இந்திரஜித்தின் மாயாஜாலம்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸

🌸..பாகம்-133
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-25

……………………………………..
ராம- லக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர்

…………………………………………
ராவணனின் மகன்களும், சகோதரர்களும் யுத்தத்திற்குப் புறப்பட்ட போது, யானை மீது அமர்ந்து அஸ்தமனமாகும் சூரியனைப்போல், மஹோதரன் காட்சியளித்தான். தேரின் மீது ஏறி அமர்ந்த த்ரிசிரன், பெரும் மழையைத் தாங்கி வரும் கரும்மேகம்போல்தோற்றமளித்தான்.

சிறந்த குதிரைகளால் இழுக்கப் பட்ட தேரில் அமர்ந்த அதிகாயன், மேரு மலை போல் தோன்றினான். மயில் வாகனத்தின் மீது கையில் வேல் தாங்கி ஏறி, அமர்ந்த முருகன்போல , நராந்தகன் காணப் பட்டான்.தேவாந்தகனோ, விஷ்ணு போலவே காட்சியளித்தான். மஹாபார்ச்வன், குபேரன் போல ஒளி வீசத் திகழ்ந்தான். இவர்கள் எல்லாம் இப்படி யுத்தத்திற்குத் தயாரான போது, பூமி நடுங்கியது.

வானர சேனையின் அழிவு, இல்லையேல் மரணம்” என்ற உறுதியுடன், பெரும் படை பின் தொடர இவர்கள் அனைவரும் யுத்த களத்தில் புகுந்த போது, வானரர்களும் கடும் தாக்குதலுக்குத் தயாரானார்கள். இரு படைகளுக்கிடையே பெரும் போர் நிகழ்ந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம், தூக்கி எறியப் பட்ட மலைகளாலும், பிடுங்கி வீசப் பட்ட மரங்களினாலும், மடிந்து தரையில் சாய்ந்து விட்ட அரக்கர்கள் மற்றும் வானரர்கள் ஆகியோர்களின் உடல் களாலும் நிரப்பப் பட்ட பூமி, கடப்பதற்கே கடினமானதாகக் காட்சியளித்தது.

வானர சேனையில் பெரும் நாசத்தை விளைவித்துக் கொண்டிருந்த நராந்தகனை எதிர்க்குமாறு அங்கதனுக்கு ஸுக்ரீவன் கட்டளையிட, அங்கதன், நராந்தகனை எதிர்த்துப்போரிடத் தொடங்கினான். அவர்களுக்கிடையே நடந்த யுத்தத்தின் இறுதியில் நராந்தகன் கொல்லப் பட்டு வீழ்ந்தான்.

இதைத் தொடர்ந்து மேலும் கடுமையான யுத்தம் நடந்தது. இரு தரப்பிலும் பேரழிவு உண்டாயிற்று. இறுதியில் த்ரிசிரனும் தேவாந்தகனும் ஹனுமானால் கொல்லப் பட்டனர். மஹோதரனை நீலன் கொன்றான். மஹாபார்ச்வனை ரிஷபன் வீழ்த்திக் கொன்றான்.

ஆனால், ப்ரம்மனிடமிருந்தே வரம் பெற்ற அதிகாயன், போர்க் களத்தில் பெரும் சாதனைகளைப் புரிந்து கொண்டிருந்தான். அவனைக் கட்டுப் படுத்த முடியாமல், வானர வீரர்கள் அனைவரும் திணறினர். கும்பகர்ணனோ மீண்டும் உயிருடன் வந்து விட்டானோ என்று அதிகாயனைப் பார்த்து நினைத்து அஞ்சிய வானரர்கள், நான்கு திசைகளிலும் சிதறி ஓடினர்.

மஹாவிஷ்ணுவே தங்களை எதிர்க்க வந்து விட்டது போல் பயந்த வானரர்கள், ராமரிடம் சென்று அடைக்கலம் புகுந்தனர்.
அப்போது அதிகாயனைப் பார்த்து வியப் புற்ற ராமர், விபீஷணனிடம் அவனைப் பற்றிய விவரங்களைக்கேட்டார்.

