வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
🌸 வால்மீகி ராமாயணம்
🌸- சோ
🌸..பாகம்-45🌸
…..
அத்தியாயம்-16
………………….
மரவுரி அணிந்த மூவர்
……………………….
ஸுமந்திரர் கூறிய வார்த்தைகளால் கைகேயி சற்றும் மனம் மாறாமல் காட்சி அளித்த போது, தசரதர் கண்களில்நீர் வழிய, ஸுமந்திரரைப் பார்த்துச் சொன்னார்.
தேர், யானை, குதிரை காலாட்படைகள் ராமனைப் பின் தொடர்ந்து செல்லட்டும். கடைகளை விரித்து வர்த்தகத்தைப் பெருக்கும் திறனுடைய வணிகர்கள், தங்கள் செல்வங்களுடன் ராமனுடன் செல்லட்டும்.
தங்கள் போட்டிகளினால் அரசனை மகிழ்விக்கக் கூடிய மல்லர்கள் ராமனுடன் செல்லட்டும். காட்டின் தன்மையை நன்கு அறிந்த வேடர்களும், சிறப்பான ஆயுதங்களும், பர விதமான வண்டிகளும், ராமனைப் பின் தொடர்ந்து செல்லட்டும்.
ஜனசஞ்சாரமில்லாத காட்டில் வசிக்கப் போகும் ராமனுக்கு உதவியாக, அரண்மனையின் நெற்களஞ்சியமும், பொக்கிஷமும் அவனோடு எடுத்துச் செல்லப் படட்டும்.
மேன்மை பெற்ற ரிஷிகளைச் சந்திப்பதன் மூலமாகவும், புண்ய ஸ்தலங்களில் யாகங்களை நடத்துவதன் மூலமாகவும், முறையான வழியில் தான் தர்மங்களைச் செய்வதன் மூலமாகவும் ராமன் காட்டிலே மகிழ்ச்சியோடு வாழட்டும்.
பெருந்தோள் கொண்ட பரதன் அயோத்தியை ஆளுகையில்,காட்டிலே வாழப் போகும் ராமனும் களிப்போடு இருப்பதற்காக, எல்லா வசதிகளும் அவனுக்குச் செய்து தரப்படட்டும்.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
இப்படி தசரதர் இட்ட உத்திரவைக்கேட்டு கைகேயியின் நாவறண்டது. அவளுடைய தொண்டை அடைத்துக் கொண்டது. உதடுகள் உலர்ந்தன.
பெரும் வருத்தமும் துக்கமும் அடைந்தவளாக அவள் தசரதரைப் பார்த்து, போதைப் பொருள் விலக்கப் பட்ட மதுபானம் இன்பத்தைத் தராது.
செல்வங்கள் எல்லாம் பறிக்கப் பட்ட ராஜ்யம், அந்த மதுபானம் போன்றது தான். எதற்கும் உதவாத அந்த ராஜ்யத்தை பரதன் ஏற்க மறுப்பான்” என்று வெறுப்புடன் பேசினாள்.
சிறிதும் கூச்சமில்லாமல் இப்படி கொடுமையான வார்த்தைகளைப் பேசிய கைகேயியைப் பார்த்து தசரதர் சொன்னார், கொடியவளே! தரம் கெட்டவளே! தாங்க முடியாத பாரத்தை என் மீது சுமத்தி விட்டாய்.
தாங்க முடியாத உனது கொடுமையைத் தாங்கிக் கொண்டு, அதை நான் நிறைவேற்றுகிற போது ஏன் குறுக்கிட்டு, என்னை சவுக்கால் அடிக்கிறாய்? ராமனைக் காட்டுக்கு அனுப்புமாறு என்னிடம் நீ வரம் கேட்ட போது, அவனுடன் எது எடுத்துச் செல்லப் படலாம்.
