மஹாபாரதம்-45 துரியோதனனின் மறுப்பு
………
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
……………………………..
உத்யோக பர்வம்
…………………..
துரியோதனனின் மறுப்பு
………………………………………………….
நீங்கள் இப்போது இங்கே வந்தது நன்மையில் முடியாது என்பது என் கருத்து”” என்று கிருஷ்ணரைப் பார்த்துக் கூறிய விதுரர், மேலும் பல விஷயங்களைச் சொன்னார். துரியோதனனுக்கு தான் தான் மிகப் பெரிய அறிவாளி என்ற எண்ணம் உண்டு. அவன் யாரையுமே நம்புவதில்லை.
பெரியவர்களுடைய வார்த்தையை மீறுவதையே வழக்கமாக உடையவன் அவன். அவன் பொய் சொல்ல அஞ்சுவதில்லை. தனது இந்திரியங்களை அவன் அடக்கவில்லை.
யாருக்கும் எந்த நன்மையும் அவன் செய்வதில்லை. மிப் பெரிய கர்வியாகவும் அவன் இருக்கிறான். பல தீய குணங்கள் நிரம்பிய அவனிடம் நல்ல வார்த்தைகளைச் சொல்லி அவனைத் திருத்துவது என்பது நடக்காத காரியம் என்று நான் நினைக்கிறேன்.
பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமா முதலியோரின் பலத்தை அவன் பெரிதும் நம்பியிருக்கிறான். இவர்களை எதிர்க்கப் பாண்டவர்கள் சக்தியற்றவர்கள் என்பது அவனுடைய தீர்மானமான எண்ணம். சொல்லப்போனால், கர்ணன் ஒருவனே கூட தனியே நின்று யுத்தத்தில் வெற்றி பெறக் கூடியவன் என்பது துரியோதனனின் கருத்து. ஆகையால் அவன் சமாதானத்தை ஏற்கப் போவதில்லை.
கிருஷ்ணரே! நன்மைகள் , தீமைகள், ஆகியவற்றின் தன்மைகளை அறியாதவர்களிடம் விவேகமுள்ள மனிதன் பேசுவானா? முழுவதும் செவிடுகள் நிறைந்த சபையில் ஒரு பாடகன் பாடுவானா? எதையும் அறிந்து கொள்ள மறுப்பவர்களிடத்திலும், அறிவில்லாதவர்களிடத்திலும் மரியாதை இல்லாதவர்களிடத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவன் நிந்தனைக்குள்ளாகிறான். துரி யோதனன் விஷயத்திலும் அப்படித்தான்.
துரியோதனன் சபையில் அவனும் , அவனுடைய சகோதரர்களும், உம்மை மதிக்கப் போவதில்லை. மதியாதவர்கள் உள்ள அந்தச் சபையில் செல்வது எந்தவிதத்திலும் நல்லதல்ல என்பது என் கருத்து.
பெரும் படையைத் தன்னுடைய சேர்த்து வைத்து இருக்கும் துரியோதனன், யுத்தத்தில் மிகவும் விருப்பமுள்ளவனாக இருக்கிறான். அவன் பக்கம் சேர்ந்துள்ள அனைவரும், ஏற்கெனவே உம்மிடம் விரோதம் கொண்டவர்கள்.
உங்களுக்கும், அவர்களுக்கும் ஏற்கெனவே சில சண்டைகள் நடந்தன. அதில் நீங்கள் அவர்களை வென்றிருக்கிறீர்கள். உங்களிடம் ஏற்பட்டுள்ள பயத்தால் அவர்கள், இப்போது கர்ணனைத் துணையாகக் கொண்டுள்ள துரியோதனனை அண்டியிருக்கிறார்கள்.
அவர்கள் உயிரைத் துறக்கவும் தயாராக இருக்கிறார்கள். இதனால் துரியோதனனுடைய போர் விருப்பம் மேலும் தூண்டப்பட்டிருக்கிறது. பாண்டவர்களுக்கு ஊசி முனை குத்தும் அளவு கூட இடம் தரக் கூடாது என்று அவன் தீர்மானமாக இருக்கிறான். இப்படிப்பட்ட பாவிகள் நிறைந்த சபைக்கு நீர் செல்வதை நான் விரும்பவே இல்லை.
இவ்வாறு விதுரர் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர், அறிவு, திறமை ஆகிய இரண்டும் நிரம்பிய ஒரு மனிதன், தன்னுடைய நெருக்கமான நண்பனுக்கு ஆலோசனை சொல்வது போல நீங்கள் கூறும் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன” என்று கூறி மேலும் சொன்னார்.
