ராவணனின் துக்கம்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸-

🌸..பாகம்-132🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-24
…………………………..
ராவணனின் துக்கம்

………………………………………
வானரப் படையில் பலரைக் கொன்று அவர்களிடையே பெரும் நாசம் விளைவித்த பிறகு, ராமரால் வீழ்த்தப் பட்ட கும்ப கர்ணனின் உடல் கடலிலே போய் விழுந்து விட அவனுடைய தலை கோட்டை வாயிலில் வந்து விழுந்தது” என்று அரக்கர்கள் கூறக்கேட்ட ராவணன், பெரும் துன்பமுற்று மயங்கி விழுந்தான்.

அவனுடைய மகன்களாகிய தேவாந்தகன், நராந்தகன், த்ரிசிரன், அதிகாயன்ஆகியோரும் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரர் களாகிய மஹோதரன், மஹாபார்ச்வன் ஆகியோரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த ராவணன், கும்ப கர்ணனை நினைத்து துக்கித்துப்பேசினான். எவன் என்னுடைய வலது கரமாக விளங்கினானோ, அவனை இழந்து விட்டேன். எவனது துணை இருந்ததால், தேவர்களை நினைத்தும் கூட எனக்கு அச்சமற்றுப்போயிற்றோ, அவனை இழந்து விட்டேன்.

இனி நான் வாழ்வது எப்படி?தேவர்கள், அசுரர்கள் ஆகியோரின் பெருமையை அடக்கியவன், இன்று ராமனால் கொல்லப் பட்டது எப்படி? மின்னலே வந்து தாக்கினாலும், அயராது நிற்கக் கூடியவன். இன்று ராமனால் மரணத்தைத் தழுவியது எப்படி?கும்பகர்ணா! நீ யுத்தத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு ரிஷிகள் கொண்டாடுகிறார்கள்.

வானரர்களும் கூட, இனி இலங்கையின் கோட்டையைத் தாண்டுவது எளிது என்றே முடிவு செய்வார்கள்.

இனி எனக்கு ராஜ்யத்தினால் ஆவது ஒன்றுமில்லை. அப்படியிருக்க ஸீதையினால் ஆகப்போவது என்ன? கும்பகர்ணன் இல்லாமல் நான் வாழவே விரும்பவில்லை. என் சகோதரனைக்கொன்ற அந்த ராமனை நான் கொல்லாவிட்டால், நான் மரண மடைவதே மேல். அப்படியில்லா விட்டால் கூட, இந்த வாழ்க்கையில் இனி என்ன அர்த்தம்? கும்பகர்ணன் எந்த உலகை அடைந்தானோ, அதை நோக்கி நானும் இன்றே புறப் படுகிறேன்.

ராவணனின் துக்கம்

ராவணன் மேலும் புலம்பினான். கும்பகர்ணா! நீ இல்லாமல் இனி நான் இந்திரனை வெல்ல முடியுமா? தேவர்களுக்குத் தீங்கிழைத்தவனான என்னைப் பார்த்து, அவர்கள் சிரிக்க மாட்டார்களா? இப்படியெல்லாம் நேரும் என்று எடுத்துக் கூறிய மேன்மையான உன்னம் படைத்த விபீஷணனின் வார்த்தைகளை, என்னுடைய அறியாமையின் காரணமாக நான் ஏற்க மறுத்தேன்.

அதன் விளைவை இன்று அனுபவிக்கிறேன். கும்பகர்ணா! நீயும், ப்ரஹஸ்தனும் உங்கள் முடிவை அடைந்த விதத்தை நினைக்கிற போது, விபீஷணனின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்து என் தலை குனிகிறது. அவனை வெளியேற்றியதன் பலன் இப்போது என்னை வந்து அடைந்திருக்கிறது” இவ்வாறு பேசிய ராவணன் சோர்ந்து போய், மௌனமானான்.