எது எடுத்துச் செல்லக் கூடாது என்று நிபந்தனை ஏதும் விதிக்கவில்லையே? இப்பொழுது ஏன் ஆட்சேபனை எழுப்புகிறாய்?
கைகேயி விடுவதாக இல்லை. உங்களுடைய பரம்பரையில் உங்களுடைய முன்னோர்களில் ஒருவனாகிய ஸகர மன்னன், தனது மகன் அசமஞ்சனை நாட்டை விட்டு விலக்கியபோது, அவனுடன் எதுவும் எடுத்துச் செல்ல அவனை அனுமதிக்கவில்லை.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
அதே போல, எந்த ஒரு வசதியும், செல்வமும் இல்லாமல் தான் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்” இப்படி கைகேயி கூறியதைக்கேட்ட தசரத மன்னர், ஐயோ அவமானம்” என்று கதற, கூடி யிருந்தவர்கள் எல்லாம், மனம் குன்றிப்போய் நிற்க, கைகேயி மட்டும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நின்றாள்.
இந்த நிலையைப் பார்த்து, சித்தார்த்தர் என்ற பெயரைக் கொண்ட தசரத மன்னரின் மூத்த அமைச்சர் கைகேயிக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பிடித்து, ஸரயு நதியில் எறிந்து, அவை தண்ணீரில் மூழ்கி சாவதைக் கண்டு மனம் களித்தவன் அசமஞ்சன்.
அவனுடைய கொடுமை பொறுக்க முடியாத மக்கள், மன்னனிடம் சென்று, ஒன்று உங்கள் மகன் இந்த ராஜ்யத்தில் இருக்கட்டும் அல்லது நாங்கள் இந்த ராஜ்யத்தில் இருக்கிறோம்.
இரண்டில் எது வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள்” என்று முறையிட்டனர். அசமஞ்சன் செய்து வந்த அக்கிரமங்களை மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட மன்னன், அவர்களைத் திருப்திப் படுத்தும் வகையில், அசமஞ்சனை நாடு கடத்த முடிவெடுத்தான்.
அதனால் தான் அப்போது ஒரு மண் வெட்டியையும், கூடையையும் தவிர வேறு எதுவும் அசமஞ்சனோடு அனுப்பப் படவில்லை.
கொடுமையான பாவங்களைச் செய்ததால், அசமஞ்சனுக்கு நேர்ந்த கதி அது. இப்போது அரசுரிமை மறுக்கப் படும் வகையில் ராமன் செய்த பாவம் என்ன என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்! பௌர்ணமி நிலவில் எப்படி ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியாதோ, அப்படி ராமனிடம் எந்தக் குற்றமும் கண்டு பிடிக்க முடியாது. மாறாக, நீங்கள் அறிந்து ராமனிடம் ஏதோ ஒரு குறை இருந்தால், அதை இப்போது எல்லோர் முன்னிலையிலும் நீங்கள் விளக்க வேண்டும்.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
அப்படி ராமனிடம் உள்ள ஒரு குறையை நீங்கள் இங்கே எடுத்துச் சொல்லி விட்டால், அவன் உடனே நாடு கடத்தப் படட்டும். ராமன் குற்றம் எதுவும் அற்றவன் மட்டுமல்ல, எல்லா நற்குணங்களும் பொருந்தியவன்.
தர்மத்தின் பாதையிலிருந்து தவறாதவன். அப்படிப் பட்டவனை காட்டுக்கு அனுப்புவது என்பது ஒரு மன்னர் செய்யக் கூடிய காரியமா? அது எந்த வகையில் நியாயம்? இப்படிப் பட்ட செயல் தேவேந்திரனின் மன்னர் இதைச் செய்ய வேண்டாம்.
அழியாத அவப் பெயரிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ராமனுக்கு பட்டாபிஷேகம் நடப்பதை த் தடுக்காதீர்கள்.