துரியோதனனின் கெட்ட எண்ணங்களை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். அவன் புறம் நிற்கும் பலர் என் மீது கொண்டுள்ள பகையையும் நான் அறிவேன். நியாயமான காரியத்தைச் செய்ய முயல்கிற மனிதன், அந்தக் காரியம் நிறைவேறா விட்டாலும் கூட, அந்தச் செயலுக்குரிய புண்ணியத்தைப் பெறுகிறான்.
இதில் எனக்குச் சந்தேகமில்லை. அம்மாதிரியே நானும் இம்முயற்சியில் இறங்குகிறேன்.
உறவினர்களுக்குள் விரோதம் ஏற்பட்ட நிலையில், எப்படியாவது முயன்று அவர்களுக்குள் சமாதானம் செய்ய முயற்சிப்பதே ஒரு நண்பனின் கடமை. அப்படி முயற்சி செய்யாத நண்பனைப் பண்டிதர்கள் ஒரு நண்பனாகவே கருதுவதில்லை.
சமாதானத்திற்காக நான் எடுத்திருக்கும் முயற்சி பயனற்றதாகப்போனாலும் கூட, யுத்தம் செய்ய வேண்டும் என்று முனைந்து நின்ற கௌரவர்கள், பாண்டவர்கள் ஆகியோரிடையே சமாதானத்தை ஏற்படுத்த கிருஷ்ணன் முயற்சி செய்யவில்லை- என்ற கெட்ட பெயர் எனக்கு வராமற் போகுமல்லவா? பாண்டவர்களுக்கு ஒரு மோசமும் நேராமல், கௌரவர்களுக்கும் சமாதானம் கிட்டும் என்றால், அதற்கான வழியை ஆராய்வது என் கடமை.
அப்படிச் செய்வதால் நான் புண்ணியத்தைத் தான் பெறுவேன். சபையில் எனக்கு அவமானம் நேரிடுமோ என்று நீங்கள் அஞ்சுகிறீர்கள். விதுரரே! பூமியில் இருக்கும் எல்லா அரசர்களும் ஒரு புறத்தில் நின்று என்னை எதிர்த்தாலும், அவர்கள் என்னை வெல்லும் சக்தி படைத்தவர்கள் அல்ல.
சிங்கத்தின் முன்னே நிற்க மற்ற மிருகங்களுக்கு எப்படித் தைரியம் வரும்? ஆகையால், எனக்கு எந்தத் தீங்கும் அந்தச் சபையில் நேர்ந்து விடாது. எனக்கு என்ன நேருமோ என்ற கவலை உமக்கு வேண்டாம். இவ்வாறு விதுரரிடம் பேசிய கிருஷ்ணர், அதன்பிறகு ஓய்வெடுத்தார்.
அடுத்த தினம் கிருஷ்ணர், கௌரவர்களால் வரவேற்கப் பட்டு அவர்களுடைய சபையில் நுழைந்தார். என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக பல ரிஷிகளும் வந்திருந்தார்கள். மன்னர்கள் கூட்டம் கூடியிருந்தது.
எல்லோருக்கும் அவரவருக்குத் தகுந்த மரியாதைகள், துரியோதனனாலும் அவனுடைய தம்பிகளாலும் செய்யப் பட்டன. அதன் பிறகு சபையோரை நோக்கி கிருஷ்ணர் தன் வணக்கத்தைச் செலுத்தி விட்டு,திருதராஷ்டிரனைப் பார்த்து தான் வந்த காரியத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
இரு தரப்பிலும் உள்ள போர் வீரர்களுக்கு எந்த அழிவும் ஏற்படாமல் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், அந்தச் சமாதானத்தை உம்மிடம் கேட்டுப் பெறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
பாண்டவர்கள், கௌரவர்கள், ஆகியோரைக் கொண்ட உங்கள் குலம், இப்பொழுது மற்ற எல்லா அரசர் குலங்களைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது. இவ்வளவு மகிமை பொருந்திய இந்தக் குலத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இப்பொழுது உங்களிடம் இருக்கிறது.
சூதாட்டம் போன்ற மோசமான வழிகளில் கௌரவர்கள் இறங்கியபோது, நீங்களும் அவர்களுக்குத் துணையாக இருந்தது வருந்தத்தக்கதே! இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை. நீங்கள் விரும்பினால், இப்போதும் பகையைத் தணிக்கச் செய்து யுத்தத்தைத் தடுக்க முடியும்.
