மஹாபாரதம்-40
பேசுகிறது-சோ
……………………………..
உத்யோக பர்வம்
…………………..
விதுர நீதி
……………………………………
விதுரர் தனது அறிவுரையைத் தொடங்கினார்.
அரசரே! மனிதர்களிடையே பண்டிதர்களும் இருக்கிறார்கள். மூடர்களும் இருக்கிறார்கள். கோபம், மகிழ்ச்சி, மரியாதையின்மை, வெறி, தான் வணக்கத்துக்குரியவன் என்கிற எண்ணம்.- இவற்றால் பாதிக்கப் படாதவன் பண்டிதன் என்று கூறப் படுகிறான்.
பண்டிதனாகப் பட்டவன் என்ன ஆலோசனையை நடத்துகிறான் என்பது, பிறரால் தெரிந்து கொள்ள முடியாது. அவன் ஒரு செயலைச் செய்த பிறகு தான், மற்றவர்களால் அதை அறிந்து கொள்ள முடியும். முன் கூட்டியே அவன் இதைச் செய்யப்போகிறான் என்று பிறரால் அறிந்து கொள்ள முடியாது.
அவன் யாரையும் அவமதிப்பதில்லை. மிகவும் பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டு, விஷயங்களைப் புரிந்து கொள்கிறான். மற்றவர்கள் அவனிடம் கேட்காத போது, அவன் ஆலோசனை கூறுவதில்லை. நன்றாக யோசித்து ஒரு செயலைத் தொடங்கிய பிறகு, அதைப் பாதியில் அவன் விடுவதும் கிடையாது.
பண்டிதனுடைய வாக்கு, சூட்சுமமானது. அவன் ஒரு கருத்தைச் சொல்லும் பொழுது, அது மற்றவர்களுக்கு விசித்திரமாகக் கூடத் தெரியலாம். ஆனால், எதிர் காலத்தில் இன்ன நடக்கப் போகிறது என்பதை தன்னுடைய அறிவின் மூலம் தெளிந்து சொல்லக் கூடியவன் அவன்.
அவனுடைய அறிவு காலத்திற்கேற்ப முறையாகச் செயல் படும். செல்வம், வித்தை, அதிகாரம் இவையெல்லாம் அவனிடம் இருந்தாலும் கூட, அவன் கர்வம் கொள்ளமாட்டான். பிறர் தன்னைப் பாராட்டும் போது அவன் அதற்காக மகிழ்ந்து விடுவதில்லை. பிறர் தன்னை அவமதிக்கும் போது அதற்காக அவன் வருத்தப் பட்டுக் கொள்வதுமில்லை.
அடைய முடியாததை அடைந்து விட வேண்டும் என்று அவன் முனைவதில்லை. தன்னிடமிருந்து நழுவிப்போனதை நினைத்து மன உளைச்சல் பட்டுக் கொள்வதும் அவன் வழக்கமன்று. தனது காரியங்களை ஒழுங்காகச் செய்வதற்காகவே அவன் பொருள் சேர்ப்பான். பேராசை கொண்டு செல்வத்தை ஈட்ட மாட்டான். தர்மத்தின் பாதையிலிருந்து அவன் சிறிதும் அகலுவது கிடையாது.
பண்டிதனின் குணங்கள் இவை என்றால், மூடனின் குணங்கள் என்ன என்பதையும் கூறுகிறேன்.ஓரளவு கற்ற பிறகு மிகவும் கற்று விட்டதாக நினைப்பவன், ஏழையாக இருந்தாலும் செலவாளியாக இருப்பவன், கெட்ட வழியில் சென்றாவது செல்வத்தை ஈட்ட விரும்புகிறவன்- ஆகியோர்கள் மூடர்களே! நண்பர்கள் விஷயத்தில் வஞ்சகமாக நடந்து கொள்பவன்.
தன்னிடம் விருப்பமில்லாதவனை விரும்புகிறவன், தன்னை விரும்புகிற மனிதர்களை அலட்சியப் படுத்துபவன். தானே வலியச் சென்று விரோதத்தைத்தேடிக் கொள்பவன்- ஆகியோரும் மூடர்களே! எடுத்த காரியத்தை முடிப்பதில் முனையாமல், அதை நீட்டிக் கொண்டே போகிறவன்-, தான் செய்கிற காரியத்தை சந்தேகத்துடனேயே செய்பவன், எதிலும் தாமதம் செய்கிறவன்- ஆகியோர்களும் மூடர்களாகவே கருதப் படுகிறார்கள்.
