🌸 வால்மீகி ராமாயணம் 🌸
🌸..பாகம்-131🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-23
……………
மடிந்தான் கும்பகர்ணன்
………………..
அங்கதன் விடுத்த அறைக் கூவலால், தங்களுடைய தைரியத்தைத் திரும்பப் பெற்றவர்களாக வானரர் படைத் தலைவர்களும், அவர்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் போர்க் களத்திற்குத் திரும்பினர். கும்பகர்ணன் மீது அவர்கள் பாறைகளையும், குன்றுகளையும் பெரும் மரங்களையும் வீசி எறிந்தனர்.
ஆனால், இவையெல்லாம் அவன் மீது விழுந்து நொறுங்கிப் பொடிப் பொடியாகி விட்டன. வானரர்களின் தாக்குதலால் கோபமுற்ற அவன், அவர்களை அழிக்கத் தொடங்கினான். மீண்டும் பயத்தினால் பீடிக்கப் பட்டு, வானரர்கள் நான்கு திசைகளிலும் ஓடினர். சிலர் கடலில் விழுந்து மூழ்கி விட்டனர். சிலர் குகைகளில் புகுந்து கொண்டனர். சிலர் தாங்கள் நின்ற இடத்திலேயே தரையில் வீழ்ந்தனர்.
அங்கதன் அவர்களைப் பார்த்து, ” இப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முனைய வேண்டுமா? நிந்திக்கத் தகுந்த கோழையின் வாழ்க்கை உங்களுக்குத்தேவைதானா? மேன்மை யானவர்கள் சென்ற வழியை நாடுங்கள். அச்சத்தை விட்டொழியுங்கள்.
எதிரியை வீழ்த்தினால் , நாம் மிகப் பெரிய புகழை எய்துவோம். அவனால் நாம் வீழ்த்தப் பட்டால், வீரர்களுக்குரிய நல்ல உலகை அடைவோம். இதில் பயப்பட என்ன இருக்கிறது? எவ்வகையில் பார்த்தாலும் போரிடுவது நமக்கு மேன்மையைத் தான் தரும். ராமரை எதிர்த்து நின்றால், நெருப்பில் வீழ்ந்த பூச்சி போல, கும்ப கர்ணன் அழிவான்.
யுத்த களத்திலிருந்து ஓடி நாம் உயிர் வாழ்ந்தால், நமது புகழ் அத்தோடு ஒழியும். போர்க்களத்திற்குத் திரும்புகள்” என்று உரக்கக் கூவி அழைத்தான்.
ஆனால் வானர்கள், கும்பகர்ணன் பெரும் நாசத்தை விளைவிக்கிறான்.போரிடுவதற்கு இது தருணமல்ல. எங்களுக்கு எங்களுடைய உயிர் பெரிது தான். நாங்கள் போகிறோம்” என்று கூறி, அங்கதனின் அழைப்பை மறுத்தனர்.
அங்கதன் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு உற்சாக மூட்டினான். இறுதியில் ரிஷிபன், சரபன், மைந்தன், தூம்ரன், நீலன், குமுதன், ஸுக்ஷனன், கவாக்ஷன், ரம்பன், தாரன், த்விவிதன், பனஸன், ஆகியோர் ஹனுமானைப் பின் தொடர்ந்து, போர்க்களத்திற்கு மீண்டும் வந்து, கும்பகர்ணனை கடுமையாகத் தாக்கினார்கள்.
கும்பகர்ணனின் படை நாசத்திற்குள்ளாகியது. ஹனுமான் கும்பகர்ணன் மீது குன்றுகளையும் , பாறைகளையும் வீசி தாக்கினார். பின்னர் கைகளினாலேயே ஹனுமான், கும்ப கர்ணனின் மார்பில் ஓங்கி அறைய, அவன் தடுமாறினான். தன்னை சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய சூலத்தினால், ஹனுமானின் மார்பின் அவன் தாக்கியபோது, ஹனுமான் தன்னிலை இழந்து, ரத்தத்தைக் கக்கிக் கொண்டு, தடுமாறித்தவித்தார். இதைக் கண்ட வானரர்கள் மீண்டும் ஓடத் தொடங்கினர்.
ஓடிய வானரர்களைத் தடுத்து நிறுத்திய நீலன், கும்பகர்ணனைத் தாக்கினான். அவனோடு சேர்ந்து மேலும் ஐந்து வானரத் தலைவர்கள் கும்ப கர்ணனைத் தாக்கியபோது அவன், கைகளினாலேயே அவர்களைத் தாக்க, அந்தப் படைத் தலைவர்கள் எல்லாம் வீழ்ந்தனர். உலர்ந்த மரங்களைக் கொண்ட காட்டை, ஒரு பெரும் தீ அழிப்பது போல, கும்பகர்ணன் வானரர்களை அழிக்கத் தொடங்கினான்.