இப்படி சித்தார்த்தர் பேசியதைக்கேட்ட பிறகும் கூட, அசராமல் நின்ற கைகேயியைப் பார்த்து தசரதர் மிகவும் கம்மிய குரலில், பாவமெல்லாம் ஒரு பெண் என உருவெடுத்து வந்தவளே! அமைச்சர் கூறிய இந்த நல்ல அறிவுரையை உன் மனம் ஏற்கவில்லையா? நாட்டின் நலத்தையோ, எனது நலத்தையோ நீ நாடா விட்டாலும், உன்னுடைய நலத்தைக் கூட நீ நாட வில்லையா? தர்மத்தின் பாதையிலிருந்து முற்றிலும் விலகிய நடையை உடையவளே! ஒன்று சொல்கிறேன்.
கேட்டுக் கொள். ஆட்சியைத் துறந்து, ராமனைத் தொடர்ந்து நானும் அவனுடன் காட்டுக்குச் செல்லப்போகிறேன். அயோத்தி மக்களும் என்னுடன் வந்து விடுவார்கள். பரதனை பக்கத்திலே வைத்துக் கொண்டு, நீண்ட நெடுங்காலம் நீ இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிரு” என்று சொன்னார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமர் அமைதியாகப்பேச த் தொடங்கினார். சுக போகங்களைத் துறந்து , காட்டிலே கிடப்பதைக் கொண்டு வாழ இருக்கும் எனக்கு படைகளினாலோ, செல்வத்தினாலோ என்ன பயன்? ஒரு நல்ல யானையைத் துறந்து விட்டு, அதனுடைய அம்பாரியை மட்டும் தன் வசம் வைத்துக் கொள்ள விரும்புகிறவன் மூடனல்லவா? அதே போல,தேர், யானை, குதிரை, காலாட் படைகளால் எனக்கு என்ன பயன்? எல்லா செல்வங்களும் படைகளும், ஆயுதங்களும் பரதனால் பயன் படுத்தப் படட்டும்.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
கைகேயி தேவியாரின் பணிப் பெண்கள், நான் காட்டிலே வாழ்வதற்குரிய உடைகளை உடனடியாக இங்கே கொண்டு வரட்டும்” இப்படிச் சொன்ன ராமர்” அங்கே நின்று கொண்டிருந்த கைகேயின் பணிப் பெண்களைப் பார்த்து பதினான்கு வருட காலம் காட்டையே இருப்பிடமாகக் கொள்ளப் போகும் எனக்குத் தகுந்த மரவுரி, மண்வெட்டி, கூடை ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
ராமர் இப்படிச் சொன்னவுடன் கூச்சத்தை முற்றிலும் துறந்து விட்ட கைகேயி, ஒரு வினாடியும் தாமதிக்காமல் உள்ளே சென்று மரவுரிகளைத் தானே கொண்டு வந்து, ராமரைப் பார்த்து அனைவர் முன்னிலையிலும், இதை அணிந்து கொள்” என்று கூறினாள்.
மனிதப் புலியான ராமர், சற்றும் சஞ்சலமில்லாமல் இரண்டு மரவுரிகளை வாங்கிக் கொண்டு, அவற்றை இடுப்பிலும் மார்பிலும் அணிந்து கொண்டார். தனது அருமையான ஆடைகளைக் கழற்றிப்போட்ட லக்ஷ்மணனும், அவ்வாறே மரவுரிகளை அணிந்து கொண்டான்.
தனக்குரிய மரவுரியைக் கையில் எடுத்துப் பார்த்த ஸீதை, அதை எப்படி அணிந்து கொள்வது என்று தெரியாமல் திண்டாடினாள். பழக்கமில்லாத ஆடையை அணிவதில் பலர் முன்னிலையில் ஏற்பட்ட தடுமாற்றம் அவளை தலை குனியச் செய்தது.
பேரழகு பொருந்தியராமரைப் பார்த்து, காட்டிலே வாழும் முனிவர்களும், அவர்களுடைய பெண்களும் இவற்றை எப்படி அணிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லையே? என்று ஸீதை கூச்சத்தோடு கேட்டாள்.
