ஆதிவம்சாவதரணப் பர்வம்

மஹாபாரதம்
………
மஹாபாரதம்
பேசுகிறது-சோ
……………………………..
உத்யோக பர்வம்
…………………..

கர்ணனின் சபதம்
…………………………………….

குழம்பிய மனதை உடையவனான திருதராஷ்டிரன், மேலும் சில அறிவுரைகளைக் கேட்க விரும்பிய போது விதுரர், தன்னை விட உயர்ந்தவராகிய ஸனத் ஸுஜாதர் என்ற மகானிடம் அவற்றை திருதராஷ்டிரன் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று கோரி, ஸனத் ஸுஜாதரை அழைத்து வந்தார்.

விதுரர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸனத் ஸுஜாதர் பல உபதேசங்களை திருதராஷ்டிரனுக்குக் கூறினார். மாணத்தின் தன்மை, தர்மத்தின் லட்சணம், ஆத்மாவின் ரகசியம், ஒரு மனிதனைக் கெடுக்கக் கூடிய தோஷங்கள், சத்தியத்திலிருந்து அகலாமல் இருப்பவனே பிராமணன் என்ற விவரம், முனிவனின் குணாதிசயங்கள்.

பாவத்தின் தன்மை, பிரம்மத்தை அறிய வேண்டிய அவசியம். போன்ற பல விஷயங்களைப் பற்றிய விளக்கங்களை, திருதராஷ்டிரனுக்கு அவர் எடுத்துச் சொன்னார்.

ஒரு நாள் இரவு முழுவதும் இந்த உபதேசங்களை க்கேட்டுக் கழித்த திருதராஷ்டிரன், அடுத்த நாள் சபையைக் கூட்டி, சஞ்சயனையும் வர வழைத்து பாண்டவர்களிடமிருந்து அவன் கொண்டு வந்தச் செய்தியைச் சபையில் விவரிக்கச் சொன்னான்.

சஞ்சயன், பாண்டவர்களிடமிருந்து அறிந்து வந்த செய்தியைக் கூறத் தொடங்கினான். அர்ஜுனன் கூறியதை முதலில் அப்படியே விவரிக்கிறேன். அவன் கூறிய வார்த்தைகளிலேயே அவன் சொன்னதை நான் இந்தச் சபையில் சொல்கிறேன்.

அர்ஜுனன் சொன்னான், தர்ம புத்திரருக்குச் சேர வேண்டிய ராஜ்யத்தின் பகுதியை துரியோதனன் அவரிடம் கொடுக்கவில்லை என்றால், பாண்டவர்களாகிய நாங்கள் வாசு தேவருடனும், ஸாத்யகியுடனும், திருஷ்டத்யும்னனுடனும், சிகண்டியுடனும், சேர்ந்து யுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம். நாங்களாகவே யுத்தத்திற்கு வழி தேடப் போவதில்லை.

ஆனால் துரியோதனன் விரும்பினால், நாங்கள் யுத்தம் செய்யத் தயங்கப் போவதும் இல்லை. தன்னுடைய இயல்பான குணமாகிய பொறுமையுடன் எல்லாவற்றையும் சகித்து வரும் தர்ம புத்திரர், கொஞ்சம் கோபம் கொண்டாலும் போதும், துரியோதனன் பரிதவிக்கத் தகுந்த நிலையை அடைந்து விடுவான். உயிரைத் துறக்கத் தயாராக நிங்கும் எங்கள் படை வீரர்கள்.,

மஹாபாரதம் கர்ணனின் சபதம்

தர்ம புத்திரனின் உத்திரவு ஒன்றை மட்டுமே எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறார்கள். துரியோதனாதிகளுடன் யுத்தம் நேரும் போது, எனக்கு உதவியாக இருக்குமாறு கிருஷ்ணனைக்கேட்டுக் கொண்டேன்.

தெய்வங்கள் எனக்குச் செய்த உதவி என்று நினைக்கும் அளவுக்கு , கிருஷ்ணர் எனக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறார். அவர் போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்த பப் புறம் நிற்கிறாரோ அந்தப் புறம் வெற்றி கிட்டும். யுத்தம் நேர்ந்தால் கௌரவர்கள் அனைவரும் அழிந்து விடுவார்கள். யுத்தம் நேராமல் சமாதானமாகச் சென்றால் அவர்கள் வாழ்வார்கள்.

