ஆதிவம்சாவதரணப் பர்வம்

மஹாபாரதம்

பேசுகிறது-சோ
……………………………..
உத்யோக பர்வம்
…………………..

இரு தரப்பிலும் யுத்த நோக்கம்

……………………………
துரியோதனன் பீஷ்மரைப் பார்த்துச் சொன்னான். வீரம், யுத்தப் பயிற்சி, அஸ்திரங்களைப் பற்றிய அறிவு, எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்கும் திறமை, பிறப்பு- என்று எதை எடுத்துக் கொண்டாலும், பாண்டவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல.

இப்படி எல்லா விஷயங்களிலும் அவர்களுக்குச் சமமானவர்களோகவே நாங்கள் இருக்கும் போது, அவர்கள் பக்கம் தான் வெற்றி என்று நீங்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? ஒன்று சொல்கிறேன். உங்களையோ , துரோணரையோ, கிருபரையோ, உங்களைப்போன்றோரையோ நம்மி நான் யுத்தத்தை ஆரம்பிக்க நினைக்கவில்லை.

கர்ணன், துச்சாசனன், ஆகிய இருவர் உதவியைக் கொண்டு நானும் முனைந்து, பாண்டவர்களை வெல்வோம்.
துரியோதனன் பேச்சைக் கேட்டு கவலையுற்ற திருதராஷ்டிரன், விதுரரைப் பார்த்து, ” கர்ணனின் பலத்தை நம்புகிற துரியோதனனுக்கு மதி மயக்கம் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை” என்று வருத்தத்தோடு கூறினான்.
விதுரர் சொன்னார், நம்மைக் கண்டு மற்றவர்கள் அஞ்ச வேண்டும் என்று நினைப்பதே தவறு.

 

எந்த மனிதனைக் கண்டு மற்ற யாருக்கும் பயம் தோன்றுவதில்லையோ, எவன் மற்றவர்களைக் கண்டும் பயப் படாமல் இருக்கிறானோ, அவனே சிறந்த மனிதன் எனப் படுகிறான். உயிர்களுக்கெல்லாம் நண்பனாக அவன் போற்றப் படுகிறான்.ஆகையால் மற்றவர்களை அச்சுறுத்துகிறேன் என்பது பெருமைக்குரிய விஷயமல்ல.

மேலும் உறவினர்களிடையே ஒற்றுமை மிக அவசியமானது. உறவினர்கள் ஒருவருக்கொருவர் விரோதித்து க் கொண்டால், எல்லோருக்கும் அழிவே ஏற்படும். ஒரு வேடன் பறவையைப் பிடிப்பதற்காக வலையை விரித்து வைத்திருந்தான். எப்பொழுதுமே சேர்ந்து திரியக் கூடிய இரண்டு பறவைகள். அந்த வலையில் சிக்கி விட்டன.

ஆனால் அவை இரண்டும் ஒற்றுமையாக இருந்து, அந்த வலையையும் எடுத்துக் கொண்டு மேலே பறந்து விட்டன. இதைப் பார்த்த வேடன், பறவைகளைப் பிடிப்பதற்காகவும், தனது வலையை மீட்டுக் கொள்வதற்காகவும் அவற்றைப் பின் தொடர்ந்து தரையில் ஓடினான்.

மஹாபாரதம் இரு தரப்பிலும் யுத்த நோக்கம்

இதைப் பார்த்த ஒருவர்,மேலே பறக்கிற பறவைகளைப் பின் தொடர்ந்து பூமியில் ஓடுவதால் என்ன பயன் கிட்டப்போகிறது.? என்று அந்த வேடனைக்கேட்டார். அவன் சொன்னான், இந்த இரண்டு பறவைகளும் சேர்ந்திருப்பதால் என்னுடைய வலையைப் பிடித்துக் கொண்டு பறக்கின்றன.

இந்த இரு பறவைகளிடையே ஒற்றுமை கெடும் போது- வலையும் சரி, அந்தப் பறவைகளும் சரி, என் வசமாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படி ஓடுகிறேன் . அவை பிரியும் சமயத்தை எதிர் பார்த்து ஓடுகிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் அவன் எதிர் பார்த்த படியே அந்தப் பறவைகள் ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக் கொண்டன. வலையை தன் புறமாக இழுக்க ஒவ்வொரு பறவையும் முயற்சித்தது. இந்த முயற்சியினால் இரு பறவைகளும் பறப்பதை விட்டுப் பூமியில் விழுந்தன.