யுத்த காண்டம்பாகம் ராமலக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர்

யார் இவன்? எண்ணற்ற குதிரைகளினால் இழுக்கப் பட்ட சிறப்பு வாய்ந்த தேரில் அமர்ந்து, பரமசிவன் போல் காட்சியளித்துக் கொண்டு, காலனைப்போல் நாசம் விளைவித்துக் கொண்டு திகழ்கின்ற இவன் யார்? நான்கு திசைகளிலும் ஒளி வீசிக் கொண்டு திகழ்கிற வில்லை உடையவனாகக் காட்சியளிக்கிற, இவன் யார்? யுத்த களம் சூரியனைப்போல் ஒளியைப் பரப்பிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிற புலியை ஒத்த இவன் யார்?

இப்படி ராமரால் கேட்கப் பட்ட விபீஷணன், அதிகாயனைப் பற்றிய விவரங்களைக் கூறினான். ராவணனின் மகனாகிய இவன், தந்தைக்கு நிகரான வீரன்.
வேதங்களை முழுமையாக கற்றறிந்தவன். மாயம் நிறைந்த ஆயுதங்களைப் பயன் படுத்துவதில் வல்லவன். குதிரை மீது அமர்ந்தும், யானை மீது அமர்ந்தும் யுத்தம் புரிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவன்.

வாட்போரிலும் சிறந்து விளங்குபவன். எதிரிப் படைகளிடையே பிளவைத்தோற்றுவிப்பதில் எப்படி இவன் திறன் படைத்த வனோ, அதே போல, சமாதானம் செய்வதிலும்கூட இவனுக்கு நிகர் யாருமில்லை. அரசியல் ஆலோசனை கூறுவதில் இவன் பெரும் புகழ் படைத்தவன்.

தான்யமாலினி என்கிற ராவணனின் மனைவிக்குப் பிறந்த இவன் பெயர் அதிகாயன். இவன் இருக்கும் வரை கவலையில்லை என்று இலங்கையில் எல்லோருமே நினைக்கிறார்கள்.
விபீஷணன் மேலும் தொடர்ந்து சொன்னான். பெரும் தவத்தின் மூலமாக இந்த அதிகாயன் பிரம்மனைத் திருப்திப் படுத்த, அவர் இவனுக்கு மாயாசக்தி நிறைந்த பல ஆயுதங்களைக் கொடுத்தருளினார்.

அதைத் தவிர , அசுரர்களிடமிருந்தும் தேவர்களிடமிருந்தும் மரணம் கிடையாது என்ற வரத்தையும் இவன் பெற்றான். ஒளி வீசுகிற இவனுடைய தேரும், கவசங்களும் கூட ப்ரம்ம தேவனால் அளிக்கப் பட்டவையே. அரக்கர்களிடையேஇவன் பெரும் புகழ் படைத்தவன். தேவர்களை வென்றவன்.

யுத்த காண்டம்பாகம் ராமலக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர்

அசுரர்களை வீழ்த்தியவன். பேரறிவு படைத்தவன், இந்திரனின் வஜ்ராயுதத்தை அடக்கியவன். வருணனை நேர் கொண்டு எதிர்த்து வென்றவன். ஆகையால், இவனை வீழ்த்துவதில் சற்றும் தாமதம் காட்டப் படக் கூடாது. கொஞ்சம் தாமதித்தாலும் வானரர் படையை இவன் முழுவதுமாக அழித்து விடுவான்.

இவ்வாறு விபீஷணன்அதிகாயனின் சிறப்புகளை ராமரிடம் எடுத்துக் கூறி க் கொண்டிருந்த போதே அவன், ஒரு சிங்கம் மான் கூட்டத்தை நடுங்கச் செய்வது போல, வானரர் சேனையை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தான். குமுதன், த்விவிதன், மைந்தன், நீலன், ஸபரன்- ஆகிய வானர வீரர்கள் ஒன்றாக முனைந்தும் கூட, அதிகாயனைத் தடுத்து நிறுத்த அவர்களால் முடியவில்லை.

இவ்வாறு வானரர் படையில் நாசத்தை விளைவித்துக் கொண்டிருந்த அதிகாயன் மீது, லக்ஷ்மணனுக்குப் பெரும் கோபம் உண்டாகவே, அவனே சென்று அதிகாயனை பெரும் கோபம் உண்டாகவே, அவனே சென்று அதிகாயனை எதிர்ப்பதற்காக, அவன் முன்பாக நின்றான். தன்னை நேரிடை யாக வந்து எதிர்க்காத வானரர்களைக் கூட தாக்காமல் விட்டு விட்ட அதிகாயன், அப்போது லக்ஷ்மணனைப் பார்த்து, சில வார்த்தைகள் கூறினான்.