வானரர்கள் ஓடி ராமரிடம் அடைக்கலம் புகுந்தனர். இதைக் கண்ட அங்கதன், தானே தாக்குதலில் இறங்கினான்.அவன் கும்பகர்ணனை கடுமையாக எதிர்த்தாலும், தனது கையினால் கும்பகர்ணன் அவனைத் தாக்கியபோது, அவன் நினைவிழந்து தரையில் வீழ்ந்தான். இந்த நிலையில் ஸுக்ரீவனைப் பார்த்து, கும்பகர்ணன் விரைந்தான்.
அப்போது ஸுக்ரீவன், ” வானரர்கள் பலரைக் கொன்றதாலும், பெரும் வீரர்களை வீழ்த்தியதாலும், உன் பெருமை ஓங்கத் தான் செய்கிறது.ஆனால், வானரர் தலைவனாகிய என்னோடு அல்லவா நீ சண்டையிட வேண்டும்? அதை விடுத்து, சாதாரண வீரர்களிடம் உன் பலத்தை க் காட்டுவதில் என்ன சாதனை இருக்கிறது? என்று கேட்டு, ஒரு பெரும் பாறையை கும்பகர்ணனின் மார்பை நோக்கி வீசினான். அது கும்பகர்ணனின் மார்பின் மீது மோதி, தூள் தூளாகியது.
கும்ப கர்ணன், தனது சூலத்தை ஸுக்ரீவன் மீது எறிந்தபோது, இதற்கிடையில் மீண்டும் எழுந்து நின்றுவிட்ட ஹனுமான் பாய்ந்து அந்த சூலத்தைத் தடுத்து, தன் கையில் பிடித்து, அதை இரண்டு துண்டாக உடைத்து விட்டார். வானரர்கள் நாற்புறங்களிலிருந்தும் பாராட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
பெரும்கோபம் கொண்ட கும்ப கர்ணன், ஒரு மலையின் சிகரத்தை உடைத்து ஸுக்ரீவன் மீது எறிந்தான். ஸுக்ரீவன் நினைவிழந்து தரையில் வீழ்ந்தான். அரக்கர் படையினர் வெற்றிக் களிப்பில் கர்ஜித்தனர்.
கும்ப கர்ணன் தனது கட்கத்தில் ஸுக்ரீவனை இடுக்கிக் கொண்டு, ஒரு பெரும் காற்று மேகத்தைத் தள்ளிச் செல்வது போல, அவனை தூக்கிச் சென்றான். தேவர்கள் திகைத்தனர். ஸுக்ரீவன் தன்னால் கொல்லப் பட்டதாக நினைத்த கும்ப கர்ணன், இதன் மூலம் வானரர் படையே அழிந்தது என்றும், ராமரும் தோற்றார் என்றும் முடிவு செய்தான்.
மடிந்தான் கும்பகர்ணன்
கும்ப கர்ணன், ஸுக்ரீவனை தூக்கிச் செல்லும் காட்சியையும், வானரர் படை நாற்புறத்திலும், சிதறியதையும் பார்த்த ஹனுமான், தனக்குள்ளேயே சற்று சிந்தித்தார். இந்த நேரத்தில் நான்செய்ய வேண்டியது என்ன? மலை போல் வளர்ந்து, கும்பகர்ணனை அழிக்க முனையலாம். நான் அவனைக் கொன்றவுடன், ஸுக்ரீவனும் மீட்கப் படுவார். வானரர் படையும் உற்சாகம் எய்தும்.
அல்லது தேவர்களால் சிறையெடுக்கப் பட்டாலும், தன்னை விடுவித்துக் கொள்ளும் மதி படைத்த ஸுக்ரீவன், தானாகவே கும்ப கர்ணனிடமிருந்து தப்பித்தும் விடலாம். கும்ப கர்ணனால் தாக்கப் பட்ட ஸுக்ரீவனுக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை. சுய நினைவு அடைந்தவுடன், தனக்கும் , வானரர்களுக்கும் எது நன்மையோ, அதைச் செய்ய ஸுக்ரீவன் முனைவார்.