ராமரோவால்மீகி சற்றும் தயங்காமல், அந்த மரவுரியை கையிலே வாங்கி, ஸீதை அணிந்திருந்த புடவையின் மீதே அதை அணிவித்தார்.
இப்படி பேரழகு பெற்றவர்- பெரும் ராஜ்யத்திற்குரியவர்- எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமானவர்- எல்லா வித மேன்மைகளும் பெற்ற தன்னுடைய மனைவிக்கு, தன் கையினாலேயேமரவுரி அணிவிக்க முனைந்த காட்சி, அங்கே நின்றவர் மனதையெல்லாம் உலுக்கியது.ஸீதைக்கு இந்த கதி நேரிடக் கூடாது.
ஸீதை காட்டிலே வாழ வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் படவில்லை. தந்தையின் கட்டளை என்று நினைத்து தனது கடமை நிறைவேற்றுவதாக முடிவெடுத்து விட்ட ராமர் காட்டுக்குச் செல்லட்டும்..
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
ஸீதை காட்டிலே வாழத் தகுந்தவள் அல்ல. அவள் இங்கேயே இருக்க வேண்டியவள்” என்று அவர்கள் எல்லாம் கதறினார்கள்.
இப்படி எல்லோரும் முறையிட்டும் கூட, ஸீதைக்கு மரவுரியை அணிவிப்பதில் முனைந்திருந்த ராமரைப் பார்த்தார் வசிஷ்டர். அவர் மனம் கலங்கியது. கண்களிலே நீர் ததும்ப, படபடக்கும் நெஞ்சத்துடன் வசிஷ்டர் பேசத் தொடங்கினார்.
கெட்ட மதி படைத்தவளே கைகேயி! குடும்பத்திற்கே பெரும் அவமானத்தை இழைத்தவளே! எல்லா எல்லைகளையும் கடந்து விட்டவளே! கண்ணியத்தைத் துறந்தவளே! தீய எண்ணத்துடன் மன்னரை ஏமாற்றியவளே! கேள்! ஸீதை காட்டுக்குச் செல்ல மாட்டாள்.
அவள் அரியாசனத்தில் அமரப்போகிறாள். எல்லா வகையிலும், கணவனுக்கு நிகரானவள் மனைவி என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. கணவனின் அம்சமே மனைவியிடம் குடி கொள்கிறது. ஆகையால், ராமனின் அம்சத்தைக் கொண்டஸீதை நாடாள்வாள். இது என் முடிவு.
இவ்வாறு கூறிய வசிஷ்டர் மேலும் தொடர்ந்தார், நான் சொல்வதையும் மீறி இந்தவைதேகி காட்டுக்குச் சென்றால், ராமனைப் பின் தொடர்ந்து நாங்கள் அனைவரும் சென்று விடுவோம். இந்த நகரமே காட்டுக்குச் சென்றுவிடும். படை வீரர்கள் ராமனைப் பின் தொடர்ந்து செல்வார்கள்.
இந்த நாட்டின் தான்யங்கள், இந்த நாட்டின் பொருட்கள், இந்த நாட்டின் செல்வம் எல்லாமே ராமன் பின்னே செல்லும். அவ்வளவு ஏன்? இதே மரவுரியை அணிந்து பரதனும், அவனுடன் கூட சத்ருக்னனும் ராமன் வசிக்கும் காட்டிற்கே சென்று விடுவார்கள்.
தீமையை நினைத்து , தீமையையே செய்கிற நீ, வெறும் பாலைவனமாகி விட்ட இந்த நாட்டை அப்போது ஆளலாம். ராமன் இல்லாத இந்த நாடு அழியும். அவன் வாழுகின்ற காடு செழிக்கும்.