ஸுமித்ரையின் மகனே! நீ இன்னமும் ஒரு சிறுவனாகவே இருக்கிறாய். அப்படியிருக்க, காலனையொத்த என்னோடு மோதி உனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கப் போகிறாயா? என்னால் ஏவப் படுகிற அம்புகளைத் தாக்கக் கூடிய சக்தி, இமயமலைக்கும் கிடையாது. ஆகையால், உன்னுடைய வில்லைத் தூக்கி எறிந்து விட்டு, திரும்பிச் செல்வாயாக! மாறாக, உயிரை விடுவது என்ற தீர்மானத்துடன் என்னை எதிர்க்க நீ முனைந்தால், உன்னை உடனடியாக நான் எமனிடம் அனுப்பி வைக்கிறேன்.

இவ்வாறு கர்வத்துடன் பேசிய அதிகாயனைப் பார்த்து லக்ஷ்மணன், வெறும் பேச்சினால் ஒருவன் வீரனாகிவிடுவதில்லை, பெருமை பேசுவதால் மட்டும் ஒருவன் உயர்ந்தவனாகி விடுவதும் இல்லை. உன்னை எதிர்த்து நான் வில், அம்பு தாங்கி நிற்கும் பொழுது, உன்னுடைய பலத்தைக் காட்டுவது தான் அழகு.

வெற்றுப்பேச்சை நிறுத்தி விட்டு, செயலின் மூலமாக உன்னுடைய வீரத்தைக் காட்டுவாயாக! நான் ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி,வளர்ச்சி அடைந்தவனாக இருந்தாலும் சரி, உன்னுடைய மரணமே நான் தான் என்பதை நீ அறிந்து கொள்வாயாக! கெட்ட மதி படைத்தவனே! மஹா விஷ்ணு மூன்று அடிகளால் உலகை அளந்தது,அவர் குழந்தை உருவில் இருந்த போது தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று கூறினான்.

யுத்த காண்டம்பாகம் ராமலக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர்

கோபமுற்ற அதிகாயன், லக்ஷ்மணன், மீது போர் தொடுத்தான். கந்தர்வர்கள், ரிஷிகள், தேவர்கள், எல்லோரும் வான வீதியில் கூடி, அங்கே விளைய இருந்த அற்புதமான யுத்தத்தைக் காணத் தயாரானார்கள். அவர்கள் இருவருக்குமிடையே கடும்போர் நிகழ்ந்தது. ஆனால், லக்ஷ்மணன் தன்னுடைய முழு வீரத்தைக் காட்டியும், பற்பல விதமான ஆயுதங்களை ஏவியும், அதிகாயன் ஒரு பாதிப்பும் இல்லாமல் திகழ்ந்தான்.

இதைக் கண்டு திகைத்து நின்ற லக்ஷ்மணனின் காதில், அப்போது வாயு பகவான், “ ப்ரம்மனிடம் வரம் பெற்ற இந்த அரக்கன், துளைக்க முடியாத கவசத்தை அணிந்திருக்கிறான். ப்ரம்மாஸ்திரத்தை ஏவி மட்டுமே இவனை உன்னால் வீழ்த்த முடியும். இவனிடம் வேறு அஸ்திரங்கள் பயனளிக்காது” என்று கூறினார்.
இப்படி வாயு பகவானால் உபதேசிக்கப் பட்ட லக்ஷ்மணன் ப்ரம்மாஸ்திரத்தை ஏவத் தயாரானான்.

சந்திரனும், சூரியனும் பூமியும் நடுங்கின. லக்ஷ்மணனால் ப்ரம்மாஸ்திரம் ஏவப் பட்டது. அதை வீழ்த்த அதிகாயன் ஏவிய அஸ்திரங்கள் எல்லாம் பயனற்று வீழ்ந்தன. ப்ரம்மாஸ்திரம் அதிகாயனின் தலையைக் கொய்து, அதைத் தரையில் சாய்த்தது. சிறப்பு வாய்ந்த அவனுடைய தலை, இமயமலை என தரையில் வீழ்ந்தது. லக்ஷ்மணனை எல்லோரும் கொண்டாடினார்கள்.

அதிகாயன் கொல்லப் பட்ட செய்தி ராவணனை எட்ட, அவன் பெரும் கவலை கொண்டான். தூம்ராக்ஷனை அழைத்து, ராவணன் தனது கவலையைத் தெரிவித்தான். பெரும் வல்லமையும், பலமும் படைத்த நமது வீரர்கள் பலரும் உயிரிழந்து விட்டனர். கும்பகர்ணனே கூட வீழ்ந்து விட்டான்.

