் மாறாத அன்பு செலுத்துகிற நீ, எனக்கு என் உயிரினும் மேலானவன்.

ஆனால் என்னோடு நீயும் காட்டுக்கு வந்து விட்டால், என் தாயார் கௌஸல்யையும், உனது தாயார் ஸுமத்திரையையும் யார் கவனித்துக் கொள்வார்கள்? ஜீவராசிகள் மீது கருணை கொண்டு மழை பொழிகிற வருண தேவன் போல, மக்களிடம் எல்லாம் கருணை பொழிகிற மன்னர், இன்று காமத்தினால் கட்டுண்டு இருக்கிறார்.

இந்த ராஜ்யத்தை அடையப் பெறுகிற கைகேயி தேவியார், நமது தாய் மார்களிடம் பரிவு காட்ட மாட்டார். அரசுரிமை பெறுகிற பரதன், தாயார் சொல்லுக்குக் கட்டுப் பட்டு, நமது தாய்மார்களிடம் பரிவு காட்டமாட்டான். நீ தான் இங்கே தங்கியிருந்து உனது முயற்சியினாலும், மன்னரின் கருணையினாலும் நமது தாய்மார்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

வால்மீகி ராமாயணம்

இப்படி அவர்களுக்குப் பணிவிடை செய்வதால் நீ என்னிடம் வைத்திருக்கும் அன்பு நிலை நாட்டப் படும். நீ மேன்மைகளும் பெறுவாய். ஆகையால் ஸுமத்திரையின் மகனே! என் பொருட்டு நீ இங்கே இருப்பாயாக!

சொல்வன்மை படைத்த லக்ஷ்மணன், ராமரை மறுத்து இனிமையான வார்த்தைகளைப்பேசினான். உங்களுடைய தர்மத்தின் ஒளி பரதனுக்கு வழி காட்டும். அவன் நமது தாய் மார்களிடம் மிகவும் பணிவோடு நடந்து கொள்வான். இது பற்றி எனக்கு ச்சந்தேகமில்லை.

அப்படி அல்லாமல், அரசுரிமையைப் பெற்ற ஆணவத்தின் காரணமாக மதியிழந்து பரதன் நமது தாய் மார்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றால், அவனை நான் ஒரு நொடியில் வதைப்பேன். அந்த நிலையில் கெட்ட எண்ணம் கொண்டு விட்ட அவனை மட்டுமல்ல, அவனைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, மூவுலகத்தினரும் அவனுக்கு ஆதரவாக வந்தால் அவர்களையும் கூட அழிப்பேன். இது நிச்சயம்.

எல்லா மேன்மைகளையும் பெற்ற கௌஸல்யை தேவியால் தன்னையும், எனது தாயார் ஸுமத்திரையையும் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை உடையவர். என்னை உங்கள் பணியாளாக உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

வால்மீகி ராமாயணம்

அது தர்மத்திற்கு விரோதமானது அல்ல.மண் வெட்டியையும் கூடையையும் சுமந்து உங்களுக்கு முன் சென்று நீங்கள் நடக்கும் பாதையை நான் செப்பனிடுவேன். கனி, கிழங்குகள், மற்றும் உண்ணத் தகுந்த பொருட்கள் ஆகியவற்றை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்.

தீ மூட்டி வேள்வி நடத்த, தேவையானவற்றையெல்லாம் உங்களிடம் கொண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் விழித்திருக்கும் போதும் சரி, உறங்கும் போதும் சரி,உங்களுக்குப் பணிவிடை செய்வேன்.

மனம் நெகிழ்ந்த ராமர் சொன்னார், நீ சென்று உனக்கு வேண்டியவர்கள் அனைவரிடமும் விடை பெற்று வா! ஜனகரிடம் வருணன் ஒப்படைத்த இரண்டு தெய்வீக வில்கள், மற்றும் துளைக்க முடியாத இரண்டு கேடயங்கள், தீர்ந்து போகாத அம்புகளைத் தாங்குகிற இரண்டு அம்பறாத் தூணிகள், ஒளி வீசும் இரண்டு கத்திகள்- ஆகியவை நமது ஆச்சார்யர் வசிஷ்ட முனிவரிடம் கொடுத்து வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றையும் எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் விடை பெற்று விரைவில் வா”
ராமர் கூறியபடியே லக்ஷ்மணன் செய்து முடித்து திரும்பியபிறகு, தான தர்மங்களைச் செய்வதில் ராமர் முனைந்தார்.

 

வால்மீகி ராமாயணம்
…………………….

தொடரும்… 🌸

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here