மூடனாக இருக்கிறவன், தன்னை யாரும் கேட்காத போதே அறிவுரை கூறுகிறான். தன்னிடம் குற்றங்கள் இருக்கும் போது, பிறரைக் குற்றவாளி என்று குறை கூறுகிறான். தன்னிடம் சக்தி இல்லாத போது அவன் கோபம் கொள்கிறான். அவன் தெய்வத்தை வணங்குவதில்லை.
அழைக்காத இடங்களில் எல்லாம் அவன் நுழைகிறான். மூடர்கள், சிறந்த உணவு வகைகளைத் தாங்கள் மட்டுமே தனியாக புசிப்பார்கள். மிகச் சிறந்த ஆடைகளைத் தாங்கள் மட்டுமே அணிவார்கள். அவர் களுடைய இந்தப் பழக்கங்கள் மிகவும் கொடியவை என்று கருதப் படுகின்றன.
மூடர்கள் பாவம் செய்கிறார்கள், ஒரு மனிதன் பாவம் செய்யும் பொழுது அதனால் வரக் கூடிய துன்பம் பலரைப் பற்றுகிறது. அவனுடன் இருந்தவர்கள் அந்தத் துன்பத்தை அனுபவிக்கும் போது பாவத்தின் விளைவிலிருந்து விடுபடுகிறார்கள்.ஆனால் பாவத்தை செய்த அவன், தொடர்ந்து அதனால் பற்றப் படுகிறான்.
அரசே! மன்னர்களின் கடமைகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன். அரசனாகிறவன், அறிவு பூர்வமாகவே எல்லாப் பிரச்சனைகளையும் அணுக வேண்டும். நண்பர்கள், பகைவர்கள் சக்தி இல்லாதவர்- என்று மூன்று வகையானவர்களையும் சாம, தான, பேத, தண்ட, முறைகளைப் பயன் படுத்தித் தன் வசமாக்க வேண்டும்.
அரசன் தனது இந்திரியங்களை வெல்ல வேண்டும். பெண்கள், சூதாட்டம், வேட்டை, மதுபானம்மிகவும் கடுமையான தண்டனை, செல்வத்தை விரயமாக்குதல்- என்ற ஏழு தீமைகளையும் அரசன் ஒதுக்கித் தள்ள வேண்டும்.
அரசே! சாதாரண மனிதர்களை- நோய் கொல்கிறது.ஆனால் அரசனை- தவறான ஆலோசனை கொன்று விடும். எப்படி ஒரு மனிதன் தனி வழியே போகக் கூடாதோ, அதே போல அரசனாகிறவன், தான் மட்டும்அமர்ந்து எந்தக் காரியத்தையும் ஆலோசனை செய்யக் கூடாது. அரசனுக்குப் பொறுமை வேண்டும்.
பொறுமையுள்ள அரசனை மக்கள் சக்தியற்றஅரசன் என்று நினைப்பதுண்டு. அரசன் பொறுமையோடு இருப்பதால், அவனுக்கு வரக் கூடிய தீங்கு இது ஒன்றுதான்.ஆனால், உண்மையில் பார்த்தால் இது தீங்கே இல்லை. ஏனென்றால் பொறுமையே அவனுக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்து விடும்.
சக்தியில்லாத அரசனுக்குப் பொறுமை மிகவும் அவசியமாகி விடுகிறது. சக்தி உள்ள அரசனுக்கோ பொறுமை மிகச் சிறந்த ஆபரணமாகி விடுகிறது.ஆகையால், அரசன் பொறுமையைக் கடைப் பிடிக்கத் தக்கவன். குப்பை இல்லாத ஒரு இடத்தில் விழுந்த நெருப்பு, தானே அணைந்து விடுகிறது.
அது போல பொறுமையைக் கடைப்பிடிக்கும் அரசனிடம், மற்றவர்கள் காட்டும் பகை தானாகவே அழிந்து போகிறது. பொறுமையால் சாதிக்க முடியாதது இந்த உலகில் எதுவும் கிடையாது என்று கூட சொல்லி விடலாம். கல்வி தான் மிகச் சிறந்த மனத் திருப்தி. அஹிம்சை தான் மிகச் சிறந்த சுகம்.
தர்மத்தின் பாதை தான் மிகச் சிறந்த நன்மை. அதே போல் பொறுமை தான் மிகச் சிறந்த அமைதி. இல்லாதவனுடைய ஆசைகள் அவனுடைய மனதை அழுத்தி, அவன் உடலை அழிக்கின்றன.