( கம்ப ராமாயணத்தில் கும்பகர்ணனின் வதைப் படலம், வால்மீகி ராமாயணத்திலிருந்து சில மாறுதல்களை உள்ளடக்கி யிருக்கிறது. யுத்த களத்திற்கு வந்த கும்ப கர்ணனைப் பார்க்கிற ராமர், இவனுடைய ஒரு தோளோடு, மற்றொரு தோள் வரை முழுவதுமாக தொடர்ந்து பார்க்க முயற்சித்தால் பல தினங்கள் கழிந்து விடும். கால் முளைத்த மேரு மலை உலகின் நடுவேஇவ்வாறு வந்ததோ? போரை விரும்பி வந்த ஒரு வீரன் என்றும் இவனை நினைக்க முடியவில்லையே? இவன் யாரோ? என்று விபீஷணனிடம் கூறுகிறார்.

விபீஷணன், கும்பகர்ணனின் பெரும் உடல் வலிமையையும், நிகரில்லாத வீரத்தையும் வர்ணிக்கிறான். பிறகு, ” மாற்றான்” மனைவியைக் கடத்தி வந்து, சிறை வைத்த செயல் நமக்கு நன்மையைத் தருவதில்லை- என்று நீதி சார்ந்த சொற்களை ராவணனுக்கு இவன் எடுத்துச் சொன்னான். அவன் அதைக் கேளாமையால், அவனுக்கு முன் சாவது நலம் என்று இப்போது எமனுக்கு முன்னே வந்து சேர்ந்திருக்கிறான்” என்று கூறி விபீஷணன் ராமனை வணங்கி நின்றான்.

ஸுக்ரீவன், கும்பகர்ணனை போரில் கொல்வதால் பயன் ஒன்றும் இல்லை என்றும், அவன் தங்களோடு சேர்ந்து விடத் தயாராக இருந்தால் அவனையும் சேர்த்துக் கொண்டு, மேலே யுத்தத்தை நடத்துவது நலம்- என்றும் சொல்கிறான், தவிர, அவ்வாறு செய்வது விபீஷணனுக்கும் நல்லது என்று ஸுக்ரீவன் கருத்து தெரிவிக்கிறான். ராமரும் இந்த யோசனையை ஏற்கிறார். தானே போய் கும்பகர்ணனிடம் இது பற்றிப்பேசுவதாகக் கூறி, விபீஷணன் புறப் பட்டு செல்கிறான்.

அவனைப் பார்த்த கும்பகர்ணன், ராமனிடம் அடைக்கலம் புகுந்ததால் நீ மரணம் என்ற நிலையைக் கூட கடந்து விட்டாய். உனக்குப் புதிய பிறப்பு என்ற இழிவும் இல்லை. மிக்க தவம் செய்து நல்ல அறிவையும், தர்மத்தைச் சார்ந்து நடக்கும் தன்மையையும், பெற்ற விபீஷணா! இவ்வளவு மேன்மைகள் உனக்கு இருந்தும், அரக்கர் ஜாதியின் இழிவை நீ இன்னமும் விடவில்லைபோலும், அதனால் தான், ராமனை விட்டு விட்டு, பிறர் மனைவியை கவரும் எங்களுடைய உறவு நாடி மீண்டும் வந்திருக்கிறாய்.

ராவணனின் துக்கம்

நீயும் ராமனை விட்டு வந்து விட்டால், ராமனுடைய அம்பு மழையில், நாங்கள் அனைவரும் இறந்து போகும் போது, கையிலே எள்ளோடு கூடிய நீரை, இறந்தவர் பொருட்டுக் கொடுத்து இறுதிச் சடங்கு செய்ய யார் இருக்கிறார்கள்?

இப்படி சந்தேகப் பட்டுப்பேசுகிற கும்பகர்ணனைப் பார்த்து விபீஷணன், ” நீயும் அடைக்கலமாக வந்தால் ராமன் உனக்கும் அருள் புரிவான். உனக்கு அபயம் கிட்டும். அதோடு பறவிப் பிணிக்கு அவன் மருந்துமாவான். உருண்டு செல்லும் வண்டிச் சக்கரம் போன்ற உலக வாழ்வை நீக்கி, வீடு, எனும் பேற்றையும் உனக்கு அளிப்பான். ஆகையால் உன்னையும் ராமனிடம் அழைக்கவே வந்தேன்” என்று கூறுகிறான்.