யுத்தம் என்ற பேராபத்தைத் தடுப்பது இப்போது நம் இருவர் கையில் உள்ளது. உங்களுடைய மகன்களை அடக்குவது உங்கள் பொறுப்பு. பாண்டவர்களை அடக்குவது என் பொறுப்பு. நாம் இருவரும் சேர்ந்து முயற்சித்துச் சமாதானத்தை உண்டாக்குவோம், பாண்டவர்களும், கௌரவர்களும் சேர்ந்து உமது பின்னால் நின்றால், நீர் உலகத்தையே ஆளும் தகுதி படைத்தவராவீர்!
அரசே! முன் போல் பாண்டவர்களையும் உம்மோடு இணைத்துக் கொண்டு உலகனைத்தையும் வெல்ல முயற்சி செய்வீராக! சண்டை நடந்து அதில் கௌரவர்களுக்கு அழிவு ஏற்பட்டாலும் சரி, பாண்டவர்களுக்கு அழிவு ஏற்பட்டாலும் சரி, அதன் பிறகு உங்களுக்கு மன நிம்மதி ஏற்படும் என்று கருதுகிறீரா? அல்லது மிகப் பெரிய அளவில் மக்கள் மாண்டு போனால் அது தான் உமக்குத் திருப்தி அளிக்கப் போகிறதா? உங்களுடைய உத்திரவை ஏற்று பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் தலை மறைவு வாழ்க்கையையும் அனுபவித்த பாண்டவர்களுக்குத் தூதனாக நான் வந்திருக்கிறேன்.
உங்கள் கட்டளையை ஏற்று, அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்து விட்டார்கள். இப்பொழுது உங்கள் பங்கு தான் செய்யாமல் மீதி நிற்கிறது. அவர்களுக்குரிய ராஜ்யத்தை அவர்களிடம் கொடுத்து விடுங்கள். உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக, பாண்டவர்கள் பல துன்பங்களை அனுபவித்து விட்டார்கள்.
இனியாவது நீங்கள் அவர்களுக்குத் தந்தையாக இருந்து, அவர்களுக்கும் நல்லது செய்ய முயற்சிப்பீராக!
இவ்வாறு திருதராஷ்டிரனுக்கு அறிவுரைகளைச் சொன்ன கிருஷ்ணர் மேலும் சொன்னார் , இந்தச் சபையில் தர்மத்தை அறிந்தவர்கள் பலர் நிறைந்திருக்கிறார்கள். எந்தச் சபையில் பெரியவர்கள் பார்த்திருக்கும் போது தர்மம் அதர்மத்தினால் வெல்லப் படுகிறதோ, எந்தச் சபையில் உண்மை பொய்யினால் நசுக்கப் படுகிறதோ, அந்தச் சபையில் உள்ளோர் அனைவரும் கெடுக்கப் பட்டவர்கள் ஆகிறார்கள்.
அப்படிப்பட்ட சபையாக இது மாற வேண்டாம். அரசே! பாண்டவர்களை உயிரோடு எரித்து விட துரியோதனாதிகள் செய்த முயற்சி தோல்வியுற்றது. ஆனால், அதற்குப் பிறகும் கூட பாண்டவர்கள் உம்மிடம் அன்புள்ளவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.
துரியோதனாதிகளின் பேச்சைக்கேட்டு பாண்டவர்கள் நீங்கள் இந்திரப் பிரஸ்தத்திற்குத் துரத்தினீர்கள், அதன் பிறகும் கூட உங்கள் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை குறையவில்லை. பாண்டவர்களின் செல்வத்தைக் கண்டு சகிக்காத சகுனி, அவர்களுடைய செல்வத்தைப் பறித்து விடுவதற்காக இழிவான சூதாட்டத்தில் இறங்கினான்.
அதையும் நீர் ஆசீர்வதித்தீர். அப்போதும் பாண்டவர்கள் உம்மீதும் மரியாதை வைத்திருந்தனர். திரௌபதி துரியோதனனாதிகளினால் அவமானப் படுத்தப் பட்ட போதும் கூட, பாண்டவர்கள் உம் மீது வைத்திருந்த மதிப்பைக் குறைத்துக் கொண்டு விடவில்லை.