அதே போல சக்தி இல்லாதவன் கோபத்தை வளர்த்துக் கொண்டால், அந்தக்கோபம் அவனுடைய இயலாமையின் காரணமாக அவன் மனதை வருத்தி, அவன் உடலை அழிக்கும். ஆக, பெரியது ஒன்று உண்டென்றால் , அந்த ஒன்று பொறுமைக்கு வழி வகுத்துக் கொடுக்கும் சத்தியம் தான்.
சம்சார வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதன்னுடைய காரியத்தில் முயற்சி இல்லாமல் இருப்பவன், சன்னியாச வாழ்க்கை மேற்கொண்ட பிறகு தன்னுடைய காரியத்திலேயே கவனமாக இருப்பவன்- ஆகிய இரண்டு பேரும் என்றுமே புகழ்பெற மாட்டார்கள்.
நாம் நியாயமாகப் பெற்ற பொருளிலிருந்து – தன்னால் இயன்றவற்றை கொடுக்கத் தகாதவனுக்குக் கொடுப்பது, கொடுக்க வேண்டியவனுக்குக் கொடாமல் இருப்பது ஆகிய இரண்டுமே குற்றங்கள்.
தானம் செய்யாத பணக்காரன், முயற்சி இல்லாத ஏழை இருவருமே பயனற்றவர்கள். இரண்டு பேர் நேராகச் சொர்க்கம் செல்கின்றனர். ஒருவன்- யோகத்துடன் கூடிய சன்னியாசி. மற்றொருவன் – போரில் புறமுதுகு காட்டாமல் போரிட்டு உயிரிழந்தவன். இரண்டாகிய விஷயங்களைச் சொன்னேன்.
இனி, மூன்றாகிய விஷயங்களைக் கூறுகிறேன். மனைவி, பணியாள், மகன்- மூவரும் தனக் கென்று சொத்து உரிமை இல்லாதவர்கள். பிறர் பொருளைத் திருடுவது, பிறர் மனைவியுடன் சேர முயற்சிப்பது, தன்னிடம் அன்பு வைத்தவளைத் தள்ளி விடுவது- என்ற மூன்று குற்றங்கள் ஒருவனுக்கு நாசத்தை உண்டு பண்ணும். நரகத்திற்குச் இட்டுச் செல்லக் கூடிய ஆசை, கோபம், கஞ்சத்தனம்- ஆகிய மூன்றையும் மனிதர்கள் விட வேண்டும்.
அரசே! உன்னைச் சேர்ந்து உன்னோடு வாழ்பவர்கள், உன்னிடம் பணி செய்பவர்கள், உம்முடன் இருக்கிறேன் என்று சொல்லி உன்னை அண்டுகிறவர்கள்- ஆகிய மூவரும் உன்னை சரணடைந்தவர்களாகிறார்கள். உனக்குத் துன்பம் நேரும் போது கூட, இந்த மூன்று வகையானவர்களை நீ கைவிட்டு விடக் கூடாது.
இனி நான்கு விதமான விஷயங்களாவன, நான்கு விதமான மனிதர்களிடம் அரசன் ஆலோசனை செய்யக் கூடாது. அறிவில் குறைந்தவர்கள், விரைவில் செய்து முடிக்க வேண்டிய காரியத்தில் தாமதம் செய்பவர்கள், சோம்பல் உடையவர்கள், முகஸ்துதி செய்து பிழைக்க நினைப்பவர்கள்- ஆகிய நால்வரிடம் அரசன் ஆலோசனை செய்வது நல்லதல்ல- அரசனே! உன்னைப் போன்ற செல்வந்தவர்கள் வீட்டில் நான்கு விதமான மனிதர்கள் இருப்பது நல்லது.
ஒன்று- உன்னுடைய வயது முதிர்ந்த உறவினர்- இரண்டு- செல்வந்தனாக வாழ்ந்து வீழ்ச்சி அடைந்துள்ள உறவினர். மூன்று- ஏழையாக இருக்கிற சினேகிதன். நான்கு- மகனைப் பெறாத சகோதரி, இவர்களில் முதிர்ந்த வயதுடைய உறவினர், வீட்டிலுள்ள அனைவருக்குமே தர்மங்களை உபதேசிப்பார்.
செல்வந்தனாக இருந்து வீழ்ந்து விட்ட உறவினர், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார், ஏழையாக இருக்கிற நண்பர், பொதுவாக நல்லதையே செய்வார். மகன் இல்லாத சகோதரி, குடும்பத்தின் செல்வத்தைக் காப்பாற்றிக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பாள்.