பின்னர், ஐயனே! நீதியையும், தர்மத்தையும் பற்றி நிற்பவனே! இந்தப்போரில் நீ உயிர் தப்பிப்போவது என்பது அரிது. அவ்வாறு தப்பிப்போனாலும், அதன் பின்னர் புகலிடமும் இருக்காது. விரைவாக மடிவது தான் உறுதி. ஆகையால் இருக்கும் உயிரை வீணாகப்போக்கிக் கொள்வதால் என்ன பயன்? வேத நூல்களில் கூறப் பட்டுள்ள வழி முறைக்கு ஏற்ப நல்லொழுக்கத்தையே கடைப் பிடிக்க வேண்டும்”- என்று விபீஷணன் சொல்கிறான்.

கும்பகர்ணனோ, விபீஷணனின் அழைப்பை ஏற்க மறுக்கிறான். மார்பிலே மாலையணிந்த உடம்பை உடைய மைந்தனே! என்னை நீண்ட நாள் வளர்த்து இன்று போர்க்கோலம் சூட்டி யுத்தத்திற்கு அனுப்பியுள்ள ராவணனுக்காக, என் உயிரை க் கொடுக்காமல்- நீரில் அனுப்பி கொடுக்காமல்- நீரில் எழுதிய கோலத்தைப்போல உடனே அழிந்து விடும் செல்வ வாழ்க்கையை விருமு்பி, அந்த ராமனிடம் நான் போய்ச் சேர மாட்டேன்.

ராவணனின் துக்கம்

என் துன்பத்தைத் தவிர்க்க நீ விரும்பினால் கரிய மேனியை உடைய ராமனை விரைவில் சென்று அடைவாய்” என்று கூறிவிட்டு மேலும் சொல்கிறான்.ஆலோசை கேட்கிற தன்மை இல்லாத தலைவன் தீமை செய்யக் கருதினால், அவனைத் தடுத்து திருத்துவதுமுடியும் என்றால் அல்லவோ அவ்வாறு செய்யலாம்? அது முடியாமற்போனால், அவனை எதிர்த்து நின்று, பொருளை அடைய நினைப்பது நன்றோ? ஒருவனுடைய உயவை உண்டு வளர்ந்தவர் செய்யக் கூடிய நற்செயல் அவனுக்காகப்போர் புரிந்து அவன் முன்னமே சாதல் அன்றோ?
என்று சொல்கிறான்.

இறுதியாக, ” சிரஞ்சீவியாக வாழ்பவனே! உரிய காலத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும். அழிய வேண்டியது அழிந்து சிதறிப்போகும். பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் கூட, அது அழிவது திண்ணம். சந்தேகமற இதை உணர்ந்து தெளிவடைந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யார் இருக்கிறார்கள்? வருத்தப் படாமல் எங்களை நினைத்து பரிதாபப் படாமல் நீ செல்வாயாக” என்று கும்பகர்ணன், விபீஷணனிடம் கூறி அனுப்புகிறான்.

இதன் பிறகு கும்பகர்ணன் பெரும் போர் புரிகிறான். இறுதியில் ராமனால் வீழ்த்தப் படுகிறான். அந்த நிலையில் ராமனைப் பார்த்து, ” நற்குணம் இல்லாத ராவணன், விபீஷணனை தம்பி என்று நினைத்து இரக்கம் காட்ட மாட்டான். கண் எதிரில் கண்டவுடன் கொன்று விடுவான்.