தானாக விருப்பப் பட்டு, சரதர மன்னர் இந்த அரசுரிமையை தனக்கு அளிக்காததால் பரதன் இதை ஏற்க மாட்டான். அது மட்டுமல்ல, அவன் தசரத மன்னனுக்குப் பிறந்த பிள்ளை என்றால் அவன் உன்னுடன் கூட வாழ்வதற்கும் சம்மதிக்க மாட்டான்! தனது முன்னோர்கள் சென்ற பாதையை நன்கு அறிந்த பரதன், நீ ஆகாயம் வரை எகிறிக் குதித்தாலும், தர்மத்திற்கு விரோதமாக நடக்க மாட்டான்.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
ராமனை அண்டி நிற்காதவர் இந்த உலகில் இல்லை. பரதனும் அதற்கு விலக்கல்ல. ஆகையால் நீ நல்லதை ச் செய்யநினைத்து, அவனுக்கு பெரும் தீங்கைச் செய்திருக்கிறாய். இப்போதாவது நல்லது செய்ய நினைக்கத் தொடங்கு.
நீ கொண்டு வந்த மரவுரிகளை ஸீதையிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவளுக்கு அழகான ஆடை ஆபரணங்களை அளிப்பாயாக. விதேக மன்னனின் மகள் மரவுரி அணியத் தக்கவள் அல்ல.
கைகேயி பதில் ஏதும் பேசாமல் இருப்பதைப் பார்த்த வசிஷ்டர், சிறிது இடைவெளி விட்டு மேலும் பேசினார். சரி, நீ கேட்ட வரம் என்ன? ராமன் காட்டுக்குப்போக வேண்டும் என்பது தானே! ஸீதைக்கு வனவாசம்- என்பது நீ கேட்ட வரமல்லவே!ஆகையால் ராமனைப் பின் தொடர்ந்து ஸீதை காட்டுக்குச் சென்றாலும், அவள் அங்கே எல்லா வசதிகளுடன் வாழ வேண்டும்.
எல்லா ஆபரணங்களையும் அணிந்தவளாக, எல்லா அலங்காரங்களையும் செய்து கொண்டவளாக, ஸீதை காட்டிலே வாழட்டும்.
வெவ்வேறு விதமான நகைகள், வெவ்வேறு வகையான ஆடைகள், வாசனைத் திரவியங்கள், ஆகியவை பணிப் பெண்களால் ஸீதையுடன் எடுத்துச் செல்லப் படட்டும்.
ஸீதை காட்டு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீ தசரத மன்னரிடம் கேட்கவில்லை என்பதை நினைவில் நிறுத்து.
அந்தணர்களில் எல்லாம் மேம்பட்டவரும், ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்றவருமான வசிஷ்டர் இம்மாதிரி பேசியும் கூட, மரவுரி அணிந்து கணவனைப் பின் தொடர்ந்து, காட்டுக்குச் செல்லும் முடிவிலிருந்து ஸீதை மாறவில்லை.
இறுதியாக அவள் மரவுரி அணிந்த காட்சியைக் கண்ட பலரும் அதைத் தடுத்து நிறுத்தாததற்காக, தசரத மன்னரை சபித்தார்கள்.
மன்னர் பெரு மூச்சு விட்டார். தர்ம நியாயத்திலும் புகழிலும், வாழ்விலுமே கூட ஆசை விட்டவர் போல் காட்சியளித்த அவர், பெரும் துக்கத்தோடு கைகேயியைப் பார்த்து மீண்டும் பேசினார்.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
கைகேயி! மரவுரி அணிந்து காட்டுக்குச் செல்ல வேண்டியவள் அல்ல ஸீதை. அவளுடைய உரிமைகள் பற்றி ஆச்சார்யர் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் நியாயமானவையே.
மரவுரியை எப்படி அணிவது என்று கூடப் புரியாமல் , அதை கையில் வாங்கிக் கொண்டு திகைத்து நின்ற ஸீதையைப் பார்த்து, உன் மனம் உருகவில்லையா? அவள் மரவுரி அணிய வேண்டாம்.
