வால்மீகி ராமாயணம்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ
🌸..பாகம்-138🌸
…..

யுத்த காண்டம்.

……………………
அத்தியாயம்-30
………………………………..
ராவணனின் துக்கம்
………………………………………….
பலவாறாக லக்ஷ்மணனைக் கொண்டாடிய பிறகு ராமர், வானரர் படைத் தலைவர்களில்ஒருவனாகிய ஸுக்ஷணனை அழைத்து, உடம்பைத் துளைத்த அம்புகளினால் ஏற்பட்ட வலி முழுமையாக நீங்கி, லக்ஷ்மணன் விரைவில் உடல் நலம் பெறும் வகையில் அவனுக்கு மருத்துவம் செய்வாயாக! லக்ஷ்மணன் மட்டுமின்றி, விபீஷணன் மற்றும் காயமுற்ற வானர வீரர்கள் அனைவருக்குமே உன் மருத்துவம் தேவைப் படுகிறது” என்று கூறினார்.

ஸுக்ஷணன் ஒரு மூலிகையின் மணத்தை மூக்கின் வழியாக லக்ஷ்மணன் இழுக்குமாறு செய்தான். சிறிது நேரத்தில் லக்ஷ்மணனுக்கு உடல் வலி நீங்கியது. அவன் குணமடைந்தான்.

பின்னர் ராமர் கூறியபடி விபீஷணனுக்கும், மற்றவர்களுக்கும் ஸுக்ஷணன் மருத்துவம் செய்ய, அவர்களும் குணமடைந்தார்கள். ஸுக்ரீவன் , ஜாம்பவான் ஆகியோரும் மற்ற வானர வீரர்களும் பெரிதும் மகிழ, இந்திரஜித்தினால் தாக்கப் பட்டவர்கள் அனைவரும் உடல் நலம் முழுமையாகத் திரும்பப் பெற்றனர்.

இதற்கிடையில் ராவணனுடைய அமைச்சர்கள் அவனை அடைந்து, ” பெரும் புகழ் வாய்ந்த உங்கள் மகன் இந்திரஜித், விபீஷணனின் உதவி பெற்ற லக்ஷ்மணனால் போர்க்களத்தில் கொல்லப் பட்டான்.

தோல்வி என்பதை இது வரை அறியாத இந்திரஜித், வீழ்ந்தான். லக்ஷ்மணனோடு அற்புதமான யுத்தம் புரிந்து, அவன் வானுலகம் எய்தினான்” என்று கூற ராவணன் மயக்கமுற்று வீழ்ந்தான்.

யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

( கம்ப ராமாயணத்தில் நிகும்பில யாகம், லக்ஷ்மணனால் தடுக்கப் பட்ட போது, இந்திரஜித் கவலையுற்றாலும் விரைவில் அந்தக் கவலையிலிருந்து மீண்டு லக்ஷ்மணன் மீது போர் தொடுக்கிறான். அவன் மீது ஏவிய சில அஸ்திரங்கள் வீணாகியபோது சிவ பெருமான் கொடுத்த ஆயுதத்தைப் பிரயோகிக்க இந்திரஜித் முடிவெடுக்கிறான்.யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

வேதியனாகிய ப்ரம்ம தேவன் படைத்தஉலகங்கள் அனைத்தையும், ஒரு பொழுதுக்குள்ளாகவே அழித்துத் தீர்த்து விடக் கூடியவனாகிய பரமசிவனின் ஆயுதத்தை தொடுத்துவிடுவது, என இந்திரஜித் தீர்மானித்தான் என்பதை அறிந்து, வானத்தில் பரவி நின்ற தேவர் கூட்டம் நடுங்கியது. இவன் இப்பொழுதே சர்வ நாசம் புரிந்து விடுவான் என்று எல்லா உலகங்களும் மயங்கித் தடுமாறின” என்று கம்பர் கூறுகிறார்.

இந்திரஜித்துக்கும், லக்ஷ்மணனுக்குமிடையே நடந்த போரை விவரமாக வர்ணிக்கும் கம்பர், விபீஷணனைப் பார்த்து இந்திரஜித்பேசும் காட்சியையும் தனது பாடல்களில் வடிக்கிறார். ” நீர் இருக்கிற வரையில் உயிர் தாங்குகிறமீன்போன்ற அரக்கர்கள், ராவணன் இருக்கும் வரை போரிட்டு, அவனோடு இறந்து விடுவார்கள். இலங்கை ஆகிய ஊர் மட்டும் மீதி இருக்கும்.

நீ ஒருவன் உயிரோடு நின்றிருப்பாய். ஆனால், அரசனாக அமர்ந்திருக்க உனக்குத் துணையாக நிற்க அரக்கர் இனத்தில் வேறு யார் இருப்பார்கள்? என்று கேட்டு விட்டு, இந்திரஜித் மேலும் சொல்கிறான்.