உமது கட்டளையை ஏற்றுப் பாண்டவர்கள் வனவாசமும் தலை மறைவு வாழ்க்கையும் அனுபவித்து விட்டார்கள். அதன் பிறகும் கூட உங்களிடமிருந்து நியாயத்தை த்தான் எதிர் பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் நீங்கள் ராஜ்யத்தில் அவர்களுக்கு உரிய பங்கைக் கொடுப்பதே முறையாக இருக்கும். தூது வந்த நான் என் கடமையைச் செய்து விட்டேன். உம்மை நிர்ப்பந்தப் படுத்தும் உரிமை எனக்குக் கிடையாது. எது நல்லதோ அதைச் செய்வீராக!
கிருஷ்ணர் பேசி அமர்ந்த பின் சபையில் மௌனம் நிலவியது.
அவருக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த நேரத்தில் பரசுராமர் எழுந்து பேசினார். திருதராஷ்டிர மன்னரே! நான் சொல்வதைச் சற்று கவனமாகக்கேள். நான் கூறுவதில் நன்மை இருந்தால் அதை ஏற்றுக் கொள்.
அதில் நன்மை இல்லை என்று தோன்றினால் அதை நிராகரித்து விடு. தம்போத்பவன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் பெரிய பராக்கிரமம் கொண்டவனாக இருந்தான். தனக்கு நிகரான வீரன் எவனுமே கிடையாது என்ற கர்வம் அவனுக்குத் தோன்றியது.
அப்போது பண்டிதர்கள் சிலர், அவனை விட வீரர்களான இருவர் இருப்பதாக அவனிடம் கூறினார்கள். அவர்கள் யார் என்று தம்போத்பவன் விசாரித்தான். அப்பொழுது அந்தப் பண்டிதர்கள் நரன் என்றும், நாராயணன் என்றும் பெயர் கொண்ட இரண்டு தபஸ்விகள் மானிட உலகத்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்று கருத்து நிலவுவதாகவும் தம்போத்பவனுக்குத் தெரிவித்தார்கள்.
அவர்களுடைய வார்த்தையைக் கேட்ட தம் போத் பவன் பெரும் கோபமுற்றான். நரன், நாராயணன் என்ற அந்த இருவரையும் தேடி அலைந்தான். கடைசியில் அவர்களைக் கண்டு பிடித்து விட்டான். அவர்களோ மிகவும் மெலிந்திருந்தார்கள். தவத்தினால் தங்கள் உடலையே உருக்கிக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
தம்போத்பவன் அவர்களைப் பார்த்து யுத்தத்திற்கு அழைத்தான். அவர்கள் அவனுக்கு நல்லதைச் சொல்லி, தங்களிடம் அவனுடைய பராக்கிரமத்தைக் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால் அவனோ யுத்தத்திலேயே விருப்பமுள்ளவனாக இருந்தான். யுத்தம் தொடங்கியது. தம்போத்பவன் பல அஸ்திரங்களைப் பொழிந்தான். அவற்றால், நர, நாராயணர்களை எதுவும் செய்ய முடியவில்லை.
அவர்கள் தம்போத்பவனை எளிதில் வென்று விட்டார்கள். அதன் பிறகு நர, நாராயணர்களை தம்போத்பவன் சரணடைந்தான். அப்போது அவர்கள் அவனுக்குச் சில நல்ல வார்த்தைகளைக் கூறினார்கள்.
தான் என்ற கர்வத்தை அடக்கி விடு. உன்னுடைய மக்களை நல்ல முறையில் காப்பாற்றும் வழிகளைத்தேடு. எதிராளியின் பலத்தை அறியாமல் எந்த யுத்தத்திலும், இறங்காதே” என்று உபதேசித்தார்கள், பிறகு அவர்களிடம் விடை பெற்றுச் சென்றான் தம்போத்பவன்.
இப்படிப்பட்ட வீரச் செயலைப் புரிந்த நர, நாராயணர்கள் தான் இப்பொழுது அர்ஜுனனாகலும், கிருஷ்ணனாகவும் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள். நான் சொல்வதில் உனக்குச் சந்தேகம் வரக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.
இவர்கள் நர, நாராயணர்களா என்பதில் நீ சந்தேகம் கொண்டால், அது உனக்கு அழிவைத் தான் ஏற்படுத்தும். மன்னனே! பாண்டவர்களையும் உன்னுடைய மகன்களாகவே கருதி, அவர்களையும் கௌரவர்களுக்கு நிகராக நடத்தி விடு.
உன் குலம் உலகத்தில் மிகவும் மகிமை வாய்ந்தது. அது அப்படியே நீடிக்க வேண்டுமானால் சமாதானம் தோன்றுவதற்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பை நழுவ விட்டு விடாதே.!