நானாக முந்திக் கொண்டு அவரைக் காப்பாற்றினால், அவருடைய புகழ் என்றென்றும் மங்கும். ஆகையால், ஸுக்ரீவன் தானாகவே தன்னை விடுவித்துக் கொள்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பது தான் நல்லது. அது வரை எனது சக்தியைக் காட்டாமல், வானரர்களை ஊக்கப் படுத்துவதில் தான் நான் முனையவேண்டும்,
இவ்வாறு முடிவு செய்த ஹனுமான், வானரர்களை உற்சாகப் படுத்த முனைந்து கொண்டிருந்த போது, கும்பகர்ணன், தன்னால் தூக்கி வரப் பட்ட, ஸுக்ரீவனுடன் இலங்கையில் நுழைந்தான். இதற்குள்ளாக ஸுக்ரீவனுக்கு நினைவு திருமு்பியிருந்தது.
கும்ப கர்ணனின் கையில் சிக்கியிருந்த நிலையில் அவன், வானரர்களுக்கு நன்மை புரியும் வகையில் செயல் பட்டு, இவனிடமிருந்து நாம் தப்பியது எப்படி? என்ற யோசனையில் ஆழ்ந்தான். பின்னர், திடீரென அவன் கும்பகர்ணனைத் தாக்கினான். கோபம் கொண்ட கும்பகர்ணன் ஸுக்ரீவனை ஓங்கி தாக்கினான்.
கோபம் கொண்ட கும்பகர்ணன் ஸுக்ரீவனை ஓங்கி தரையின் மீது அறைந்தான். உடனே ஸுக்ரீவன் இது தான் தருணம் என்று பாய்ந்து, வானத்தை நோக்கி எகிறித் தாவினான். கும்பகர்ணன் திகைத்து நிற்கையில், ஸுக்ரீவன் வானவீதி வழியாகவே ராமரைச் சென்று அடைந்து விட்டான்.
கும்பகர்ணன் கோபம் கொண்டு ஆயுதமில்லாத நிலையில் ஒரு கதையை கையில்ஏந்தி, மீண்டும் யுத்த களத்தில் நுழைந்தான். வானரர் படையில் மீண்டும் பெரும் நாசத்தை அவன் விளைவித்தான்.
மடிந்தான் கும்பகர்ணன்
வானரர்கள் ராமரை சரணடைய, லக்ஷ்மணன் கும்பகர்ணனை எதிர்த்து நின்று அவன் மீது அம்புகளை ஏவ, அவன் ” உன்னுடைய தைரியத்தை நான் மெச்சுகிறேன். காலனையொத்த என் எதிரில் ஒருவன் வந்து நின்றால், அதுவே மிகவும் பாராட்டத் தக்க செயலாக இருக்கும்! அப்படியிருக்க, உன்னைப்போல் என் எதிரில் வந்து நின்று, என்னுடன்போர் செய்கிறவன் மிக மிக மெச்சத் தகுந்தவனாவான்! ஐராவதத்தின் மீது அமர்ந்து, தேவர்கள் புடை சூழ நிற்கிற இந்திரன் கூட, யுத்த களத்தில் என் எதிரில் நிற்க அஞ்சுவான்.
ஆகையால் இளைஞனே! உன் வீரத்தை நான் மெச்சுகிறேன். ஆனால், நான் வந்திருப்பது ராமனுடன் சண்டையிடுவதற்காக! ஆகையால் இப்போது உன்னை நான் விடுகிறேன். ராமனை நான் அழிக்கிறபோது இந்தப் படை முழுவதும் அழிந்ததாகி விடும்” என்று கூறினான்.
லக்ஷ்மணன், ” இந்திரனாலும் தடுக்க முடியாதவன் நீ என்பது உண்மையே. உன்னுடைய வீரத்தை இந்தப்போர்க்களத்தில் நானும் பார்த்தேன். மலைபோல் அசையாமல் நிற்கக் கூடிய ராமர், இங்கே தான் இருக்கிறார், என்று கூற, கும்ப கர்ணன் ராமரை நோக்கி விரைந்தான்.
ராமர் அவன் மீது அம்புகளை ஏவிய போது, அவன் ரத்தம் கக்கத் தொடங்கினாலும், வானரர்களை அழிப்பதை அவன் நிறுத்த வில்லை. அவன் வீசிய பாறையை ராமர் பொடி செய்து விட்டார். கடும்போர் நடந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மணன், கும்பகர்ணனால் வானரர் படையில் பெரும் அழிவு நேரிட்டுக் கொண்டிருக்கிறது.
இதைத் தடுத்தாக வேண்டும். அவனுடைய பெரும் உடலில் வானரர்கள் கூட்டம் கூட்டமாக ஏற வேண்டும். இதனால் தொல்லையுறும் கும்பகர்ணன், தொடர்ந்து வானரர்களை அழிக்க முடியாமல் திணறுவான்” என்று யோசனை கூறினான். இதை ஏற்ற வானரர்கள், அவ்வாறே செய்தனர்.