வேடன் பறவைகளையும் பிடித்தான், வலையையும் மீட்டான். சண்டையிட்டுக் கொள்கிற உறவினர்களுக்கு இந்தப் பறவைகளின் கதி தான் நேரும். ஆகையால் தர்ம புத்திரனுடன் சமாதானம் செய்து கொண்டு கௌரவர்களும், பாண்டவர்களும் ராஜ்யத்தைப் பகிர்ந்து கொள்வதே எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

பாண்டவர்களின் பலத்தை நினைத்து ஏற்கெனவே பயந்து கொண்டிருந்த திருதராஷ்டிரன், விதுரரின் பேச்சைக்கேட்டு மேலும் கவலையுற்றான். துரியோதனனைப் பார்த்து, மகனே, பெரியோர்களின் பேச்சைக்கேட்டு அதன் படி நடப்பது நற்பயன் அளிக்கும். பீஷ்மர், துரோணர், கிருபர்- போன்றவர்களின் வார்த்தையைக்கேள்.

அவர்களை அலட்சியம் செய்து நடக்காதே. அவர்கள் தர்மம் அறிந்தவர்கள். பாண்டவர்களோடு சகோதரப் பாசத்துடன் நடந்து கொண்டு, ராஜ்யத்தில் அவர்களுக்குரிய பங்கைத் தருவது தான் எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கான வழி. தயவு செய்து அதை மறுக்காதே. – என்று கூறினான் திருதராஷ்டிரன்.

திருதராஷ்டிரனின் இந்த அறிவுரையை ஏற்க துரியோதனன் மறுத்தான். பின்னர் அந்தச் சபை கலைந்தது. அதன் பிறகு திருதராஷ்டிரன், வியாசரையும், தன் மனைவி காந்தாரியையும் வரவழைத்தான். அவர்கள் முன்னிலையில் , சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சில வார்த்தைகளைக் கூறினான்.

மஹாபாரதம் இரு தரப்பிலும் யுத்த நோக்கம்

எங்கே உண்மையும், தர்மமும் நிலைத்திருக்கின்றனவோ அங்கே கிருஷ்ணர் இருப்பார். அவர் இருக்கும் இடத்தில் வெற்றியும் இருக்கும். உலகங்களுக்கெல்லாம் தலைவர் கிருஷ்ணர். அவரைச் சரணடைந்தால், மனிதனின் மன மயக்கம் அகலும்.

திருதராஷ்டிரன், சஞ்சயா! கிருஷ்ணரின் மகிமையையும், உலகங்களுக்கெல்லாம் அவர் தலைவர் என்பதையும் உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என் மனதார அப்படிப் புரிந்து கொள்ளஎன்னால் இயலவில்லை. அவருடைய மகிமையை மனதாரப் புரிந்து கொள்ளும் வழி என்ன? என்று கேட்டான்.

அஞ்ஞானத்தினால் சூழப்பட்டுள்ளவனுக்குக் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியாது. பக்தி ஒன்றினால் மட்டுமே அவரை அறிய முடியும். பக்தியினால் ஏற்படுகிற மனத் தூய்மை, சாத்திர அறிவில் நமக்கு நாட்டத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் கிருஷ்ணரை அறிவோம்.

இப்படி சஞ்சயன் சொன்ன போது, திருதராஷ்டிரன் துரியோதனனை அழைத்து, சஞ்சயன் கூறியதை எடுத்துச் சொல்லி கிருஷ்ணரைச் சரணடையும் படி அறிவுரை சொன்னான். அதை ஏற்க மறுத்த துரியோதனன், அர்ஜுனனிடத்தில் மட்டும் கிருஷ்ணன் விசேஷமான அன்பு கொண்டு, நம் பக்கம் விரோதம் பாராட்டுகிறார்.