இந்திரஜித்தின் திறமையினால் கட்டுண்ட ராமனும், லக்ஷ்மணனும் ஏதோ ஒரு சக்தியினால் விடுவிக்கப் பட்டு விட்டனர். அது எப்படி நடந்தது என்று கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ராமனையும் லக்ஷ்மணனையும் வீழ்த்தக் கூடிய வீரன், எவனையும் என்னால் காண முடியவில்லை. ரகு குலத்தில் தோன்றிய அந்த ராமன், நாராயணனே தான்.

இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது இலங்கையின் கோட்டையையும், மற்ற இடங்களையும் பாதுகாப்பது தான், முக்கியமாக , ஸீதை தங்கி இருக்கிறஅசோகவனம் மிகவும் கவனமாகப்பாதுகாக்கப் பட வேண்டும். இலங்கையின் எல்லா நுழை வாயில்களும், அசோக வனமும், உன்னால் மிகவும்கவனமாக, மீண்டும், மீண்டும் சோதனையிடப் படவேண்டும்.

வானரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப் படவேண்டும். அவர்களை சாதாரணமாக நினைத்து, சிறிதும் அலட்சியம் காட்டப் பட்டு விடக் கூடாது. வானர சேனை முன்னேறினாலும் சரி. ஓய்வெடுடுத்தாலும் சரி, அவர்கள் மீது நமது கவனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு தூம்ராக்ஷனுக்கு உத்திரவிட்ட ராவணன், தனது மகன்களும் சகோதரர்களும் மடிந்ததை நினைத்துப் பெரிதும் துக்கித்தான்.
அவனுடைய கண்கள் குளமாயின. மனதை சோகம் கவ்விக் கொள்ள, சிந்தனையில் ஆழ்ந்து விட்ட ராவணனைப் பார்த்து வருத்தமடைந்த அவனுடைய மகன் இந்திரஜித், அவனுக்குதைரியம் கூற முற்பட்டான்.

யுத்த காண்டம்பாகம் ராமலக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர்

உங்கள் மகனாகிய இந்த இந்திரஜித் உயிருடன் இருக்கும் பொழுது , நீங்கள் எதை நினைத்தும் கவலைப் படுவதுதகாது. பேரன்பு காட்டுகிற தந்தையே!இந்திரனின் எதிரியாகிய உங்கள் மகன் ஏவுகிற அம்பிலிருந்து தப்பி விடக் கூடிய வல்லமை படைத்தவன் எவனும் இல்லை என்பதை சீங்கள் அறிவீர்கள்.

என்னுடைய அம்புகளினால் வீழத்தப் பட்டு, ரத்தத்தைக் கக்கிக் கொண்டு, ராமனும் லக்ஷ்மணனும் தங்கள் உடல்கள் சிதற, தரை மீது விழுந்து கிடக்கும் காட்சியை நீங்கள் காணப்போகிறீர்கள். தெய்வங்கள் அருளிய பலமும், ஆண்மையும் மிக்க உங்கள் மகன் இந்திரஜித் செய்கிற இந்த சபதத்தைக்கேட்டுக் கொள்ளுங்கள்! குறி தவறாத என்னுடைய அம்புகள் இன்று ராமனையும், லக்ஷ்மணனையும் வீழ்த்திக் கொல்லும்! துவர்களின் தலைவனான இந்திரனும், சூரியனின் மகனாகிய எமனும், மூவுலகங்களைக் காக்கும் விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியான ருத்ரனும், தேவர்களாகிய சாத்யர்களும், அக்னி தேவனும், சந்திரனும், சூரியனும் கண்டு வியக்கும் படி இன்று யுத்த களத்தில் நான் விந்தைகள் புரியப்போகிறேன்.

இப்படி சூளுரை செய்து விட்டு, இந்திரஜித் சிறப்பு வாய்ந்த தனது தேர் மீது ஏறி அமர்ந்தான். யானைகள் மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்து அரக்க வீரர்கள் அவனைப் பின் தொடர்ந்து செல்லத் தயாரானார்கள். முரசுகள் முழங்கின.