எங்களுக்கு நன்மையையே செய்கிற பெரியோர்கள், கற்றறிந்தவர்கள், பண்டிதர்கள், ஒழுக்க முடையவர்கள், ஆகியோரிடமிருந்து நிமித்தங்களையும் ஜோதிட ரீதியான சகுனங்களையும், நக்ஷத்திங்களின் போக்குகளையும் நாங்கள் ஆலோசித்துப் பார்த்து விட்டோம்.

வரப்போகிற நிகழ்ச்சிகளைத் தெரிவிக்கக் கூடிய சாத்திரங்கள், துரியோதனாதிகளுக்குப் பெரும் நாசமும், பாண்டவர்களுக்கு வெற்றியும் கிட்டும் என்றே தெரிவிக்கின்றன. யுத்தம் என்று வந்து விட்டால், துரியோதனாதிகளை அழித்த பிறகு தான் மன நிம்மதி அடைவேன் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் .

பீஷ்மர், துரோணர், கிருபர் போன்ற மூத்தோர்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்டு துரியோதனன் நடந்தால், எல்லோருக்கும் நன்மை பயக்கும். அவர்கள் சொல்லும் முடிவை நாங்களும் ஏற்கிறோம். இவ்வாறு அர்ஜுனன் கூறினான். நான் அதை இந்தச் சபையில் தெரிவித்துவிட்டேன்,” என்று கூறினான் சஞ்சயன்.

அப்பொழுது பீஷ்மர் எழுந்து பேசத் தொடங்கினார். துரியோதனா! ஒரு விஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்.

தடையில்லாத அஸ்திரங்களைப் பிரயோகிக்கும் அர்ஜுனனும், வெற்றியைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாத கிருஷ்ணனும் ஒரே தேரில் அமர்ந்திருக்கும் போது , யுத்த களத்தில் நான் சொன்னதை நீ நினைத்துப் பார்க்க நேரிடும்.

ஆகையால் இப்பொழுதே அதை உணர்ந்து கொள்.போருக்காக முனைந்து விடாதே. பாண்டவர்களுக்குரிய ராஜ்யத்தின் பங்கைக் கொடுத்து சமாதானம் செய்து கொள். இதை நீ கேட்கவில்லையானால் கௌரவர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்று தான் அர்த்தமாகும்.

துரியோதனா! உனக்கு அறிவு மழுங்கி விட்டது. நீ எப்பொழுதும் துச்சாதனன் சகுனி, கர்ணன் போன்றவர்களின் அறிவுரைகளையே கேட்டு அதன் படியே நடக்கிறாய். இது உனக்கு நல்லதல்ல. கர்ணனின் பிறப்பே சரியானது அல்ல என்பதை மனதில் கொள்வாயாக!

பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து இப்படிச் சொல்லி விட்டு அமர்ந்தார். கர்ணன் எழுந்தான். பீஷ்மரைப் பார்த்து அவன் சொன்னான், எல்லோருக்கும் மூத்தவரே! என்னைப் பார்த்துப் பேசத்தகாத வார்த்தைகளையெல்லாம் நீர் பேசிக் கொண்டே போகிறீர். நான் க்ஷத்ரிய தர்மத்தை விட்டு என்றும் நழுவியதில்லை.

என்னிடம் என்ன கெட்ட நடத்தையை நீங்கள் பார்த்தீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. துரியோதனனுக்கு நான் ஒரு பொழுதும் எந்தத் தீங்கும் மனதால் கூட நினைத்தது கிடையாது. பீஷ்மரே! ஒன்று சொல்கிறேன், யுத்தம் வரத்தான் போகிறது.

அதில் பாண்டவர்களை நான் அழிக்கத் தான் போகிறேன். துரியோதனனை ராஜ்யத்தில் நிலைக்க வைப்பது மட்டுமல்ல- அவன் மனதில் என்ன நினைக்கிறானோ, அவை அனைத்தையும் பூர்த்தி செய்வது என் கடமை.

கர்ணன் இப்படிக் கூறியதைக்கேட்ட பீஷ்மர், திருதராஷ்டிரனுக்குச் சில வார்த்தைகளைச் சொன்னார் ” உன் மகன்களுக்கு வரப்போகும் தீங்கு, இந்தத்தேர்ப்பாகனுடைய மகனாலேயே வரப்போகிறது என்று நான் நினைக்கிறேன்.