இப்படி ஒரு தலைப் பட்சமாகச் செயல் படும் அவரைச் சரணடைந்து அவர் காலில் நான் விழுவேன் என்பது நடக்காத காரியம்” என்று கூறி விட்டான். காந்தாரியும் துரியோதனனுக்கு அறிவுரை சொன்னாள். அவன் அதையும் ஏற்க மறுத்தான். பிறகு திருதராஷ்டிரன், வியாசரிடமும், சஞ்சயனிடமும் கிருஷ்ணரின் மகிமைகளைப் பற்றி மேலும் கூறுமாறு கேட்டான்.

அவர்களும் சொன்னார்கள், கிருஷ்ணரின் பெயர்களுக்கெல்லாம் என்ன காரணம் என்பதையும் விளக்கிய சஞ்சயன், இறுதியாக இப்பேர்ப்பட்ட மஹான், யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, பாண்டவர்களின் தூதனாக உங்களிடம் வரப் போகிறார்” என்று அறிவித்தான்.

திருதராஷ்டிரன் மன மகிழ்ச்சி அடைந்தான்.

ஹஸ்தினாபுரத்தில் இப்படி நடக்கையில், தர்ம புத்திரர் தனது சகோதரர்களிடமும், விராடன், துருபதன் போன்றோர்களிடமும் ஒரு யோசனையைச் சொன்னார். நாம் கிருஷஷ்ணரை வேண்டிக் கொள்வோம்.

நமக்காக அவர் ஹஸ்தினாபுரம் சென்று எல்லோருடனும் பேசி, சமாதானத்தைத் தோற்றுவித்து, யுத்தத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம். நம் வேண்டுகோளை அவர் நிச்சயமாக ஏற்பார். இதனால் எல்லோருக்கும் நன்மையே விளையும்.

தர்ம புத்திரரின் யோசனையைப் பல மன்னர்களும், பாண்டவர்களும் ஏற்றனர். அவர்களில் சிலர் சென்று கிருஷ்ணரை அழைத்து வந்தார்கள்.

தர்ம புத்திரர் சொன்னார், திருதராஷ்டிரர் தமது வயதுக்கும், அனுபவத்திற்கும் தகுதி இல்லாத முறையில் நடந்து கொள்கிறார். ராஜ்யத்தில் எங்களுக்குரிய பங்கைத் தராமலேயே, கௌரவர்களிடம் நாங்கள் சமாதானமாகப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

பேசியபடி ராஜ்யத்தில் எங்கள் பங்கைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான், நாங்கள் பன்னிரண்டு வருடம் காட்டில் வாழ்ந்தோம். மேலும் ஒரு வருஷம் தலை மறைவாக வாழ்ந்தோம்.

ஆனால் பேராசைக் கொண்ட திருதராஷ்டிர மன்னரோ, இப்போது தனது வார்த்தையை நிறைவேற்றத் தயாராக இல்லை. மகன் மீதுள்ள பற்று காரணமாக அவர் எங்கள் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ள மறுக்கிறார். ஐந்து கிராமங்களாவது கொடுக்குமாறு கேட்டால், அதையும் மறுத்து விட்டார்.

திருதராஷ்டிரருக்கு ஏற்பட்டுள்ள பேராசை, அவருடைய அறிவைப் பாழடித்து விட்டது ஒரு மனிதனுக்கு அறிவு கெட்டுப் போவது தர்மத்தைப் பாழ் செய்கிறது. தர்மம் பாழாவதால் செல்வம் நாசமடைகிறது. செல்வத்தின் அழிவு மனிதனை மேலும் வருத்துகிறது. செல்வம் இல்லாத மனிதர்களிடமிருந்து உறவினர்கள் கூட விலகி விடுகிறார்கள்.

ஆகையால் பொருளை இழந்தவன், உயிரை இழந்தவன் போல் ஆகிறான். தர்ம காரியங்களைச் செய்வதற்குக் கூட பொருள் தேவைப் படுகிறது. உலக நடப்பு இவ்வாறு இருக்க ராஜ்யத்தை இழந்து நாங்கள் அடைந்திருக்கும் பரிதாப நிலையை நீரே பார்த்திருக்கிறீர். ஆகையால் எங்களுக்குரிய செல்வத்தை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களுக்கும், கௌரவர்களுக்கும் விரோதம் நீங்கி, ராஜ்யத்தில் இருவரும் பங்கு பெற்று, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், இதற்குக் கௌரவர்கள் ஒத்து வராவிட்டால், அவர்களை அழித்து நாங்கள் ராஜ்யத்தை அடைய வேண்டியது தான்.