இனி, ஐந்து வித விதமானவர்கள் பூஜிக்கத் தக்கவர்கள். தேவர்கள், முன்னோர்கள், சக மனிதர்கள், சந்நியாசிகள், விருந்தாளிகள், ஆகி ஐந்து பேரையும் எப்பொழுதும் பூஜிக்கிறவன் புகழ் பெறுகிறான். ஐந்து இந்திரியங்களினால் உணரக் கூடிய விஷயங்கள் ஒன்றில் மனிதன் அதிகம் பற்று வைத்து விட்டால், அப்பொழுது அவனுடைய அறிவு ஓட்டைப் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் ஒழுகுவது போல் ஒழுகி விடும்.
இனி ஆறுவித விஷயங்களாவன,ஆறு குற்றங்களை மனிதன் அகற்ற வேண்டும். அதிக தூக்கம், அச்சம், மற்றவர்கள் மீது பேகாபம், முயற்சியின்மை, விரைந்து செயல் படாமை.- ஆகிய இந்த ஆறு குற்றங்கள் செல்வத்தை த் தடுக்கும். ஆறு குணங்களை மனிதன் எப்பாடுபட்டும் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அவை, உண்மையே பேசுவது, மற்றவர்களுக்கு உதவுவது, சோம்பல் இல்லாமல் இருப்பது, பொறாமை இல்லாமல் வாழ்வது, துணிவு, பொறுமை- என்ற ஆறாகும். செல்வத்தின் வரவு, நோயில்லாத வாழ்க்கை, அன்புள்ள மனைவி, அமைதி நிரம்பிய இல்லம், தன் சொல் கேட்கும் மகன், பொருளை ஈட்டக் கூடிய கல்வி, ஆகிய ஆறும் மனிதனுக்கு எப்பொழுதும் இன்பத்தைக் கொடுக்கும்.
ஆசை, கோபம், கஞ்சத்தனம், மதி மயக்கம், மன வெறி, பொறாமை, ஆகிய ஆறு கெட்ட குணங்களை ஒதுக்கியவன் இந்திரியங்களை வென்றவனாகிறான். அவனுக்குப் பாவத்துடன் தொடர்பு ஏற்படுவதே கிடையாது.
ஆறு வகையானவர்கள், வேறு விதமான ஆறு வகை மனிதர்களினால் தங்கள் பிழைப்பை நடத்துகிறார்கள். திருடன்- முன் ஜாக்கிரதையற்ற மனிதனிடம் தன் பிழைப்பை நடத்துகிறான். வைத்தியன்- நோயாளியிடம்தன் பிழைப்பை நடத்துகிறான். பெண்கள்- ஆசையுள்ள மனிதர்களால் ஜீவிக்கிறார்கள்.
யாகம் செய்து வைப்பவன்- யாகம் செய்ய விரும்புகிறவர்கள் மூலமாக வாழ்கிறான். சண்டை போடுகிறவர்கள் மூலம்- அரசன் வாழ்கிறான்.மூடர்களினால்- பண்டிதர்கள் வாழ்கிறார்கள். கண்ணிமைக்காமல் எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருக்காவிட்டால் ஆறு விஷயங்கள் அழியும்.
ஒன்று- பசுக்கள் . இரண்டு- வேலையாட்கள், மூன்று- விவசாயம், நான்கு- மனைவி, ஐந்து- கல்வி, ஆறு- பணத்தை வேண்டிநம்முடைய நட்பை நாடுபவர்கள். இந்த ஆறையும் சிறிது காலம் கவனிக்கா விட்டாலும் கூட, அவை அழிவை எய்தும்.
ஆறு விதமானவர்கள் வேறு வகையான ஆறு பேரை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள்.
சீடர்கள், ஆசார்யனை மரியாதை இல்லாமல் நடத்தும் காலம் வருகிறது. மனைவியை அடைந்த மனிதன், தன்னுடைய தாயை அவமதிக்கிறான். ஆசை நீங்கின மனிதன், தன் ஆசையை தணித்த பெண்ணை அவமதிக்கிறான். பயனை அடைந்து விட்ட மனிதன், உதவி செய்த மனிதனை அவமதிக்கிறான்.
வியாதி நீங்கின மனிதன், அந்த வியாதியை நீக்கிய வைத்தியனை அவமதிக்கிறான். கரையை அடைந்து விட்ட மனிதன், கரை சேர உதவிய தோணியை அவமதிக்கிறான். இது உலக இயல்பு.