இப்படி பரசுராமர் பேசிய பிறகு கண்வர் என்ற மகரிஷியும் எழுந்து, பரசுராமர் பேசியதை ஆமோதித்தார். இந்திரனின் தேரோட்டியான மாதலி என்பவனின் வரலாற்றைக் கூறி, அதில் கருடன் சம்பந்தப்பட்ட போது, கர்வ முற்ற அவனுடைய அகங்காரத்தை விஷ்ணு எப்படி அடக்கினார் என்பதை விவரித்தார்.
இந்த வரலாற்றைச் சொல்லிபப் பூமியில் கிருஷ்ணராக அவதாரம் செய்திருப்பது விஷ்ணுவே என்று சுட்டிக் காட்டினார். கன்வர் இந்தக் காரணங்களினால் துரியோதனன் சமாதானத்தையே ஏற்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.
துரியோதனனோ, கன்வருடைய உபதேசத்தை லட்சியம் செய்யாமல், மகரிஷியே! கடவுள் என்ன காரியத்திற்காக என்னைப் படைத்தாரோ, அது நடக்கட்டும். எனக்கு என்ன கதி நேர வேண்டும் என்று விதி தீர்மானத்திருக்கிறதோ அந்த கதி நேரட்டும்.
உம்முடைய உளறல் நிறைந்த யோசனைகள் எனக்குத் தேவையில்லை.” என்று கூறித் தன் தொடையைத் தட்டிக் காட்டினான். இதைக் கண்ட கண்வர் மிகவும் கோபமுற்றார். துரியோதனா! தொடையைத் தட்டிக் காட்டி என்னை அவமதிக்க நினைத்ததால் உனக்கு உன் தொடையிலே தான் மரணம் ஏற்படப்போகிறது” என்றுசாபமிட்டார்.
இதன் பிறகு நாரதர் துரியோதனனுக்கு உபதேசம் செய்தார். யுத்தத்தைத் தவிர்த்துச் சமாதானத்தை ஏற்குமாறுஅவனுக்கு அறிவுரை கூறினார். அதைக்கேட்ட திருதராஷ்டிரன், நாரதரே! நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்.
ஆனால், என் மகனைக் கட்டுப் படுத்தும் சக்தி எனக்கு இல்லாமற் போய் விட்டது” என்று கூறி விட்டு, கிருஷ்ணரைப் பார்த்து, கிருஷ்ணா! கெட்ட மதி படைத்தவனாகி விட்ட துரியோதனனை நல்வழியில் திருப்புவது உன் பொறுப்பு. அவ்விதம் உன்னால் செய்ய முடிந்தால் நீ எல்லோருக்கும் நல்லதைச் செய்தவனாவாய்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணர், துரியோதனனுக்கு மேலும்பல அறிவுரைகளைக் கூறினார். துரியோதனா! நீ பெரிய அறிவாளிகளின் குலத்தில் பிறந்தவன் . கல்வியில் யாருக்கும் நீ இளைத்தவனல்ல. நீ ஆசாரங்களைக் கடைப் பிடிப்பவன் . நல்ல குணங்கள் உன்னிடம் நிரம்பியிருக்கின்றன.
ஆகையால் தீயவர்கள் செல்லும் பாதையில் நீ செல்லக் கூடாது. உன்னுடைய தந்தையும், பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றவர்களும் சமாதானத்தையே விரும்புகின்றனர். நல்ல வார்த்தையை ஏற்காத மனிதன் இறுதியில் துன்பத்தைத் தான் அடைவான்.
நீ நம்புகிற கர்ணன், சகுனி, துச்சாசனன் போன்றவர்கள் பீமனை எதிர்க்கும் திறன் படைத்தவர்கள் அல்ல. அர்ஜுனனை எதிர்த்து அவர்களால் போர் செய்ய முடியாது. யுத்தம் நடந்து பெரும் நாசம் விளைந்து மக்கள் அழிவதால், உனக்கு என்ன பயன் ஏற்பட ப்போகிறது? குலத்தையே அழித்தவன் என்ற அவப்பெயர் உனக்கு உண்டாக வேண்டாம். நான் சொல்வதைக்கேள்.
சமாதானம் செய்து கொள். பாண்டவர்கள் உன் தந்தையையே மஹாராஜன் என்ற பதவியில் அமர்த்துவார்கள். உன்னை இளவரசனாக்குவார்கள். தேடி வரும் இந்த அமைதியை உதறாதே. பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்.