மஹாபாரதம் இரு தரப்பிலும் யுத்த நோக்கம்

அதே சமயத்தில் வேறு ஒரு வழியும் இல்லை என்றால் தான் யுத்த மார்க்கத்தை மேற் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். போர் செய்வது க்ஷத்ரியனுக்குத் தர்மம் என்று கூறப்படுகிறது.

தர்மத்தின் பாதை மன மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாய் நாயைக் கொல்வது போல, மீன் மீனைத் தின்று வாழ்வது போல, க்ஷத்ரியன் க்ஷத்ரியனை யுத்தத்தில் கொல்கிறான்.

இது தர்மம் என்று ஏற்கப் படுவது விந்தையே!
யுத்தத்தில் வெற்றி பெற்றவனுக்கும், பொருட் செலவு, உயிர் நாசம்,- ஆகிய இழப்புக்கள் ஏற்படுகின்றன. தோல்வி வருத்தத்தையும், அவமதிப்பையும் உண்டு பண்ணுகிறது என்றால், வெற்றியோ விரோதத்தை வளர்க்கிறது.

பகைவர்களை வேருடன் அறுப்பதனால் மட்டுமே யுத்தத்தினால் பயன் விளையும்.ஆனால் அப்படிச் செய்வதோ மிகவும் கொடுமையான காரியம். இதற்காகப் பார்த்து, அரசுரிமை வேண்டாம் என்று நாங்கள் விட்டு விட்டாலும் நன்மை பயக்காது.

ஏனென்றால் அப்போது கௌரவர்கள் எங்களைக்கோழைகளாகக் கருதுவார்கள். தவிர, அவர்களிடம் எங்களுக்கு விரோதம் இருக்கிறதா, இல்லையா என்ற மனக் குழப்பம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாக நாளடைவில் இரு தரப்பிடையேயும் பல விபரீதங்கள் விளையும். இதை நினைத்துப் பார்க்கும் பொழுது. அரசுரிமையை விட்டுக் கொடுப்பது என்பது அர்த்தமற்ற காரியமாகப்போகிறது.

நாய்ச் சண்டைக்குச் சமம் என்று பண்டிதர்கள் வர்ணிக்கும் யுத்தத்தில் ஈடுபட வேண்டியது தான் வழியோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது.

வீரர்களுக்குள்ளே ஏற்படும் யுத்தத்தை , நாய்ச் சண்டைக்குச் சமமாகப் பண்டிதர்கள் வர்ணிப்பதற்குக் காரணம் இருக்கிறது. நாய் ஆரம்பத்தில் வாலை லேசாக அசைக்கும்- யுத்தத்தில் வீரன் வில்லினுடைய நாணை அசைத்துக் காட்டுவான். நாய் உறுமத் தொடங்கும்.

வீரன் சங்கை ஊதுவான்- நாய் கோபத்துடன் பூமியில் புரளும்- வீரன் கோபத்தில் தனது தோளை த் தட்டுவான்- நாய் குரைக்கும்- வீரன் தன்னைத் தானே புகழ்ந்து பேசுவான்.

நாய் பாயும்- இவன் அஸ்திரங்களைப் பாய்ச்சுவான். வெற்றி பெற்ற நாய் மாமிசத்தைத் தின்று மகிழும்- வெற்றி பெற்ற வீரன் ராஜ்யத்தை அனுபவித்து மகிழ்வான். இதனால் தான் நாய்ச் சண்டைக்கும், மனிதச் சண்டைக்கும் வித்தியாசமில்லை என்று வர்ணிக்கப் படுகிறது.

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது, எதைச் செய்வது நலம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும். காரியங்களின் பலனை அறிந்தவர்கள் உங்களைப்போல் வேறு யார் உண்டு? இந்த நிலையில், தர்மத்தை விட்டு அகலாமல் செயலாற்ற எங்களுக்கு எது வழி?