எந்தப் பாண்டவர்களை அழிப்பதாக இவன் சொல்கிறானோ, அந்தப் பாண்டவர்களுடைய சக்தியில் நூறில் ஒரு பங்கு கூட இவனிடம் கிடையாது. விராட நகரத்தில் அர்ஜுனன், தான் ஒருவனாகவே நின்று எல்லோரையும் எதிர்த்த போது, இந்த கர்ணனால் என்ன செய்ய முடிந்தது?

மஹாபாரதம் கர்ணனின் சபதம்

யுத்தக் களத்தை விட்டு ஓடினான் அல்லவா? திருதராஷ்டிரா! கர்ணன் சொல்வதைக்கேட்டு எந்தச் செயலிலும் இறங்க வேண்டாம். அவன் தற்புகழ்ச்சி மிக்கவன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனின் அறிவுரையை ஏற்பது, யாருக்கும் நன்மை பயக்காது.

யுத்த நினைப்பைக் கைவிட்டு, சமாதான முயற்சிகளை முற்கொள், அது தான் உனக்கும், உன் குலத்திற்கும் நல்லது.

இதையடுத்து துரோணர் சொன்னார். திருதராஷ்டிர மன்னரே! பீஷ்மர் சொல்வது முற்றிலும் சரியானது. அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி இந்த மூவுலகில் எவனும் இல்லை என்பது என் கருத்து.

மனதில் தங்களைப் பற்றித் தாங்களே ஒரு உயர்ந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, கர்வம் பெற்றுள்ளவர்களின் பேச்சு கேட்கத்தகாதது. ஆகையால், யுத்த நினைப்பை மறந்து விட்டு, சமாதான முயற்சியை மேற் கொள்ளுங்கள்.

இதையடுத்து சஞ்சயன் பாண்டவர்களின் பலத்தை வர்ணிக்க தொடங்கினான். அப்பொழுது அவன் பீமனைப் பற்றிப்பேசும் பொழுது, திருதராஷ்டிரன் பீமனின் பராக்கிரமத்தைத் தானும் அறிந்திருப்பதாகச் சொன்னான். பீமசேனன் என்ற சமுத்திரம் கரையே இல்லாதது.

மிக ஆழமானது. அதை என்னுடைய பிள்ளைகள் கடக்க நினைக்கிறார்கள். இது மூடத்தனமாக செயல். சிங்கத்தை மான்கள் எதிர்ப்பது போல், என் மகன்கள் பீமனை எதிர்க்க நினைக்கிறார்கள். அவன் மனித வேடம் பூண்ட எமன் என்று நான் நினைக்கிறேன். நடக்கப் போவதை நினைத்தால் என்னைத் துக்கம் பீடிக்கிறது.

அறிவினால் துக்கம் விலகி விடும் என்று நான் நினைக்கவில்லை. துக்கம் அறிவையும் கெடுக்கும் என்றே நினைக்கிறேன். எல்லாவற்றையும் துறந்த முனிவர்கள் கூட, மக்கள் மகிழ்ச்சியுறும் போது அதைக் கண்டு மனதில் இன்பமுறுகிறார்கள் மக்கள் துக்கமடையும் போது தங்கள் மனதில் வருத்தம் அடைகிறார்கள்.

பற்றற்றவர்களாகிய அவர்களுக்கே இப்படியான சுக- துக்கம் உண்டென்றால், என்னைப்போன்ற சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? பெரும் தீங்கு வரப் போகிறது என்பது எனக்குப் புரிகிறது.

அதை என் மனம் தாங்கவில்லை. என்ன செய்வது, எங்கே போவது என்று புரியாமல் ஒரு பெண்ணைப்போல், என் மனதில் நான் அழுகிறேன். இவ்வாறு கூறிய திருதராஷ்டிரன், துரியோதனனுக்கு பீமன், அர்ஜுனன் போன்றவர்களின் பராக்கிரமங்களை விவரித்தான்.

இதையெல்லாம் கேட்ட துரியோதனன் தந்தைக்குப் பதில் கூறினான். தந்தையே! எங்களை நினைத்து நீர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் போரில் பகைவர்களை வெல்லக் கூடிய பலம் பெற்றிருக்கிறோம். பாண்டவர்களைப் பல மன்னர்கள் அடைந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்து தான் இருக்கிறது. கிருஷ்ணன் பாண்டவர் பக்கம் நிற்பதில் எனக்கு வியப்பில்லை..

அவன் நம் அனைவரையும் அழித்து, ராஜ்யம் முழுவதையும் தர்ம புத்திரனிடம் சேர்ப்பித்து விடத்- திட்ட மிடுகிறான். அது அவனுடைய ஆசை. ஆனால் எனக்கு இருக்கும் வருத்தமெல்லாம் எல்லோருக்கும் மூத்தவராகிய உம்மையும் அவன் அழிக்க நினைக்கிறான் என்பது தான்.