நோயற்ற உடல், கடனில்லாத வாழ்க்கை, வேறு தேசத்தில் சென்று வசிக்க வேண்டிய அவசியமில்லாமை.நல்ல மனிதர்களுடன் சேர்க்கை, தனது முயற்சியால் கிடைக்கிற செல்வம் பயமற்ற வாழ்க்கை,- ஆகிய ஆறும் என்றுமே சுகத்தை அளிப்பவை பொறாமையுள்ளவன், அருவெறுப்பாக நடந்து கொள்பவன், எதிலும் திருப்தியடையாதவன், காரணமில்லாமல் கோபம் கொள்பவன், எப்பொழுதும் பிறர் மீது சந்தேகப் படுகிறவன், மற்றவர்களுடைய வாழ்க்கையை கெடுத்துத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நேரிடுகிறவன்- ஆகிய ஆறு பேர்களும் எந்நாளும் அமைதி பெறுவதில்லை.
இனி, ஏழுவித விஷயங்களாவன- ஏழு குற்றங்களை அரசன் விலக்கியே வைக்க வேண்டும். அவையாவன- பெண்கள், சூதாட்டம், வேட்டை , மதுபானம், மிகவும் கடுமையான சொற்களைப்பேசுவது , மிகவும் கடுமையான தண்டனைகளை அளிப்பது, பொருளை வீணாகச் செலவிடுவது ஆகியவை. இந்த ஏழு குற்றங்களும் தன்னை நன்றாக ஸ்திரப் படுத்திக் கொண்டுள்ள அரசனைக் கூட அழிக்கும் சக்தி உடையவை.
இனி, எட்டு விதமான விஷயங்களாவன- எட்டு குணங்கள் ஒரு மனிதனிடம்- இருந்தால் அவன் புகழ் பெற்று விளங்குவான். அவையாவன- அறிவு, நல்ல குலத்தில் பிறப்பு, அடக்கம் உடைமை, நல்ல கல்வி, வீரம், அளவறிந்து பேசுவது, தன்னுடைய சக்திக்குத் தக்கபடி தர்மம் செய்வது, செய் நன்றி மறவாமல் இருப்பது, ஆகிய எட்டு குணங்களும் மனிதனை உயரச் செய்கின்றன.
ஒரு மனிதன் சுகமாக வாழ்வதற்குபு அவனுக்கு எட்டு விஷயங்கள் தேவை. நல்ல நண்பர்கள், நல்ல செல்வம், மகனுடைய அரவணைப்பு, அன்புள்ள மனைவி, பத்தினியை பிரியாமல் வாழ்வது, தன் சுற்றத்தார்களுடைய உயர்வு, மனதில் விரும்பிய பொருளை அடைவது, ஜன சமூகத்தில் மரியாதை, ஆகிய எட்டும் ஒரு மனிதனுக்கு அமைந்து விட்டால், அவன் குறை வில்லாத சுகத்தை அனுபவிப்பான்.
இந்திரியங்கள் என்கிற ஐந்து சாட்சிகளைக் கொண்டு ஆத்மா என்கிற ஜீவனை தாங்கி யிருபக்கிற நமது சரீரத்திற்கு ஒன்பது துவாரங்கள் இருக்கின்றன. இப்படி ஒன்பது துவாரங்கள் அமையப் பெற்ற இந்த சரீரத்தை, முறையாகப் புரிந்து கொண்டவன் சிறந்த அறிவு பெற்ற மனிதனாகிறான்.
அரசே! பத்து விதமான மனிதர்கள் தர்மத்தின் பாதையை அறிந்து கொள்வதில்லை. வெறி கொண்ட மனம் படைத்தவன், அஜாக்கிரதையுள்ளவன், மனப் பித்துக் கொண்டவன், களைப் படைந்து விட்டவன், கோபக்காரன், அவசரமுள்ளவன், கஞ்சன், பயந்தவன், மிகுந்த ஆசையுடையவன், என்கிற பத்துப்பேரும் தர்மத்தை அறிந்து கொள்வதே கிடையாது. ஆகையால், அறிவுள்ள மனிதன் இந்த விஷயங்களில்எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பகைவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்து, சரியான நேரத்தில் அவர்களை எதிர்க்க வேண்டும். சிறிதும் பலமில்லாமல் ஒரு பகைவன் இருக்கிறான் என்பதால், அவனை அலட்சியப் படுத்தி விடக் கூடாது.