வெற்றித் திறன் படைத்த தோள்களை உடையவனே! அழகிய, வலிமை படைத்த தோள்களை உடைய ராவணன், ராமனது அம்பினால் தாக்கப் பட்டு புழுதி படிந்த தரையைப் பாயாகக் கொண்டு, அதன் மீது புரள்கிற தினத்தில், நியும் அப்புழுதியில் புரண்டு அவன்மீது விழுந்து அழப்போகின்றாயா? அல்லது பகைவரோடு சேர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்வாயா? அண்ணனைக் கொன்றதற்காக அந்த ராமனை வாழ்த்தி வணங்கப்போகிறாயா? இவற்றுள் எதைச் செய்ய நீ துணிந்து விட்டாய்?என்றும் கேட்கிறான்.

பிறகு லக்ஷ்மணன், அவனுடைய தேரை அழித்த போது, இந்திரஜித் இலங்கை திரும்புகிறான். அங்கிருந்து அவன்வேறொருதேரை எடுத்துக் கொண்டு வந்தான் என்று வால்மீகி ராமாயணம் சொல்கிறது. ஆனால் கம்ப ராமாயணமோ இந்திரஜித், ராவணனிடம் அவர்களுடைய படையை மிஞ்சுகிற படை நம்மிடம் இல்லை. நம்அரக்கர் குலம் செய்த பாவத்தினால், நீ அவர்களுடைய பகையைத்தேடிக் கொண்டாய்.

லக்ஷ்மணனுக்கு க்கோபம் வந்தால், அவன் ஒருவனாகத் தனித்து நின்று, மூவுலகங்களையும் அழித்து விடுவான். இத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக அவர்கள் இருப்பதால் ஸுதையின் மீது உள்ள ஆசையை நீ விட்டு விடுவது நல்லது . அப்போது அவர்களுடைய கோபம் தணியும். நம்மோடு போர் செய்யாமல் திரும்பிப்போவார்கள்.

யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

உன் மீது கொண்ட அன்பினால் இதைச் சொல்கிறேனே தவிர, அவர்களிடம் கொண்ட அச்சத்தினால் அல்ல”என்று கூறுவதாக விவரிக்கிறது. இந்த மாதிரியான இந்திரஜித்தின் அறிவுரை வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
கம்ப ராமாயணத்தில், இப்படி இந்திரஜித் கூறியதைக்கேட்ட ராவணன், அவனை இகழ்ந்து பேசுகிறான்.

மனிதனைக் கண்டு இந்திரஜித் அஞ்ச வேண்டாம் என்றும், போரிலிருந்து அவன் விலகலாம் என்றும் கூறுகிற ராவணன் மேலும், நான் இந்தப் பகையைத்தேடிக் கொண்டது- உனக்கு முன்பாக யுத்தம் செய்து இறந்தவர்கள் எல்லாம் இந்தப்பகையை முடித்து விடுவார்கள் என்று நினைத்து அல்ல, இன்னமும் போர் செய்யக் கூடியவராய் உயிருடன் நிற்கிறவர்கள் என் பகைவர்களை வென்று மீள்வார்கள் என்று நினைத்தும் அல்ல, நீ அவர்களை வீழ்த்தி, அந்த வெற்றியை எனக்கு அளிப்பாய்” என்று நினைத்தும் அல்ல, என்னுடைய பலத்தை மனதில் வைத்தே, இந்தக் கொடும் பகையை நான்தேடிக் கொண்டேன்” என்று சொல்கிறான்.

மேலும் ராவணன் சொல்கிறான், நான் வெற்றி பெறவில்லை” என்றாலும் கூட, இந்த ராமனின் பெயர் நிலைத்து நின்றால், அவனால் வெல்லப் பட்ட என் பெயரும், வேதம் நிலைத்திருக்கிற காலம் வரையில் நிலை பெற்றிருக்கும் அல்லவா?மரணம் என்பது தவிர்க்க க் கூடியது அல்லவே? அது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது அன்றோ? இன்று இருப்பவர்கள் நாளை மடிவார்கள்.ஆனால் புகழுக்கு அத்தகைய இறுதி முடிவு என்பது உள்ளதோ?

யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

பின்னர் ராவணனை சமாதானப் படுத்தி விட்டு, இந்திரஜித் மீண்டும் ஒரு தேரை எடுத்துக் கொண்டு வந்து, லக்ஷ்மணனுடன் கடும்போர் புரிகிறான். அப்போது லக்ஷ்மணனிடம் விபீஷணன், ” சிவ பெருமான் அருளினால் இந்திரஜித்துக்குக் கிடைத்துள்ள இந்த தேரும்,வில்லும் அழியாமல் இருக்கும் வரை அவனும் அழிய மாட்டான்” என்றுகூறி, இந்திரஜித்தை மாய்க்கும் உபாயத்தைச் சொல்லித் தருகிறான்.

இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. பின்னர் விபீஷணனின் யோசனைப் படியே போரிட்டு, லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொல்கிறான்.
ராமரின் காலில் இந்திரஜித்தின் தலை கொண்டு வந்து வைக்கப் படுகிறது. பெரும் களிப்புற்ற அவர், லக்ஷ்மணனைத் தழுவி ” தம்பி உடையான்”” பகை அஞ்சான்”- அதாவது தம்பியையுடையவன் பகைக்கு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை- என்று கூறி பாராட்டுகிறார். இது பற்றி இறுதியாக கம்பர் சொல்கிறார்.