இப்படிப்பட்ட நிலையில் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒன்று சரணடையலாம். அல்லது நாட்டை விட்டு ஓடி விடலாம். அல்லது உயிரைப் புல்லென மதித்துப் பகைவர்களுடன் யுத்தம் செய்யலாம்.

சரணடைவதும், நாட்டை விட்டு ஓடுவதும் இழிவான செயல்கள் என்பது என் கருத்து. ஆனால் யுத்தம் செய்தால் நமக்குத் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சமும் உங்களுக்கு இருக்கிறது. இதற்கான சாத்தியக் கூறு இருப்பதை நான் மறுக்க வில்லை.
பல அரசர்கள் தர்ம புத்திரன் வசம் சேர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் நம் மீது பெரும் விரோதம் உடையவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய சகோதரர்கள் என் மனதைத் திருப்தி செய்வதற்காக, பாண்டவர்களுக்குப் பல இன்னல்களைச் செய்திருக்கிறார்கள். ஆகையால் பாண்டவர்கள் நம் மீது பெரும் விரோதம் பாராட்டுகிறார்கள்.

இந்திலையில் யுத்தம் செய்வதால் நமக்குத் தோல்வி ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு என்பதை நானும் கவனிக்கிறேன். ஆனால் ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பீஷ்மர் , துரோணர் இருவரும் முன்பு ஒரு முறை கூறியதை நினைவு படுத்துகிறேன்.

பிறர் நமக்குத் தீங்கு செய்வார்களேயானால், அப்பொழுது நாம் அஞ்ச வேண்டியதில்லை என்றும், யுத்தத்தில் என் பக்கம் நிற்கக் கூடிய அவர்களை வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை என்றும் , யார் வந்தாலும் தங்களுடைய பாணங்களினால் அவர்களுடைய கர்வத்தை ஒடுக்குவோம் என்றும் அவர்கள் எனக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

முன்பு எல்லா அரசர்களையும் தான் ஒருவனாக நின்று வென்ற பீஷ்மரே இப்படிச் சொல்லியிருக்கும் போது, நாம் ஏன் யுத்தத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்? நம் பக்கம் சேர்ந்திருக்கும் அரசர்கள் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் .

என் பொருட்டு அவர்கள் தீயிலும் குதிப்பார்கள். கடலிலும் விழுவார்கள். அப்படிப் பட்டவர்களின் துணை எனக்குக் கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் யுத்தத்தை நினைத்து நீர் புலம்புவது எனக்குச் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. மற்றவர்களின் பரிகாசத்திற்கு இடம் கொடுக்காமல், தைரியத்தைக் கை விடாமல் இருங்கள்.

இவ்வாறு தந்தையிடம் கூறிய துரியோதனன், மேலும் சில வார்த்தைகளைச் சொன்னான். தர்ம புத்திரன் உங்களிடம் ஐந்து கிராமங்களாவது கொடுக்கும் படி கேட்டான் அல்லவா? ஏன் அவ்வாறு கேட்டான்? என்னுடைய படையைக் கண்டு பயந்து தானே அவன் அவ்வாறு கேட்டிருக்க முடியும்? பீம சேனனைப் பற்றி நீர் பலவாறாக நினைத்துப் பயப் படுகிறீர்.

கதை யுத்தத்தில் எனக்குச் சமமானவன் இதுவரை இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்பது பற்றி உமக்குச் சந்தேகம் வேண்டாம். சொல்லப்போனால் பலராமரிடம் கதை யுத்தம் பயின்ற நான், அவருக்குச் சமமானவன் என்பது அனைவருக்கும் தெரியும்.ஒரு முறை என் கதையினால் நான் இமயத்தை அடித்தேனானால், அந்த இமயம் நூறாயிரம் பொடிகளாகச் சிதறிப்போய் விடும்.

பீமனுக்கு இது தெரியும். அர்ஜுனனுக்கும் தெரியும். கிருஷ்ணனுக்கும் தெரியும்.ஆகையால் அவர்கள் என்னை வென்று விடுவார்கள். என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். பீமனை நான் கொன்றதும் அர்ஜுனன் முதலானோர் சிதறிப்போவார்கள்.- என்பது பற்றிய சந்தேகமும் உமக்குத் தேவையில்லை.