சங்குகள் ஊதப் பட்டன.இந்தக் காட்சியைக் கண்டு பேருவகை கொண்ட ராவணன், ” உனக்கு நிகரானவன் ஒருவன் இது வரை எந்த யுத்த களத்திலும் காணப் பட்டதில்லை. மகனே! இந்திரனையே வென்றவன் நீ, ஆகையால் ஒரு சாதாரண மனிதனாகிய ராமனை வெல்வது என்பது உனக்கு எளிதான காரியமே! வென்றுவா! என்று தன்னுடைய மகனை ஆசீர்வதித்தான்.

யுத்த களத்தில் நுழைவதற்கு முன்பாக இந்திரஜித், அக்னி தேவனை வேண்டிக் கொண்டு பூஜைகளைச் செய்தான். அப்போது அக்னிதேவனே ஹோமத் தீயிலிருந்து வெளியே வந்து, இந்திரஜித்தினால் தரப் பட்ட காணிக்கையை ஏற்றுக் கொண்டான். இதைத் தொடர்ந்து இந்திரஜித், தனது வில், தேர், ஆயுதங்கள் ஆகியவற்றின் மீது, மாயா சக்தி படருமாறு மந்திரங்களை ஓதினான்.

இவ்வாறு தனது வழிபாட்டை முடித்து விட்டு, யுத்த களத்திற்குப் புறப் பட்ட இந்திரஜித், சூரியனை நிகர்த்து ஒளி வீசினான்.
போர்க்களத்தில் நுழைந்ததும், தனது அரக்கர் படையை அணி வகுத்து விட்டு, இந்திரஜித்தன்னுடைய மாயா சக்தியைப் பயன்படுத்தி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கொண்டு யுத்தம் புரியலானான்.

வானர வீரர்களை கூட்டம் கூட்டமாக அவன் அழித்தான். கந்தமாதன், நலன், நீளன், ஜாம்பவான் , கஜன் த்விவிதன், ரிஷபன், அங்கதன் ஆகியோர் மட்டுமல்லாமல், ஸுக்ரீவனும் கூட இந்திரஜித்தின் தாக்குதலில் சிக்கித் தவித்தார்கள். நான்கு புறங்களிலும் வானரர் படை நசுங்கிக் கொண்டே இருந்தது. வானரர் படைத் தலைவர்கள் எல்லாம் கடுமையாகத் தாக்கப் பட்டு உடல் முழுவதும் காயங்களை ஏற்றவர்களானார்கள்.

இதன் பின்னர், ராம-லக்ஷ்மணர்கள் மீதும் அம்பு மழை பொழிந்த இந்திரஜித், அவர்களை அம்புகளாலேயேமூடினான். அப்போது ராமர், ” லக்ஷ்மணா! ப்ரம்ம தேவனிடமிருந்து பெற்ற வரத்தின் பலத்தினால், இவன் வானரர் படையை அழித்துக் கொண்டிருக்கிறான். ப்ரம்மதேவரினால் அருளப் பட்ட அஸ்திரத்தை அவன் ஏவும் பொழுது, நாம் செய்யக் கூடியது எதுவுமில்லை.

நாம் இதைத் தாங்கிக் கொள்ள வேண்டியது தான். நாம் நினைவிழந்து விழும் போது வானரர் படையின் கதியை நினைத்தும், நம்முடைய நிலையைப் பார்த்தும், உற்சாக மடையப்போகிற இந்திரஜித், இலங்கைக்குத் திரும்புவான்” என்று கூறினார்.

இம்மாதிரி பேசிய ராமரும், லக்ஷ்மணனும் இந்திரஜித்தின் அஸ்திரங்களினால் தாக்கப் பட்டு நினைவிழந்தனர். தன்னை மறைத்துக் கொண்டு வான வீதியிலிருந்தே அம்புமழை பொழிந்து கொண்டிருந்த இந்திரஜித், ராம- லக்ஷ்மணர்களின் கதியைப் பார்த்து மகிழ, அரக்கர்கள் அவனைக் கொண்டாட, அவன் இலங்கைக்குத் திரும்பித் தனது தந்தையிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தான்.

இதற்கிடையில் நினைவிழந்து வீழ்ந்து விட்ட ராம,- லக்ஷ்மணர்களைக் கண்டு வானர வீரர்கள் அனைவரும் திகைத்து நின்றார்கள். ஸுக்ரீவன், நீலன், அங்கதன், ஜாம்பவான் போன்ற பெரிய வீரர்கள் கூட செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

..

தொடரும்… 🌸
….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here