இவ்வாறு கிருஷ்ணர் பேசிய பிறகு, பீஷ்மர், துரோணர்., விதுரர், ஆகியோரும் அந்த வார்த்தைகளை ஆமோதித்துப் பேசினார்கள். சமாதானத்தை ஏற்கும் படி துரியோதனனை வற்புறுத்தினார்கள். அதன் பிறகு திருதராஷ்டிரனும் கூட துரியோதனனிடம் சமாதானத்தை ஏற்கும் படி, மிகவும் மன்றாடிக்கேட்டுக் கொண்டான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, துரியோதனன் எழுந்து பதில் சொன்னான். கிருஷ்ணரே! என்ன காரணத்தினாலோ பாண்டவர்கள் பக்கம் உமக்கு அன்பு மிகுதியாக இருக்கிறது.ஆகையால், இரு தரப்பின் பலன்களை அறிந்திருந்தும் கூட நீங்கள் என்னையே மட்டம் தட்டிப் பேசுகிறீர்கள்.
பீஷ்மர், துரோணர், விதுரர், ஆகியோரும் கூட என்னைத் தான் அவமதித்துப் பேசுகிறார்கள்.நானும் எவ்வளவோ முறை யோசித்துப் பார்த்து விட்டேன். என்னிடம் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சூதாட்டம் பற்றிப் பேசினீர்கள். சூதாட்டத்தைப் பாண்டவர்கள் விரும்பி ஏற்றனர்.
அதில் சகுனியிடம் அவர்கள் தோல்வியுற்றார்கள். அதனால் ராஜ்யத்தை இழந்தார்கள். ராஜ்யத்தை இழந்த காரணத்திற்காகக் காட்டிற்குச் சென்றார்கள். இதில் என் மேல் குற்றம் வந்ததாக நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்? சூதாட்டத்தை விரும்பி ஏற்றது அவர்கள் தவறா, அல்லது என் தவறா? பீமன், அர்ஜுனன் ஆகியோரின் வீரத்தைப் பற்றி ப் பேசினீர்கள்.
ஏன்? எங்கள் தரப்பில் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் போன்றவர்கள் உள்ளார்களே? அவர்களை எதிர்க்க வல்லவர்கள் யார்? அப்படியே கூட யுத்தத்தில் தோல்வியுற்றால், நாங்கள் யுத்தக் களத்திலேயே உயிர் நீத்து வீர சொர்க்கத்தை அடைவோம்.
பயத்தினால் அஞ்சி இந்திரனிடம் கூட பணிந்து நிற்க மாட்டோம் என்பதை மட்டும் அறிந்து கொள்வீராக! ஆகையால் முன்பு எங்கள் தந்தை அனுமதித்திருந்த ராஜ்யத்தின் பகுதியையும் கூட நாங்கள் பாண்டவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. இழந்த ராஜ்யத்தைப் பாண்டவர்கள் மீண்டும் பெற முடியாது.
ஊசி முனையால் குத்தப் படுகிற அளவு உ ள்ள இடம் கூட கொடுக்கவும் நான் தயாராக இல்லை.
இவ்வாறு பேசிய துரியோதனனைப் பார்த்து கிருஷ்ணர், அவன் செய்த தீய செயல்களையெல்லாம் நிளைவுப் படுத்திச் சொல்லி, இவ்வளவு தீமைகளைச் செய்திருக்கிற நீ, உன்னிடம் குற்றமில்லை என்று நினைப்பது வினோதமாகத் தான் இருக்கிறது.
நீ சமாதானத்தை ஏற்கவில்லை என்றால், உனக்கும், உன்னைச் சார்ந்தவர்களுக்கும் அழிவு ஏற்படுவது நிச்சயம்” என்று சொன்னார். இதன் பிறகு துரியோதனன், எல்லோரையும் அலட்சியம் செய்து, சபையை விட்டு வெளியேறினான். இதைக் கண்ட பீஷ்மர், எந்த நல்ல வார்த்தையையும் ஏற்காத இந்த துரியோதனனால், க்ஷத்ரியர்களுக்குப் பெரும் நாசம் ஏற்படப் போகிறது” என்று மனம் நொந்து கூறினார்.
இந்த நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த திருதராஷ்டிரன், தன் மனைவி காந்தாரி அறிவுரை சொன்னால் துரியோதனன் ஏற்பான் என்று நம்பி, அவளை சபைக்கு அழைத்து வருமாறு விதுரரிடம் கேட்டுக் கொண்டான்.