ஆகவே, உன்னையும் உன் தம்பியையும், ஹனுமானையும் ஒரு கணப் பொழுதும் கூட விபீஷணன் பிரியாமல் இருக்குமாறு அருள்வாயாக என்று நான்வேண்டிக் கொள்கிறேன்- என்று கும்ப கர்ணன் கூறுகிறான்- பின்னர் அவன்கேட்டுக் கொள்கிற படியே, அவன் தலையை அறுத்து கடலுக்குள் மூழ்கச் செய்கிறார் ராமர்.

கும்பகர்ணனிடம், விபீஷணன் சென்றுபேசுவது, ராமரிடமே தொடர்ந்து இருக்குமாறு விபீஷணனிடம் கும்பகர்ணன் கூறுவது. போரில் உயிர் இழப்பதற்கு முன்பாக விபீஷணனைக் காப்பாற்று மாறு ராமரிடம் அவன்கேட்டுக் கொள்வது. அவன்கேட்டுக் கொண்டவாறே, அவனுடைய தலையை அறுத்து ராமர் கடலில் தள்ளுவது- ஆகியவை வால்மீகி ராமாயணத்தில் இல்லாதவை. இவை கம்பரின் கை வண்ணம்.

ராவணனின் துக்கம்

துளசி தாஸரின் ராமாயணத்திலும், யுத்த களத்திற்கு வந்த கும்பகர்ணனை விபீஷணன் சென்று சந்திக்கிறான். ராமரையே தொடர்ந்து அண்டியிருக்குமாறு அவனிடம் கூறுகிற கும்பகர்ணன், பெரும்போர் புரிகிறான். இறுதியில் ராமரால் துண்டிக்கப் பட்ட கும்பகர்ணனின் தலை, ராவணனின் காலடியில் போய் வீழுகிறது. உயிர் இழந்த அவனுக்கு மேலுலகில் ஒரு நல்ல இடம் கிடைக்க ராமர் அருள் புரிகிறார். இதுவும் வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்டதே)

சோகத்தில் மூழ்கி விட்ட ராவணனைப் பார்த்து, த்ரிசிரன், பெரும் பலம் படைத்த கும்பகர்ணன் கொல்லப் பட்டான் என்பது உண்மையே. ஆனால், சிறப்பு வாய்ந்தவர்கள். நீங்கள் இப்போது செய்வது போல துக்கத்தில் சிக்குவது இல்லை” என்று ராவணனைப் பார்த்துக் கூறி விட்டு மேலும் சொன்னான்.

மூவுலகத்தையும் வெல்லக் கூடிய திறன் படைத்த நீங்கள், சாதாரண மனிதனைப்போல் துக்கிப்பதா? தேவர்களையும், தானவர்களையும் ஒரு முறை அல்ல. பல முறை நீங்கள் வென்றிருக்கிறீர்கள். ஆகையால் ராமனை வெல்வது உங்களுக்கு எளிதான காரியம். நீங்கள் இங்கேயே இருந்தால் கூட, நாங்கள் சென்று எதிரியின் படைகளை அழிப்போம்” ராமனை நானே மாய்ப்பேன்.

இப்படி ஆவேசமாகப்பேசிய த்ரிசிரனின் வார்த்தைகள் ராவணனுக்குப் பெரும் ஆறுதலாக அமைய, அவன் மீண்டும் உற்சாகமடைந்தான். ராவணனின் மகன்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, தாங்களே தலைமை தாங்கி படையை நடத்திச் செல்வதாக அறை கூவல் விடுத்தனர்.

ராவணன் அவர்கள் அனைவரையும் கட்டித் தழுவி, அவர்களுக்குப் பலவித ஆபரணங்களை அணிவித்தான். த்ரிசிரன், தேவாந்தகன்,நராந்தகன் அதிகாயன் ஆகியராவணனின் மகன்களோடுஅவனுடைய ஒன்று விட்ட சகோதரர்களாகிய மஹாபார்சவன், மஹோதரன் ஆகியோரும், பெரும் படையுடன் யுத்த களத்திற்குப் புறப் பட்டனர்.
…………………………………………………….
..

தொடரும்… 🌸

My youtube channel please subscribe

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here