இதைத் தவிர, பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா கர்ணன், பகதத்தன் , சல்லியன், ஜெயத்ரதன், பூரி சிரவஸ். போன்ற ஒவ்வொருவருமே பாண்டவர்களை தனியே நின்று அழிப்பதற்குப்போதுமான வல்லமை படைத்தவர்கள்.

அப்படிப்பட்டவர்களாகிய இவர்கள் ஒன்று சேர்ந்து நம் பக்கம் நிற்கும் பொழுது, பாண்டவர்கள் எமன் வீட்டை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பதைப் பற்றி உமக்கு ஏன் சந்தேகம்? அரசே! பீஷ்மரின் தந்தை அவருக்கு என்ன வரம் கொடுத்தார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

பீஷ்மர் விரும்புகிற போது தான் அவர் தன் உயிரை இழப்பார்” என்று அவர் தந்தைசந்தனு அவருக்கு வரம் அளித்திருக்கிறார். இப்படிப்பட்ட பெற முடியாத வரத்தைப் பெற்றுள்ள பீஷ்மர், நம் பக்கம் இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.

துரோணர், கர்ப்பத்தில் வாசம் செய்யாமலேயே., இவ்வுலகத்தில் பிறந்தவர். அனைவருக்கும் ஆசாரியர். அவருடைய மகன் அஸ்வத்தாமாவோ தந்தைக்கு நிகரான வீரன். இவர்களில் யாருக்கும் ஒரு எள் அளவும் குறையாத பராக்கிரமம் படைத்தவன் கர்ணன் என்பதையும் மறக்க வேண்டாம்.

பரசுராமரே கூட கர்ணன் மீது கோபம் இருந்தாலும் அவனைப் பார்த்து , நீ எனக்கு நிகரானவன், என்று கூறியிருக்கிறார். பிறக்கும் போதே அவனுடன் உண்டாகிய கவச குண்டலங்கள் முன்பு கர்ணனுக்கு இருந்தன என்பதும், அதை அவன் இந்திரனுக்குக் கொடுக்க நேரிட்டது என்பதும் உண்மையே.

ஆனால் அதற்குப் பதிலாக அவன் இந்திரனிடமிருந்து சக்தி ஆயுதம் பெற்றிருக்கிறான் என்பதை நாம் மறக்கக் கூடாது.
யுத்தத்தில் நமது பக்கம் நிற்க சம்சப்தகர்கள் என்ற க்ஷத்ரிய கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் ஒரு விரதத்தை ஏற்றிருக்கிறார்கள்.

ஒன்று- தாங்கள் அர்ஜுனனைக் கொல்வது அல்லது அர்ஜுனனால் தாங்கள் கொல்லப் படுவது என்ற நிச்சயத்துடன் . அப்படிப்பட்ட ஒரு பிரதிக்ஞையுடன் இந்த யுத்தத்தில் இறங்க அவர்கள் தயாராக நிற்கிறார்கள். என்னிடம் இருப்பது பதினேழு அக்ஷளணி. மன்னனே! நம்மை விட மூன்று மடங்குக் குறைவாக எதிராளியின் படை இருந்தால், தயங்காமல் உடனே யுத்தம் செய்யலாம்” என்று பிரகஸ்பதியின் சாத்திரம் கூறுகிறது.

பாண்டவர்கள் பக்கம் வீரர்கள் என்று கூறக் கூடியவர்கள் ஏழு பேர் இருக்கிறார்கள். அதாவது பாண்டவர்கள் ஐவரும், அவர்களைத் தவிர திருஷ்டத்யும்னன், சாத்யகி ஆகிய இருவரும் சேர்ந்து மொத்தம் ஏழு பேர். நம்மிடமோ பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சோமதத்தன், கர்ணன், சல்லியன், என்று கணக்கிட்டால் இம்மாவீரர்களின் எண்ணிக்கை 21 வருகிறது.

ஆகையால் பாண்டவர்களைக் காடடிலும் நம்மிடம் மூன்று மடங்கு பலம் உள்ளது என்று நாம் கொள்ளலாம். அப்படிப் பார்க்கும் பொழுது, பிரகஸ்பதியின் சாத்திரப்படி நாம் யுத்தம் செய்யத் தயங்கத் தேவையில்லை. ஆகையால் நம்முடைய இந்தப் பலத்தையெல்லாம் மனதில் கொண்டு, உம்முடைய அச்சத்தை விலக்கி விடுங்கள்.