இவ்வாறு கேட்ட யுதிஷ்டிரரைப் பார்த்து கிருஷ்ணர், உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நான் கௌரவர்களின் சபைக்குச் செல்கிறேன். யுத்தத்தைத் தடுக்க முயல்கிறேன். அந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றால், மிகவும் நல்லதான காரியத்தைச் சாதித்தவனாவேன்” என்று கூறினார்.

தர்ம புத்திரர், நீங்கள் கௌரவர் சபைக்குப்போக வேண்டும் என்பது என் நோக்கமில்லை. ஏனென்றால் நீங்கள் அங்கே நல்லதைப் பேசினாலும் அது எடுபடாது. அவர்களுடைய சபைக்கு நீங்கள் போவதை நான் விரும்பவில்லை. அங்கே உங்களுக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டால், அது எங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும்.

ராஜ்யத்தில் பங்கு என்பது அல்ல- தேவர்களின் செல்வம் முழுவதும் கிட்டுவதாக இருந்தாலும் கூட, எங்களுக்காக நீங்கள் அங்கே போக வேண்டாம்” என்று கிருஷ்ணரிடம் சொன்னார்.

( மற்ற அரசர்களிடமும், சகோதரர்களிடமும் கிருஷ்ணரைத் தூது செல்லுமாறு கேட்டுக் கொள்வோம்.- என்று தர்ம புத்திரர் கூறியதால் தான், கிருஷ்ணரே வரவழைக்கப் பட்டார்.ஆனால் கிருஷ்ணர் வந்த பிறகு, அவரிடம் தர்ம புத்திரர், நீங்கள் தூது செல்வது எங்களுக்கு விருப்பமல்ல ” என்று பேசுகிறார்.

தர்ம புத்திரர் இப்படி மாற்றிப்பேசியதற்குக் காரணம் கிருஷ்ணர் வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட மன மாற்றமாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி முரண்பாடுகள் தர்ம புத்திரரின் பேச்சிலும் செய்கையிலும் ஆங்காங்கே வரத்தான் செய்கின்றன.

நேர் வழியில் செல்பவர் என்ற பெயர் எடுத்திருந்தாலும் கூட, சில சமயங்களில் அவர் ” சாமார்த்திய வழியையும் மேற் கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தக் கட்டமும் ஒரு ஆதாரம்)

தர்ம புத்திரர் கூறியதைக்கேட்ட கிருஷ்ணர், என்னிடம் தகாத முறையில் அவர்கள் நடந்து கொண்டால், அங்கேயே அவர்கள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்குவேன். ஆகையால் நான் ஹஸ்தினாபுரம் செல்வது தவறில்லை. ஒரு வேளை உங்களுக்கு ராஜ்யத்தில் பங்கும் கிட்டலாம்.

அப்படிக் கிட்டாமல் போனாலும், உலகின் கண்டனம் உங்களுக்கு வராமற்போகும்- கடைசி வரை பாண்டவர்கள் சமாதானத்திற்கு முயன்றும், கூட, துரியோதனன் எனும் பாவி தான் அதைக் கெடுத்தான்” என்று எல்லோரும் அப்போது துரியோதனனை இகழ்ந்து பேசுவார்கள்.

ஆகையால், நான் ஹஸ்தினாபுரம் சென்று வருகிறேன்” என்று தைரியம் சொன்னார். தர்ம புத்திரரும் அதை ஏற்றார்.

கிருஷ்ணர் தனது கருத்தை மேலும் சொன்னார்.போர் செய்யாமல் உயிர் நாசம் ஏற்படாமல், என்ன கிடைக்கிறதோ அது போதும் என்று நீர் நினைக்கிறீர்.

ஆனால், சமாதான வார்த்தைகள் கௌரவர்களிடம் எடுபடாது. பீஷ்மர், துரோணர், முதலானோர் தங்கள் பக்கம் இருப்பதால், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்று துரியோதனன் நினைக்கிறான்.க்ஷத்ரியனுகப்கு ஏற்பட்டுள்ள தர்மம், யுத்த தர்மம். ஆகையால் நீர் பகைவரைக் கொல்ல முனைவதில் தவறில்லை.