அவளைப் பற்றி நான் உனக்கு வரம் கொடுக்க வில்லையே?ஆகையால் ஆச்சார்யர் வசிஷ்டர் கூறிய மாதிரி, எல்லா வசதிகளும் பெற்று அவள் காட்டுக்குச் செல்லட்டும்.
கடுமையான வரத்தை என்னிடமிருந்து பெற்றாய். அதோடு திருப்தியடையாமல் ஸீதைக்கு நேரிடும் இந்தக் கொடுமையான காட்சியையும் என்னைப் பார்க்க வைக்கிறாய்.
இனி உயிர் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு அழிவு நெருங்கி விட்டது. ஒரு வேளை ராமன் உனக்கு ஏதாவது தீமை இழைத்திருந்தாலும் கூட, ஸீதை உனக்கு என்ன செய்தாள்? மென்மையான அவளால் யாருக்கு என்ன கெடுதல் நிகழ முடியும்? ராமனைக் காட்டுக்கு அனுப்புவதோடு நீ திருப்தி அடைய மாட்டாயா? நீ செய்யும் பாவத்தினால், உனக்கே பெரும் துன்பம் நேரிடும் என்பதையாவது உணர மாட்டாயா? ராமனைப் பொறுத்த வரை, நான் உனக்கு அளித்த வரம் என்னைக் கட்டுப் படுத்துவது உண்மை தான்.
ஆனால் ஸீதையும் மரவுரி அணிந்து காட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை நீ ஏற்படுத்துவதால், நரகத்தைநோக்கி நடந்து செல்கிறாய் என்பதை மறந்து விடாதே. இப்படிக் கூறிய தசரதர் துக்கம் தாங்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்தார்.
காட்டுக்குப் புறப் பட்டு விட்ட மனநிலையை அடைந்து விட்ட ராமர், தசரதரைப் பார்த்து, ஒரு வேண்டுகோள் விடுத்தார். அரசே” எனது தாயார் கௌஸல்யை உங்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாதவர்.
மிகவும் வால்மீகிமென்மையானவர். என்னுடைய பிரிவு அவரை வாட்டாமல் இருப்பதற்காக, அவரிடம் நீங்கள் விசேஷ அக்கறை காட்ட வேண்டும் என்று நான்கேட்டுக் கொள்கிறேன்.
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
நீங்கள் காட்டும் பரிவின் மூலமாக, என்னுடைய பிரிவை அவர் தாங்கிக் வால்மீகிகொள்ளுமாறு செய்து விடலாம். என்னிடமிருந்து பிரிந்து விட்டதை நினைத்து மனம் நொந்து, அவர் எமனிடம் போய்ச் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் இருக்கிறது.
நீங்கள் காட்டும் அன்பு தான் இனி அவருடைய உயிரைக் காப்பாற்றக் கூடியது.
ராமர் கூறிய வார்த்தைகளைக்கேட்ட தசரத மன்னர், கௌஸல்யையின் துக்கத்தை நினைத்து மேலும் துயரமடைந்தார்.
ராமர் அரசுரிமை பெறப்போகிற நேரத்தில், காட்டுக்குச் செல்வதற்காக மரவுரி அணிந்து நிற்கும் அவலத்தை மீண்டும் ஒரு முறை அவர் பார்த்தார். அவருடைய மனம் சிதறியது. மூர்ச்சித்து விழுந்தார்.
………………………………………………………
…………………….
…
தொடரும்…
….
[…] வைரஸ் மனித குலத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக் […]
[…] என் ஆண்மை எல்லோராலும் பார்க்கப் பட்டது. இன்று என் முயற்சி […]
[…] சகோதரனே! கும்பகர்ணா! யுத்த சாத்திரத்தை நன்கு அறிந்தவனே! […]