இப்படி தந்தைக்கு தைரிய மூட்டிய துரியோதனன், அதன் பிறகு சஞ்சயனிடம் பாண்டவர்களின் பலத்தைப் பற்றி மேலும் கூறுமாறு கேட்டுக் கொண்டான். துருபதன், கிருஷ்ணன், விராட மன்னன், ஜராசந்தனுடைய மகன், சிகண்டி, போன்ற வீரர்கள் பாண்டவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டிருப்பதை சஞ்சயன் விளக்கினான்.

துரியோதனனை ஒழிக்கும் பொறுப்பு பீமனிடம் விடப் பட்டிருப்பதாகவும், – கர்ணன், அஸ்வத்தாமா, விகர்ணன் இவர்களை எதிர்க்க வேண்டிய பொறுப்பு அர்ஜுனனுக்கு விடப் பட்டிருப்பதாகவும்- துச்சாசனன் போன்றோரை எதிர்க்கும் பொறுப்பு அபிமன்யுவிடம் விடப் பட்டிருப்பதாகவும்- திருஷ்டத்யும்னன் துரோணருடன் போர் செய்யக் காத்திருப்பதாகவும், சஞ்சயன் கூறினான்.

மேலும் கௌரவர் பக்கமுள்ள மகா வீரர்களில் யார் யாரை எதிர்க்க, பாண்டவர்கள் பக்கம் யார் யாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்பதையெல்லாம் சஞ்சயன் விவரித்தான்.

இதையெல்லாம் கேட்ட திருதராஷ்டிரன் மீண்டும் துரியோதனனிடம் யுத்த யோசனையைக் கைவிடுமாறும், சமாதானம் செய்து கொள்ளுமாறும் கெஞ்சினான். அழிவு வந்து விடும் என்றும் அந்த மன்னன் புலம்பினான்.

மகனே! நீ பெயருடனும், புகழுடனும் வாழ்வதற்குப் பாதி ராஜ்யமே போதுமானது. பாண்டவர்களுக்கு உன் மனதில் என்ன தோன்றுகிறதோ, அந்த அளவுக்குக் கொடு. அவர்கள் திருப்தியுடன் சென்று விடுவார்கள். அவர்களுடன் எப்பொழுதும் அன்புடன் பழக உன் மனதைத் தயார் செய்து கொள்.

இதுவே எல்லோருக்கும் நல்லது. பீஷ்மர், துரோணர், முதலியோர் கூறும் யோசனையை நாம் நிராகரிக்கக் கூடாது. உன்னுடைய படையைப் பார். குதிரைகள் கண்ணீர் வடிக்கின்றன. எனக்கு இது பெரும் அபசகுனமாகத் தெரிகிறது. உனக்கு நாசம் உண்டாகி விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

உன் மனதில் ஏற்பட்டு விட்ட பொறாமை, குரோதத்தின் காரணமாக இந்தக் கெட்ட சகுனங்களை உன்னால் உணர முடியவில்லை. தயவு செய்து யுத்தம் செய்யும் எண்ணத்தை கைவிட்டு, பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்” என்று மன்றாடினான் திருதராஷ்டிரன்.

துரியோதனன் சொன்னான், அரசே! பாண்டவர்களும், நாங்களும் ஒரே ஆசாரியாரிடத்தில் பயின்றவர்கள். ஒரே குலத்தின் வழித்தோன்றல்கள். இருவருமே பூமியை விரும்புகிறவர்கள். அப்படியிருக்க என்ன காரணம் கொண்டு நீங்கள் அவர்கள் பக்கமே வெற்றி கிட்டும் என்று நம்புகிறீர்கள்- என்பது எனக்குப் புரியவில்லை. ஒன்று சொல்கிறேன், பீஷ்மர் துரோணர், அஸ்வத்தாமா , சஞ்சயன், நீங்கள்- என்ற உங்களையெல்லாம் நம்பி நாங்கள் யுத்தத்தை எதிர்பார்க்கவில்லை.

நானும், கர்ணனும், சேர்ந்து யுத்தம் என்ற யாகத்தைச் செய்வோம். அதில் தர்மபுத்திரனைப் பசுவாகப் பலி கொடுப்போம்.நான், கர்ணன், துச்சாசனன்,-ஆகிய மூவருமே பாண்டவர்களை அழிக்கக் கூடிய திறன் படைத்தவர்கள்.