இதழ்கள் விரிந்த மலர் மாலை அணிந்த மார்பையுடைய ராமன், லக்ஷ்மணனைப் பார்த்து- ஆண்களில் சிறந்தவனே! இந்த வெற்றி உன்னால் கிடைத்தது அல்ல. உயர்ந்த பண்புகொண்ட ஹனுமானால் கிட்டியதும் அல்ல. இந்த வெற்றிக்குக் காரணம், வேறு எந்த தெய்வத்தின் சிறப்புமல்ல. இது விபீஷணன் தந்த வெற்றி, என்று உண்மையான காரணத்தைக் கூறி பாராட்டி, விட்டு இன்புற்று இருந்தான்” .

இந்திரஜித்தின் தேரையும் வில்லையும் அழித்தால் ஒழிய, அவனை வெல்ல முடியாது என்று லக்ஷ்மணனுக்குச் சொல்லிக் கொடுத்தாலும், நிகும்பிலை யாகத்தை தடுத்தால்ததான் அவனை வெல்ல முடியும்” என்பதை அறிவித்ததாலும், ராமரிடம் இந்தப் பாராட்டை விபீஷணன் பெறுகிறான்போலும், வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு இல்லை.

துளசி தாஸர் தனது ராமாயணத்தில் , இந்திரஜித் போரில் பங்கு பெறும் காட்சியை மிக சுருக்கமாக அமைத்திருக்கிறார். ராமரை நினைத்து அம்புஎய்தி அவனை லக்ஷ்மணன் கொன்று விடுகிறான். இறக்கும்போது இந்திரஜித், ராமரின் இளைய சகோதரன் எங்கே? ராமர் எங்கே? என்று கேட்டுக் கொண்டே இறக்கிறான்.

இப்படி உயிர் பிரியும் நேரத்தில் ராம- லக்ஷ்மணர்களின் பெயர்களை அவன் சொன்னதால், அவனுடைய தாயார் பெரும் புண்ணியம் செய்தவன் என்று ஹனுமானும், அங்கதனும் வாழ்த்துகிறார்கள். இதுவும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
மீண்டும் வால்மீகி ராமாயணத்திற்கு வருவோம்.

யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

யுத்த காண்டம் ராவணனின் துக்கம்

மூர்ச்சை தெளிந்து எழுந்த பின்னர் ராவணன் இந்திரஜித்தை நினைத்து பெரிதும் துக்கித்தான். அரக்கர் படைக்குத் தலைவனே! பெரும் பலம் படைத்தவனே! இந்திரனையே வென்ற நீ எவ்வாறு லக்ஷ்மணனால் வெல்லப் பட்டாய்? கோபமுறும்போது, மந்திர மலையைப் பிளக்க வல்லவன் நீ! எமனை வீழ்த்தக் கூடியவன் நீ, மரணத்திற்கே மரணத்தை அளிக்கக் கூடியவன் நீ! அப்படியிருக்க லக்ஷ்மணன் உனக்கு எம்மாத்திரம்? எமதர்மனைப் பற்றிய என் மதிப்பு இப்போது உயர்கிறது.

அவன் இட்ட கணக்கின் படி காலத்தின் முடிவிற்கு அல்லவா நீ பலியாகி விட்டாய்! தன்னுடைய அரசனின் நன்மைக்காக போரில்உயிரை விடுபவன் சொர்க்கத்தை அடைகிறான். உனக்கு நிச்சயம் நற்கதி தான் கிட்டும்.

ராவணனுடைய புலம்பல் தொடர்ந்தது. இந்திரஜித் இறந்தான் என்ற செய்தியைக்கேட்டு தேவர்களும், ரிஷிகளும் இன்று நிம்மதியுறுவார்கள். இந்திரஜித் இல்லாமல் வனங்கள் நிறைந்த இந்த பூமி எனக்கு வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது. மூவுலகங்களும், சூன்ய பிரதேசங்களாகத் தெரிகின்றன. அந்தப் புரங்களில் இருக்கும் அரக்கப் பெண்களின் அழுகுரல் என் காதுகளில் ஒலிக்கிறது.

எதிரிகளை வாட்டுபவனே! இளவரசு பதவியையும்,இலங்கையையும், அரக்கர்களையும், உன் மனைவிமார்களையும், உனது தாயாரையும் என்னையும் விட்டு விட்டு, நீ எங்கே சென்றாய். நான் மரணத்தை எய்துகிற போது, எனக்கு இறுதிச் சடங்கு செய்யவேண்டியவன் அல்லவா நீ? ஆனால் இப்போது உனக்கு நான் இறுதி சடங்கு செய்ய வேண்டியவன் ஆகி விட்டேனே்! ஏன் இப்படிப் பட்ட முரண்பாட்டை தோற்று வித்தாய்? நீ எங்கே சென்றாய்?

இப்படி அழுது புலம்பிய ராவணன் மனதில், அப்போது ஒரு பெரும் கோபம் உண்டாயிற்று.
…………………………………………………….

..

தொடரும்… 🌸

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here