பலசாலியுடன் யுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது. தக்க சமயத்தில் பராக்கிரமத்தை வெளிப் படுத்தித் தான், பலசாலியான பகைவனை எதிர்க்க வேண்டும்.இப்படியெல்லாம் செயல்படுகிற அரசன் புகழப் படுகிறான். எதைப் பற்றியும் அதிகமாகப்பேசிக் கொண்டே இராமலும், விவாதத்தை ப் பொறுத்துக் கொள்பவனுமாக இருப்பவன் மகிழ்ச்சி அடைகிறான்.
தன்னைப் பற்றியே தற் புகழ்ச்சியாகப் பேசிக் கொள்ளாதவனும், கர்வத்தைக் காட்டுகிற வகையில் நடந்து கொள்ளாதவனும், மற்றவர்களுடைய அன்பிற்குப் பாத்திரமாகிறான்.
தனக்கு இன்பம் நேருகிற போது மிகவும் சந்தோஷமடைவது, பிறருக்குத் துன்பம் நேருகிற போது அதைக் கண்டு வருந்தாமல் இருப்பது, ஏதாவது தர்மம் செய்து விட்டு, பிறகு செய்து விட்டோமே என்று மனதில் தாபம் கொள்வது- ஆகியவற்றை தவிர்க்கிற மனிதன் நல்லவன் என்று புகழப் படுகிறான்.
பயனில்லாமல் ஒருவன் தன் தேசத்தை விட்டு மற்றொரு தேசத்திற்குச் செல்லக் கூடாது. அப்படி அவசியம் நேரிட்டு மற்றொரு தேசத்திற்கு ச் செல்லும்போது,அந்த தேசத்திற்கு ச் செல்லக் கூடாது.
அப்படி அவசியம் நேரிட்டு மற்றொரு தேசத்திற்குச் செல்லும் போது, அந்த தேசத்தினுடைய பழக்க வழக்கங்கள், அந்த தேசத்திற்கு உள்ள லட்சியங்கள், அங்கே மனிதர்கள் வாழும் வகைகள் ஆகியவற்றை அறிந்து, அங்குள்ள ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்பவன்- அந்தத் தேசத்தில் முன்னுக்கு வருவான். அவன் எந்தத்தேசத்திற்குச் சென்றாலும் அங்கே அவனுக்கு மரியாதை கிட்டும்.
தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டு, பிறகு ஒரு அளவோடு உண்பவன், அளவில்லாத காரியங்களைச் செய்து விட்டு, குறைவாக த் தூங்குகிறவன், தன்னை அண்டினால் பகைவர்களுக்கும் கூட தர்மம் செய்பவன்- ஆகியோரைத் தீமைகள் நெருங்க மாட்டாது.
தவறான காரியத்தைச் செய்ய நேர்ந்து விட்டால், அதற்காகத் தன் மனதிலேயே மிகவும் வெட்கம் கொண்டு அவஸ்தைப் படுகிற மனிதன், உலகத்திற்கே நன்மை புரியக் கூடியவன். அப்படிப்பட்டவன் தன் சித்தம் நிலை பெற்றவனாகி மற்றவர்களுக்கும் நன்மையைச் செய்கிறான்.
இவ்வாறு திருதராஷ்டினுக்குப் பல அறிவுரைகளைக் கூறிய விதுரர், திருதராஷ்டிரனும் இம்மாதிரியெல்லாம் வாழ வேண்டும் என்று கூறினார். அப்பொழுது திருதராஷ்டிரன், விதுரா! நான் தூக்கமிழந்து தவிப்பது உனக்குத் தெரியும். நான் என்ன செய்தால் அது கௌரவர்களுக்கும் நன்மையைச் செய்து, பாண்டவர்களுக்கும் நன்மையாக முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.
என் மனம் கெடுதலையே நாடுகிறது என்பதையும் கூட நான் உணர்கிறேன். மிகவும் மனம் கலங்கிப்போயிருக்கிறேன். தெளிந்த மனம் உள்ள நீ, நான் என்ன செய்தால், இரு சாராருக்கும் நன்மை பயக்கும் என்பதை எனக்குச் சொல்” என்று கேட்டான்.
விதுரர் மீண்டும் பேசினார், நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி, பிறர் கேட்காமல் அது பற்றி தன்னுடைய கருத்தை மற்றவர்களுக்குச் சொல்பவன், அவமானத்தை அடையக் கூடும்.
ஆனால், நீர் இப்பொழுது என்னிடம் நேரடியாகக் கேட்கிற படியால், நான் என் மனதில் பட்டதை உமக்குச் சொல்கிறேன். ஒரு காரியம் எளிதாகக் கை கூடும் என்பதால், அதற்குக் கெட்ட வழிகளை நாடி விடக் கூடாது. ஆனால் உமது மனமோ அந்தப் பாதையில் தான் செல்கிறது.