நிச்சயமாகச் சொல்கிறேன், நான் பாண்டவர்களைக் கொன்று இந்தப் பூமியை ஆள்வேன். அது இயலாது. எனில் பாண்டவர்கள் என்னைக் கொன்று இந்தப் பூமியை ஆளட்டும்.

அது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் சமாதானம் என்பதோ, சரணாகதி என்பதோ என்னுடைய வீரத்திற்கும், பராக்கிரமத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவை.ஆகையால், ஊசி முனை அளவு கூட அவர்களுக்கு இந்தப் பூமியை நான் விட்டுத் தரப்போவதில்லை. என்னைக் கொன்று அவர்கள் இந்த ராஜ்யத்தை அடையட்டும்.

இப்படித் துரியோதனன் கூறிய பிறகு, திருதராஷ்டிரன் மீண்டும் புலம்பினான். துரியோதனா! இனி உன்னுடன் பேசிப்பயன் இல்லை என்பது எனக்குப் புரிகிறது. நீ எமனுடைய இல்லத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டு விட்டாய்.

உன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்லப்போகிறாய். பெருங்காட்டையே அழிப்பது போல், பலரை பீமசேனன் முறித்துத் தள்ளப்போகிறான். அந்த யுத்த களத்தில் நான் இப்பொழுதுசொல்லும் வார்த்தைகள் உன் நினைவிற்கு வரும்.

இப்போது பேசிப் பயனில்லை. ஆனால் ஒன்றை நினைத்துப் பார். பாண்டவர்கள் தேவர்களுக்குப் பிறந்தவர்கள்.ஆகையால்,, அவர்களுக்கு உதவ தேவர்களும் வருவார்கள். அப்பொழுது உன்னால் என்ன செய்ய முடியுமா?

இவ்வாறு திருதராஷ்டிரன் கூறியதைக்கேட்ட துரியோதனன் சொன்னான், தேவர்கள், பாண்டவர்களுக்குத் துணை இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் தேவர்கள் மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டவர்கள்.

தேவர்களும் மனிதர்களைப் போன்றே காம குரோதங்களுக்கு ஆட்பட்டவர்களாக இருந்தால், அவர்கள் பாண்டவர்களுக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தேவர்கள் இதையெல்லாம் கடந்தவர்கள் என்பதால், அவர்கள் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வருவார்கள் என்று கருத இடமில்லை.

சரி, ஒரு கால் நீங்கள் சொல்கிற மாதிரியே பாண்டவர்கள் தேவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தால் வரட்டும். ஏனென்றால் எங்களுடைய பராக்கிரமம், தேவர்களின் பராக்கிரமத்தை விட, பெரிது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அரசே! நீங்கள் சகுனங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நானும் கூட ஒரு சகுனத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் படை வீரர்களுடன் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் ஒருநீர் நிலை உண்டாகிறது. இது ஏன் நடக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

என் படைகளுக்கு வெற்றி என்பதைக் குறிப்பதாகவே இது நடக்கிறது என்று நான் கருதுகிறேன். நம்மால் ஆளப் படும் இந்த தேசத்தில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பெரு மழையோ, வறட்சியோ, இங்குக் கிடையாது. ஆகையால், நமக்குக் குறை எதுவும் உண்டாவதற்கு வாய்ப்பில்லை. என்பது என் கணிப்பு.

இன்னொரு விஷயத்தை நினைத்துப் பாஞ்கள். தேவர்கள், பாண்டவர்களுக்கு உதவி செய்ய அப்படி ஓடி வருபவர்களாக இருந்திருந்தால், பாண்டவர்கள் ஏன் பன்னிரண்டு வருடம் காட்டில் வாழ வேண்டும்? ஏன் ஒரு வருடம் தலை மறைவாக வாழ வேண்டும்? இதையெல்லாம் தேவர்கள் அப்பொழுதே முனைந்து முடித்து வைத்திருக்கலாமே? இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது, தேவர்கள் பாண்டவர்களுக்கு உதவ மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். உதவினாலும் கவலையில்லை.

அவர்களை எதிர் கொள்ளும் சக்தி நம்மிடம் இருக்கிறது. ஒன்று சொல்கிறேன். என் வாயிலிருந்து வரும் வார்த்தை பலிக்காமல் போகாது. நான் நான் பகைவர்களுக்குக் கெடுதலை நினைத்தால் அது நடக்கும். நண்பர்களுக்கு நல்லதை நினைத்தால் அதுவும் நடக்கும். இதை மீறி நடக்கும் நிகழ்ச்சியை இது வரை நான் கண்டதில்லை.