துரியோதனன் உங்களுக்குச் செய்த தீங்குகளையெல்லாம் இந்த நேரத்தில் நினைத்துப் பாருங்கள். சூதாட்டத்திற்கு உங்களை இழுத்து, காட்டிற்கு அனுப்பியதை நினைத்துப் பாருங்கள். சபையில் திரௌபதி அவமானப் படுத்தப் பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.

இப்படி உங்களுக்குக் கொடுமைகளை இழைத்த துரியோதனன் உங்களால் கொல்லப் படத் தக்கவனே! அவர்களோடு யுத்தம் வருவதே நல்லது என்பது என் எண்ணம். யுத்தம் வரும் என்றே எல்லாச் சகுனங்களும் எனக்குக் காட்டுகின்றன. பெரும் அழிவு ஏற்படும் என்பதை நான் உணர்கிறேன். சமாதான வழிகளின் மூலமாகத் தீர்வு ஏற்படப்போவதில்லை. இழந்த ராஜ்யத்தை நீங்கள் பெறுவதற்கு யுத்தம் ஒன்று தான் வழி.

இவ்வாறு கிருஷ்ணர் கூறிய பிறகு, பீமன் தன் கருத்தைச் சொன்னான். நீங்கள் தூது செல்லும் போது எப்படிப் பேசினால் துரியோதனனுக்கும், அவனைச் சார்ந்தவர்களுக்கும் மன அமைதி உண்டாகுமோ அப்படிப்பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். துரியோதனன், கோபக்காரன், எளிதில் பகையை வளர்ப்பவன். ஆகையால், அவனிடம் கடுமையான சொற்களைக் கூறாமல், மிருதுவாகப் பேசுவதே நல்லது.

உயிர் நாசம் ஏற்பட வேண்டாம் என்பதற்காக நாங்கள் துரியோதனனை அனுசரித்துப்போகக் கூடத் தயாராக இருக்கிறோம். இந்த என்னுடைய அபிப்பிராயத்தை அந்தச் சபையில் பெரியவர்களிடமும் கூறுங்கள், துரியோதனனுக்கும் மன அமைதி உண்டாகட்டும்.

சகோதரர்களாகிய நாங்களும், அவர்களும் ஒற்றுமையோடு வாழ வழி செய்யுங்கள் . தர்ம புத்திரரும் இதைத் தான் விரும்புகிறார். அர்ஜுனன் கூட யுத்தத்தை விரும்புவதாக நான் நினைக்கவில்லை.

பீமனின் பேச்சு கிருஷ்ணனுக்கு வியப்பை அளித்தது. நெருப்பு குளிர்ந்து விட்டது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டதாக அவர் நினைத்தார். அப்படிப் பட்ட பீமனுக்கு மன உற்சாகத்தை வளர்க்க விரும்பி, காற்றானது நெருப்பை மேலும் மூட்டுவது போல், சில வார்த்தைகளைப்பீமனுக்குச் சொன்னார்.

யுத்தமே சிறந்தது என்று சொல்லிக் கொண்டிருந்த நீ, இப்போது திடீரென்று மாற்றிப் பேசுகிறாயே! துரியோதனனைக் கொல்வேன் என்று உனது கதாயுதத்தின் மீது சத்தியம் செய்த நீ, இப்பொழுது இப்படிப்பேசுவது விந்தை தான்! உனக்குப் பயம் வந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்.

யுத்தத்தை விரும்பும் பலர் மனம் கூட, யுத்தம் நெருங்கும்போது, குழப்பமடைவதைப் பார்க்கிறோம் . ஆனால், நீ இப்படி மாறுவாய் என்று நான் நினைக்கவில்லை. மனம் கலங்கிப்போய், உனது ஆண்மையையே மறந்து, அலிபோல் ஆகி விட்டாய்.

நீ கோழையாகி விட்டாய். உனது மனம் அச்சத்தால் நடுங்குகிறது. உனக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சம் பாண்டவர்களையே, நாசம் செய்யக் கூடியது. தனது வீரத்தால் அடையாத எதையும், ஒரு க்ஷத்ரியன் இந்த உலகத்தில் அனுபவிப்பது என்பது கிடையாது. பகைவரை வாட்டக் கூடிய நீ, மனத் தளர்ச்சி பெறுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. மனதை மாற்றிக் கொள்.