கும்பகர்ணனோ, தன் உடலின் மீது பாய்ந்து ஏறிய வானரர்களை யெல்லாம் உதறி வீழ்த்த, ராமர் கோபத்துடன் அவனை அணுகி, தன்னிகரில்லாத தனது வில்லில் நாணேற்றி, கும்பகர்ணன் மீது பாணத்தைத் தொடுக்க ஆயத்தமாகி , அவனைப் பார்த்து ” அரக்கர்களில் சிறப்புற்றவனே வா! பாணம் தயாராக இருக்கிறது. அரக்கர்களை அழிப்பவன் என்று என்னை நீ அறிவாயாக! சிறிது நேரத்தில் நீயும் என் கையால் அழியப்போகிறாய்” என்று கூறினார்.
பெரும் கோபத்தோடு அவரை நெருங்கிய கும்பகர்ணன், ” உன் எதிரில் வந்திருப்பவன் விராதனோ, கபந்தனோ, கரனோ, வாலியோ அல்லது மாரீசனோ அல்ல. உன் எதிரே நிற்பவன் கும்பகர்ணன் என்பதைப் புரிந்து கொள்.
தேவர்களையும் அசுரர்களையும் வீழ்த்துவதற்கு உதவிய பயங்கரமான கதை, என் கையில் இருப்பதைப் பார்! இக்ஷ்வாகு குலப் புலியே! உன் பலத்தைக் காட்டுவாயாக! அதன் பின்னர் உன்னை நான் விழுங்குகிறேன். பாவமற்ற வீரனே! உன் முடிவு நெருங்கி விட்டது” என்று பதில் கூறினான்.
ராமர், அம்புகளை ஏவினார். அவைகளினால் கும்ப கர்ணனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் ராமர் ஏவிய அம்புகளை கும்பகர்ணன், தன் கதையினால் தடுத்தான். அடுத்து ராமர் ஏவிய வாயு அஸ்திரம், கும்பகர்ணனின் கையை வெட்டியது. ஒரு மலையையொத்த அந்தக் கை கீழே விழுந்த பொழுது, அதில் சிக்கி பல வானரர்கள் இறந்தனர்.
மடிந்தான் கும்பகர்ணன்
ஒரு கையை இழந்தவனாக, பெரும் கதறலுடன் கும்பகர்ணன் மற்றொரு கையினால் ஒரு மரத்தைப் பிடுங்கி, ராமர் மீது எறிய குறி வைத்தான். அப்போது ராமர் ஏவிய அம்பு அந்தக் கையையும் அறுத்தது.
இரு கைகளையும் இழந்தவனாக அவன் பாய்ந்தபோது, ராமர் பல அம்புகளினால் அவன் கால்களை அறுத்தார். அந்தக் கால்கள் தரையில் சாய்ந்த போது, நான்கு திசைகளும் நடுங்கின. கடல் கொந்தளித்தது.
அப்போது ராமர் விடுத்த பாணம், பேரொளி வீசிக் கொண்டு பாய்ந்து சென்று, மலை ச் சிகரத்தையொத்த கும்பகர்ணனின் தலையை அறுத்தது. சந்திரனைப்போல் ஒளி வீசிய கும்பகர்ணனின் தலை, தரையில் வீழ்ந்த போது கட்டிடங்கள் நொறுங்கின.கோட்டை வாயில் இடிந்தது.
கும்பகர்ணன்
கும்பகர்ணனின் மீதி இருந்த உடலும் கடலில் விழுந்தது. அதன் விளைவாக முதலைகளும், பெரும் மீன்களும் நசுங்கின. மலைகள் நடுக்க முற்றன. தேவர்கள் மகிழ்ந்தனர். ரிஷிகளும், கந்தர்வர்களும், யக்ஷர்களும் ராமரைப் பாராட்டினர்.
வானரர்கள் மகிழ, ராமர் சூரியன்போல் ஒளி விட்டுப்பிரகாசித்தார். அது வரை எந்த யுத்தத்திலும் தோல்வியுறாத கும்பகர்ணன் வீழ்ந்து மடிந்தான். வானரர் படைக்குப் பெரிய உற்சாகத்தைத் தர, அரக்கர்கள் விரைந்து சென்று ராவணனிடம், கும்பகர்ணனின் மரணச் செய்தியைத் தெரிவித்தனர்.
……………………………………………………..
..
தொடரும்… 🌸
….
[…] வானரப் படையில் பலரைக் கொன்று அவர்களிடையே பெரும் நாசம் விளைவித்த பிறகு, […]
[…] மனித முயற்சியினால் செய்யத் தக்கது என்னால் செய்து முடிக்கப் பட்டது. […]