வால்மீகி ராமாயணம்

🌸🌸வால்மீகி இராமாயணம் –
..
பாகம்-1

வால்மீகி ராமாயணம்
………………………………………………….
முன்னுரை

……………………………
படிப்பவர்களின் அறிவை நாடுகிறது.- மஹாபாரதம், அவர்களுடைய இதயத்தைத் தொடுகிறது- ராமாயணம் அரசனின் கடமைகள், மனிதனின் நெறி முறைகள், பொதுவான தர்ம நியாயங்கள், விதியின் வலிமை, தர்மம் என்ற நெறியில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள், யுத்த தர்மம்,.போன்ற பல விஷயங்களை மஹாபாரதம் போலவே , ராமாயணமும் எடுத்துக்கூறுகிறது. ஆனால், சூது, சதி, தந்திரம் போன்றவற்றுக்கு மஹாபாரதத்தில் இருக்கும் பங்கு- ராமாயணத்தில் இல்லை.

மாறாக மஹாபாரதத்தில் இல்லாத அளவுக்கு, ராமாயணத்தில் தியாகம், பாசம், சுயநலமின்மை போன்ற பண்புகளைக் காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. என் மனதில் பட்ட அளவில் சொல்கிறேன்- வெல்வதற்குத் தேவையான யோசனைகளைக் கூறுவது மஹாபாரதம். வாழ்வதற்கு அவசியமான வழிகளைக் காட்டுவது ராமாயணம்.

இதயத்தை நெருங்குவதால், மஹாபாரதத்தை விட ராமாயணமே பலரும் அறிந்த இதிஹாசமாக இருக்கிறது. வியாஸரின் மஹாபாரதத்தை விவரமாக எழுதியுள்ளவர்களைப்போல், பன் மடங்கு அதிகமானவர்கள் ராமாயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்- என்பதற்கும் இதுவே காரணமாக இருக்க வேண்டும்.மஹாபாரதத்தைப் பொறுத்த வரையில் வியாஸ பாரதம் ஒரிஜினல், வில்லிப் புத்தூர் பாரதம் மாதிரி.

வால்மீகி ராமாயணம்

ஒரு சில புஸ்தகங்களே அதைத் தழுவி எழுதப் பட்டவை. ஆனால் வால்மீகி ராமாயணத்தை அடுத்து பல்வேறு ராமாயணங்கள் இருக்கின்றன. கம்பர், துளசிதாஸர் போன்றவர்கள் இயற்றியவை போக, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், காளிதாஸரின் ரகுவம்சம், ஜைன ராமாயணம், பௌத்த ராமாயணம், பாஸ்கர ராமாயணம், அக்னிவேச்ய ராமாயணம், என்று இருபத்துக்கும் மேற்பட்ட ராமாயணப் புஸ்தகங்கள் இருக்கின்றன.

(100க்கும் முற்பட்ட ராமாயணங்கள் இருப்பதாக, விவரமறிந்த ஒருவர் என்னிடம் சொன்னார்)

இப்படி பல ராமாயணங்கள் இருப்பதால், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பல நிகழ்ச்சிகள், ராமாயண நிகழ்ச்சிகளாகவே பலர் மனதிலும் வேரூன்றி விட்டன.ஜனகர் வசம் இருந்த வில்லை ஒடிப்பதற்கு முன்பாகவே ராமனுக்கும், சீதைக்குமிடையே பரஸ்பர அன்பு தோன்றி விட்டது.

வால்மீகி ராமாயணம்

லக்ஷ்மணன் கிழித்த கோட்டை சீதை தாண்டிய போது தான் ராவணன் அவளை அபகரித்துச் சென்றான், ராமன் கொடுத்த ரங்கநாதர் விக்ரஹத்தை இலங்கைக்கு விபீஷணன் எடுத்துச் சென்றான். குறித்த நேரத்தில் ராமன் அயோத்திக்கு வரவில்லையென்றால் தீயில் விழுவது என்ற தீர்மானத்துடன் இருந்த பரதன், தீ மூட்டி அதில் விழப்போகும் நேரத்தில் தடுக்கப் பட்டான்.

சீதை மீது களங்கம் இருப்பதாக ஒரு சலவைத்தொழிலாளி புகார் செய்தான்.. என்பவை போன்ற நிகழ்ச்சிகள், வால்மீகி ராமாயணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவில், நன்றாக பரவியிருக்கின்றன.

நான் எழுதி இருப்பது- வால்மீகி ராமாயணம். அதிலிருந்து கம்ப ராமாயணம் பல இடங்களில் மாறுபடுகிறது. கம்பரின் அபூர்வமான கவித்திறன் காரணமாக அவர் கூறியிருக்கிற வகையிலேயே பல ராமாயண நிகழ்ச்சிகள் தமிழகத்தில் ஏற்கப் பட்டிருக்கின்றன. கம்பர் எழுதியது கவிதை என்றால், வால்மீகி எழுதியது வரலாறு.

அதில் இடைச்செருகல்கள் இருக்கலாம். ஆனால் ” எது இடைச் செருகல்”- எது ஒரிஜினல்” என்பது இன்று யாரும் நிர்ணயமும் செய்ய முடியாத விஷயம். ஆகையால், சில நூறு ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயண புஸ்தகங்களை ஆதாரபூர்வமானவை என்று ஏற்பது தான் நாம் செய்யக் கூடியது.

இந்தத் தொடரில் , ஆங்கில உரையுடன் எழுதப் பட்ட சம்ஸ்கிருத வால்மீகி ராமாயணத்தை, முதன்மையான ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர, ராமாயண உபன்யாஸம் செய்கிற பரசுராமன் என்ற நண்பர், பல புஸ்தகங்களை தந்து உதவினார்.

ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் வெளியாகிய வால்மீகி ராமாயண விளக்கங்கள், சர்ச்சைகள்- போன்றவற்றை எடுத்துக் கூறுகிற அந்தப் புஸ்தகங்களில் காணப் படுகிற வாதங்களும் , விளக்கங்களும், எனக்கு இத் தொடரை எழுதியதில் பெரும் உதவியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

வியாஸ பாரதத்தை எழுதுவதில் இல்லாத ஒரு சிக்கல், வால்மீகி ராமாயணம் எழுதுவதில் இருக்கிறது. பாரதத்தை இதிஹாசமாக ஏற்பவர்களிடையே, அதில் வரும் நிகழ்ச்சிகள் பற்றி கிட்டத் தட்ட ஒரு மித்த கருத்து உண்டு.ஆனால் ராமாயணத்தை இதிஹாசமாக ஏற்பவர்களிடையே, அதில் வரும் பல நிகழ்ச்சிகள் பற்றி, வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.வால்மீகி ராமாயணம்

தன் மகனுக்கு பதவி நாடி, ராமனை காட்டுக்கு அனுப்பிய கைகேயியின் செயல், அவளை ஏசிய பரதனின் போக்கு, பரதனை லக்ஷ்மணன் சந்தேகித்தது. சீதையை தனியே விட்டுச் செல்ல லக்ஷ்மணன் சம்மதித்தது. சீதையை அபகரிப்பதில் ராவணனின் நோக்கம், வாலியை விட்டு, சுக்ரீவனின் நட்பை நாடிய ராமனின் அணுகுமுறை, வாலி வதம், ராவணனை விட்டு விலகி, ராமன் பக்கம் சேர்ந்த விபீஷணனின் செயல், சீதை அக்னியில் பிரவேசம் செய்ய முனையும் அளவுக்கு அவளை ராமன் நடத்திய விதம், சீதை மீது கூறப்பட்ட புகார் காரணமாக ராமன் எடுத்த நடவடிக்கை… போன்ற நிகழ்ச்சிகள், விஷயங்கள் பற்றி வாதப் பிரதி வாதங்கள் நிறையவே இருக்கின்றன.

வால்மீகி ராமாயணத்தையொட்டியும், அதுபற்றிப் பெரியவர்கள் கூறியுள்ளதை மனதில் வைத்தும், நான் எழுதிய இந்தத் தொடரில் ஆங்காங்கு இவை பற்றி என் கருத்துக்களைக் கூறி இருக்கிறேன். இவை தீர்ப்புகளாக இருக்காது. அம்மாதிரி அவற்றை வாசகர்கள் எடுத்துக் கொள்ளவும் வேண்டாம். பல கருத்துக்களிடையே தோன்றுகிற மற்றொரு கருது்தாக அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு வாசகர்களைக்கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே நான் குறிப்பிட்ட மாதிரி, சில நிகழ்ச்சிகள் பற்றி பொதுவாகப் பரவியுள்ள விவரங்கள், வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபடுகிறபோது அவற்றை நான் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக கம்ப ராமாயணம், வால்மீகியின் இதிஹாசத்திலிருந்து மாறுபடுகிற இடங்களில், முக்கியமான வற்றையும் அந்தந்த இடங்களில் நான் எடுத்துக் கூறி இருக்கிறேன்.

ஒரு உபதேசத்தைச் செய்வதில் கையாளப் படும் மூன்று வித அணுகு முறைகளை, காமகோடி பீடத்தை அலங்கரித்த மஹாஸ்வாமிகள் ஒரு முறை விவரித்திருந்தார். வேதம்போன்ற நூல்கள் கூறும் வழிமுறைகள் கட்டளைகள். அவை ஒரு மேலதிகாரி விதிக்கும் உத்தரவுகள் போன்றவை, அம்மாதிரியான உபதேசங்கள், ப்ரபுஸம்மிதம்” என்று கூறப் படுகின்றன.

ரிஷிகள், ஞானிகள் போன்ற உயர்ந்த நிலையை எட்டிய மனிதர்கள் கூறும் அறிவுரைகள், ஒரு நண்பன் எடுத்துரைக்கும் நல்வார்த்தைகளைப் போன்றவை. அவை ”ஸுஹ்ருத்ஸம்மிதம்” என்று வர்ணிக்கப் படுகின்றன. கண்டிப்பும் இல்லாமல், உபதேசம் செய்யும்தோரணையும் இல்லாமல், நிகழ்ச்சிகளின் போக்கில் சில நூல்களில் எடுத்துக் காட்டப் படுகின்ற நன்னெறிகளும்உண்டு.

அவை பேச்சுவாக்கில், தற்செயலாக ஒரு மனைவி தன் கணவனுக்குச் சுட்டிக் காட்டும் உண்மைகள், இவை ”காந்தாஸம்மிதம்” என்று கூறப் படுகின்றன. மஹாபாரதம்ஈ ராமாயணம் போன்றவற்றில் காணப் படும் உபதேசங்களும், அறிவுரைகளும் இது போன்றவையே- என்று மஹாஸ்வாமிகள் தனது உரை ஒன்றில் குறிப் பிட்டிருக்கிறார்.

இப்படி கட்டளைகளாகவும் இல்லாமல், ஞான உரைகளாகவும் இல்லாமல் வாழும் வழி முறைகளை இதமாக எடுத்துச் சொல்கிற வால்மீகி ராமாயணம் என்ற இதிகாசத்தை, பயனுள்ள நல்ல முறையில் நான் எழுதி முடிப்பதற்கு அந்த ஸ்ரீராமனே அருள் புரிவானாக!
…………………………………….

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here