இதைக்கேட்ட பீமன் தன்னுடைய பராக்கிரமங்களையெல்லமாம் வர்ணித்தான். நீர் என் மனநிலையைப் பற்றித் தவறாக பேசியதால், என்னுடைய பலத்தைப் பற்றி நானே பேசிக் கொள்ளுமாறு செய்து விட்டீர்கள்.

இந்த உலகத்தில் யாரிடமும் எனக்குப் பயம் என்பது கிடையாது. பாண்டவர்களாகிய எங்களைக் கொல்ல விரும்புகிற எல்லா அரசர்களையும் சேர்த்துத் தரையில் வீழ்த்தி, என் காலினாலேயே அவர்களை நசுக்கி விடுவேன்.

என் கைகளுக்கு இடையே இருக்கும் இடை வெளியை சற்றுப் பாருங்கள். இவற்றுள் அகப் படுகிற மனிதன் உயிருடன் மீள்வது என்பது நடக்காத காரியம். யுத்தத்தை நினைத்து நான் பயப் படவில்லை. கௌரவர்களில் யாருக்கும் அழிவு வேண்டாம் என்று நான் நினைப்பதால் தான், சமாதானம் பேசுமாறு கோரினேனே தவிர, யுத்தத்திற்குப் பயந்து அல்ல.

உண்மையிலேயே நீர் என் சக்தியை அறியவில்லை என்றால் , யுத்தம் வரும் போது , அதைக் கண் கூடாகப் பார்ப்பீர். சூரியன் உதயமாகும் போது தான் அதன் ஒளியை யாரும் பார்க்க முடியும். அதே போல யுத்தம் வரும் போது, என் பராக்கிரமத்தை நீர் பார்க்கலாம்.

கிருஷ்ணர் கூறினார். பீமா உன்னை ஏளனம் செய்வதற்காக நான் எதவும் பேசவில்லை. உனக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணுவதற்காகவும் எதுவும் நான் கூறவில்லை.

உன்னிடத்தில் இருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கும் சக்தியை விட, ஆயிரம் மடங்கு பலம் பொருந்தியவன் நீ என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. யுத்தம் வந்தால் வெற்றி நிச்சயம் என்று கூட நான் கருதவில்லை.

ஆனால், அதற்காக க்ஷத்ரியன் யுத்தத்தைத் தவிர்க்க முடியாது.உனக்கு உற்சாகத்தை உண்டாக்குவதற்காகவே நான் அவ்வாறு பேசினேன். என் சொல்லைக் கௌரவர்கள் ஏற்காமல் போனால், யுத்தம் நேரிட்டுத் தான் தீரும்.

அதில் பெரும் பொறுப்பை நீ தான் சுமக்க வேண்டிவரும். யுத்தத்தின் சுமையைத் தாங்க வேண்டியவர்களே நீயும், அர்ஜுனனும் தான். அதனால் தான் உன்னை ஊக்குவிப்பதாக நான் பேசினேன். செயல்பாட்டை மனிதன் விடுவது என்பது அழிவுக்குத் தான் வழி. மனித முயற்சி, தெய்வத்தின் அருள், இரண்டுமே சேரும் போது தான் பயன் கிட்டுகிறது.

இதை உணர்ந்தவன், முயற்சியில் இறங்குகிறான். அதற்குத் தெய்வத்தின் அருள் கிட்டவில்லை என்றால், அந்த முயற்சி பயனற்றதாக ஆகலாம். ஆனால் முயற்சியே இல்லை என்றால், அங்கு தெய்வத்தின் அருள் என்பது பொருளற்றதாகிறது.

இதை மனதில் கொண்டு முயற்சி- செய்தால் காரியம் கை கூடுவதால் மகிழ்ச்சியோ, கை கூடாததால் உள்ளச் சோர்வோ ஏற்படாமல் மனித மனம் ஸ்திரமாக நிற்கும்” என்று சொன்னார்.
இதையடுத்து அர்ஜுனன் தனது கருத்தைக் கூறினான்.
………………………………………………………………………

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here