பாண்டவர்களையும், அவர்களுக்குத் துணையாக வந்து நின்ற பல மன்னர்களையும் நானும், கர்ணனும் துச்சாசனனும் வெற்றி கண்டோம் என்ற செய்தி விரைவில் உமது காதுகளில் விழப் போகிறது கவலை வேண்டாம்.

இப்படிப்பேசிய துரியோதனனைத் தொடர்ந்து கர்ணன் எழுந்து சொன்னான், தேவைப் பட்ட காலத்தில் உனக்கு என்னிடம் கற்ற அஸ்திரம் மறந்து போகும்- என்று பரசுராமர் என்னைச் சபித்தாலும், என்னுடைய பணிவிடையால் மகிழ்ச்சியடைந்த அவருடைய மனம் என்பால் அன்பு கொண்டு தான் இருந்தது.

ஆகையால் அந்த அஸ்திரத்தை நான் மறக்கவே இல்லை. அந்த அஸ்திரத்தை மறக்காத வரையில் என்னுடைய பலமும் குன்றப் போவதில்லை. ராஜ்யம் முழுவதும் துரியோதனனைச்சேர வேண்டும்.

அப்படி இந்த ராஜ்யம் அவனுடையதே என்று நிலை நிறுத்திக் காட்டுவது- என் தலையில் நான் ஏற்றிருக்கும் பாரம், திருதராஷ்டிர மன்னரே! துரோணர், பீஷ்மர் முதலானோர் உமது பக்கத்திலேயே இருக்கட்டும். நான் ஒருவனாகச் சென்று, பாண்டவ சைதன்யத்தையே நாசம் செய்து விட்டு வருகிறேன்.

அந்தப் பொறுப்பு என்னைச் சார்ந்தது.
கர்ணன் இவ்வாறு பேசியதைக்கேட்ட பீஷ்மருக்குக்கோபம் வந்தது. அவர் எழுந்து சொன்னார், அற்ப புத்தி உடையவனே! எதிர் காலத்தை நீ உணரவில்லை. அர்ஜுனன் காணடவ வனத்தையே எரித்தவன்.

அவனுக்குத் துணை இருப்பதோ சர்வ வல்லமை படைத்த கிருஷ்ணன். இவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் நீ பேசுகிறாய்! இந்திரன் உனக்குக் கொடுத்த சக்தி ஆயுதம், போரில் அர்ஜுனனால் தாக்கப் பட்டு எரிந்து சாம்பலாகப்போகிறது.

அதையும் நீ காணத்தான் போகிறாய். ஆகையால் அதிகம் பேசாதே.

பீஷ்மர் இவ்வாறு பேசிய பிறகு கர்ணன் எழுந்தான். பீஷ்மரே! கிருஷ்ணரைப் பற்றி நீர் கூறியது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால், அவர் மஹாத்மா என்பதை நானும் அறிவேன். ஆனால் என்னுடைய வல்லைமையை அறியாமல் என் மனம் புண்படும் படி நீர் பேசியதன் பலனை இப்பொழுது அறிந்து கொள்வீராக.

நான் இதோ என் ஆயுதங்களை கீழே வைக்கிறேன். போரிலும் சரி, சபையிலும் சரி, யுத்தக் களத்திலும் சரி, நீர் என்னைப் பார்க்கப் போவதில்லை. நீர் அழிந்த பிறகு தான் என்னுடைய மகிமை என்ன என்பதைஇங்குள்ளவர்களுக்கும், உலகிற்கும் நான் காட்டப்போகிறேன்” என்று கூறிவிட்டு கர்ணன் சபையை விட்டு வெளியேறினான்.

இப்படி நடந்த பிறகு பீஷ்மர், துரியோதனனைப் பார்த்துச் சொன்னார்,துரியோதனனா! இப்பொழுது என்ன சொல்கிறாய்? கர்ணன் வாக்குத் தவறாதவன் அல்லவா? ராஜ்யம் முழுவதும் உனதாக்குவது தனது பாரம் என்று கூறியவன், அந்த பாரத்தை இப்பொழுது இறக்கி வைத்து விட்டுப்போய் விட்டான்.

இப்பொழுது யார் அந்தப் பாரத்தைத் தாங்கப் போகிறார்கள்? இங்கே நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாய்! இப்பொழுதாவது நான் சொல்வதைக்கேட்டுப் பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்” என்று கூறினார்.
ஏளனம் கலந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு, துரியோதனன் கோபம் கொண்டான்.
…………………………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here