ராஜ்யம் நமக்குக் கிட்டி விட்டதே என்று தகாத படி நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது. எப்படிக் கிழட்டுத்தனம் ஒரு மனிதனின் அழகைக் கெடுத்து விடுகிறதோ, அதே போல் மனதை அடக்காமல் இருப்பது மனிதனின் செல்வத்தைக் கெடுத்து விடும்.அதிக ஆசை, அழிவைத் தான் கொடுக்கும்.
உணவை விரும்புகிற மீன், அதற்கு வேண்டிய உணவினால் மறைக்கப் பட்டிருக்கிற இரும்பினாலான தூண்டிலை விழுங்கி விடுகிறது. இப்படி அந்த உணவுக்கு ஆசைப் பட்டதன் காரணமாக அந்த மீன், மறைந்து இருக்கும் ஆபத்தை உணராமல் தன் வாழ்வையே இழக்கிறது. அது போல மனிதனும் ஆசையின் காரணமாக ஆபத்தை உணராமல் நடந்து கொள்ளக் கூடாது.
அரசே! ஒரு மரத்தில் இருந்து பழுக்காத காய்களை ஒருவன் பறித்து விட்டால், அவனுக்கு அந்தப் பழத்திலிருந்து ரசம் கிட்டாது. விதைகளும் நசித்து விடுகின்றன.
ஆனால் நல்லகனியாகிப் பக்குவமடைந்துள்ள போது பழங்களைப் பறிப்பவன்- அவற்றிலிருந்து தானும் அதனுடைய ரசத்தைப் பெறுகிறான். அந்தப் பழத்தின் விதையினால் மேலும் பலன் பெறும் வாய்ப்பும் அவனுக்கு உண்டாகிறது.
வண்டுகள் பூக்களிலிருந்து தேனை எடுக்கும் பொழுது, பூவை அழித்து விடாமல் தான் தேனைக் கவருகின்றன.அதே போல், மற்றவர்களை அழிக்காமல் தான் அவர்களிடமிருந்து நாம் பெறக் கூடிய செல்வத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். நல்ல நந்தவனத்தில் பூ பறிப்பவன், அந்த நந்தவனத்திலுள்ள செடிகளை வளர்த்து, அவற்றை மிகவும் பாதுகாத்து, அதன் பூக்களை எடுத்து அனுபவிக்கிறான்.
அதே போல் செல்வம் செழிக்கச் செழிக்கத் தான் அதிலிருந்து நாம் அதை அனுபவிக்க வேண்டும். மூலத்தையே அழிக்கிற காரியம் எதையும் நாம் செய்யக் கூடாது. நந்தவனத்திலிருந்து பூக்களைச்சேகரிக்க முயல்பவன், செடிகளையே அழித்து விட்டு அந்தப் பூக்களை பறித்துக் கொண்டால், அதில் அவனுக்கு என்ன லாபம்? ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது, அதைச் செய்தால் என்ன நடக்கும், செய்யாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று இரண்டையுமே நன்றாக யோசித்து, பிறகு காரியத்தில் ஈடுபட வேண்டும்.
பிழைப்பு இல்லாமல் போகுமே என்ற பயம்- தாழ்ந்த மனிதர்களுக்கு இருக்கிறது. மரணமடைந்து விடுவோமோ என்ற பயம்- நடுத்தரமானவர்களுக்கு இருக்கிறது. அவமானம் வந்து விடக் கூடாது என்ற அச்சம்- மேலான மனிதர்களுக்கு இருக்கிறது. இந்த மூன்றாவதான அச்சம் தான் உமக்கு வர வேண்டும்.
அரசே! ஒருமனிதனின் சரீரம் தேர் போன்றது. அவனுடைய அறிவோ தேரோட்டி! அவனுடைய இந்திரியங்கள் குதிரைகள், இந்திரியங்களாகிய அந்தக் குதிரைகளை, அறிவின் மூலமாக அடக்கி ஒழுங்காகச் செலுத்தினால், அந்த மனித சரீரம் நேர் பாதையில் செல்கிறது. அந்த மனிதன் வளமாக வாழ்கிறான்.
மஹாபாரதம்
அறிவினால் அடக்கப் படாத இந்திரியங்கள், தேரோட்டியினால் அடக்கப் படாத குதிரைகள் போல், தேருடன் தேரோட்டியையும் சேர்த்துப் பள்ளத்தில் இழுத்து விட்டு விடுகின்றன.
பாவமே செய்யாதவர்களுக்கும் கூட, பாவம் செய்கிறவர்களை விட்டு விலகாவிட்டால் பாவத்தின் சேர்க்கை ஏற்பட்டு, அதற்குரிய தண்டனை கிடைத்து விடுகிறது. உலர்ந்த விறகுடன் சேர்ந்த ஈர விறகும் எரிந்து விடுகிறதல்லவா?அது போலத்தான் இதுவும். ஆகையால், பாவம் செய்கிறவர்களோடு சேரக் கூடாது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு விதமான குணம் பலத்தைத் தருகிறது. தீயவர்களாக இருப்பவர்களுக்கு, பிறரைப் பீடிப்பது பலத்தைத் தருகிறது.
பெண்களுக்கு, கணவருக்குப் பணிவிடை செய்வது பலத்தைத் தருகிறது. குணசாலிகளுக்குப் பொறுமை ஒன்று தான் பலம். அரசே! பேசுவதை மிகவும் அளந்து பேச வேண்டும். அதிகமாகப்பேசுவது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. நல்ல அர்த்தமுடைய வார்த்தைகளையும், மிகவும் புதுமையாகவும் – யாராலுமே அதிகமாகப்பேச முடியாது.
ஆகையால் பேசுவதைக் குறைக்க வேண்டும். நல்ல எண்ணத்துடன் ஒரு சில வார்த்தைகளைச் சொன்னாலும் அது நன்மைகளைத் தருகிறது. தீய எண்ணத்தோடு தருகிற வார்த்தைகள், கெடுதலையே உண்டு பண்ணுகிறது.கோடாரியால் வெட்டப் பட்ட காடு அழிந்தாலும் பிறகு தளிர்த்து விடுகிறது.ஆனால், வாயினால் சொல்லப் பட்ட வார்த்தை ஏற்படுத்துகிற புண், ஆறுவதே கிடையாது.
யுத்தத்தில் ஒருவன் உடலில் ஒரு அம்போ, ஈட்டியோ, வேறு ஆயுதமோ பாய்ந்து விட்டால், அதைப் பிடுங்கி எடுத்து விட முடியும். ஆனால், ஒருவன் மனதில் விரோதமான சொல் பாய்ந்து விட்டால், அதை அங்கிருந்து எடுக்கவே முடியாது. ஆகையால், பிறர் மனம் புண்படும் படி நாம் பேசக் கூடாது.
பிறர் மனம் புண் படும் படி பேசாதவன் மேலோனாகிறான். பிறருக்குத் தீமையே நினைக்காதவன் இந்த பூமிக்கே நன்மையைச் செய்கிறான்.
அரசே! உம்முடைய மகன்களுக்கு , பாண்டவர்கள் விஷயத்தில் தீய எண்ணம் நிறைந்து விட்டது.
தர்ம புத்திரன் உம்முடைய நூறு மகன்களையும் விட மேலானவன் என்பதை நீங்கள் உணர வேண்டும் . அவன் வல்லமையும் மிக்கவன் தான். தர்ம சாத்திரங்களில் உண்மையை அறிந்தவன்.
பொறுமை, தயை முதலியவை அவனிடம் நிறைந்திருக்கின்றன. உம்மால் அவனுக்கு உண்டான துன்பங்கள் அனைத்தையும், அவன் மிகவும் பெருந்தன்மையுடன் பொறுத்து வந்திருக்கிறான். அரசனாக இருக்க எல்லாத் தகுதிகளையும் படைத்த அவனை- ஆட்சியில் அமர்த்துங்கள்.
மஹாபாரதம்
அதுதான் நீர் இப்போது செய்யத்தக்க காரியம். இப்பொழுது செய்ய வேண்டியது என்ன என்று நீர் என்னை மீண்டும் மீண்டும் கேட்டதால் , இதை நான் உமக்குச் சொன்னேன்.
இவ்வாறு கூறிய விதுரரைப் பார்த்து திருதராஷ்டிரன், அறிவாளியே! தர்மத்தின் பாதையில் செல்லும் வழிகளைச் சுட்டிக் காட்டி, நீ செய்த அறிவுரைகள் எனக்குப் போதாது.மேலும் கேட்க வேண்டும் என்றஆவல் எனக்கு ஏற்படுகிறது. இன்னும் சொல்வாயாக” என்று கேட்டுக் கொண்டான். விதுரர் மேலும் சில விஷயங்களைச் சொன்னார்.
[…] இப்போது இங்கே வந்தது நன்மையில் முடியாது […]
[…] இப்போது இங்கே வந்தது நன்மையில் முடியாது […]