நரம்புகள்

நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

கொரோனா வைரஸ் மனித குலத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் உயிரிழப்பு சதவீதம் குறைவாக இருந்தாலும் இதன் பரவும் தன்மை அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே… கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் வெளிவந்த ஆய்வுகளை காணும்போது Sars-cov-2 மூளை மற்றும் நரம்புகளையும் பாதிக்கும் என்பது நமக்கு தெளிவாக தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் குடும்பம்…

கொரோனா வைரஸில் 7 வகைகள் உள்ளன. இவற்றில் 4 வகை வைரஸ்கள் லேசான நோய்களை உண்டாக்கும். மற்ற 3 வைரஸ்களும் கடுமையான பாதிப்பை உண்டாக்கக் கூடியது. மெர்ஸ் கோவி, Sars-cov-1, Sars-cov-2 ஆகியவை இதில் அடங்கும். இப்போது நமக்கு வந்திருக்கும் வைரஸ், Sars-cov- 2 வகையைச் சார்ந்தது. இந்த வைரஸின் உடன்பிறப்புக்களான மெர்ஸ் கோவி மற்றும் Sars-cov- 1 நரம்பு மண்டலத்தைத் தாக்கும் என்பது நாம் முன்பே அறிந்தது. தற்போதைய சார்ஸ் கோவி-2 வகை வைரஸினால் எவ்வகையான மூளை நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை விளக்கமாக அறிந்து கொள்வோம்.

வைரஸ்களின் அமைப்பு….

Sars-cov- 2 வைரஸின் உருவம் எப்படி இருக்கும் என்பதை தினம்தோறும் விளம்பரங்களிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு உருண்டையான வடிவம் அதன் மேலிருந்து முட்கள் நீட்டிக் கொண்டிருப்பது போலிருப்பதுதான் இந்த வைரஸின் தோற்றம். இந்த முட்கள் எதற்காக?
இந்த முட்களானது மனிதர்களுடைய உடலில் உள்ள ACE-2 receptor என்று சொல்லக்கூடிய பிரத்யேகமான ஏற்பிகள் வாயிலாக நமது உடம்பிற்குள் செல்வதற்கென இவ்வாறு வடிவம் பெற்றுள்ளது.

இந்த ஏசிஇ 2 ரிசப்ட்டார்கள்(ACE 2 Receptor) உடலின் பல்வேறு பாகங்களில் உள்ளன. சுவாசப் பாதைகள், நுரையீரல், சிறுநீரகம், சிறுகுடல், ரத்தக் குழாய்களைச் சுற்றி இருக்கும் செல்கள், மூளை நரம்புகள் ஆகிய அனைத்து இடங்களிலும் இருக்கும் இந்த ரிசப்ட்டார்கள் வழியாகவே வைரஸ்கள் நமது உடலுறுப்புக்களின் உள்ளே செல்கின்றன.

வைரஸ்கள் மூளையை சென்றடையும் வழிகள்…

நரம்புகள்

*மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில் மூளையைச் சுற்றி குருதி – மூளை வேலி என்னும் தடுப்புச்சுவர் உள்ளது. ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கும் பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை குருதி – மூளை வேலி வடிகட்டிவிடுகிறது. இதன்மூலம் மூளையானது தொற்றுநோய் நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. ஆனால், இந்த கோவிட் வைரஸ்கள் குருதி-மூளை வேலியை வெள்ளை அணுக்களுடன் சேர்ந்து எளிதாக தாண்டும் வலிமை பெற்றது.

*வாசனை நுகரும் நரம்புகள்(Olfactory nerves)வழியாக மூளைக்குள் சென்றடைவது…

*டிரான்ஸ்-சைனாப்டிக் ஸ்பிரட்(Trans synaptic spread) உடம்பின் வெளிப்புறமாக இருக்கும் நரம்புகள் மூலமாக வைரஸ்கள் உள்சென்று, ஒவ்வொரு நரம்புகளையும் ஒன்றோடொன்று இணைக்கும் Synapse என்று சொல்லக்கூடிய ஒரு இணைப்புப் பாதை மூலமாக மூளைக்குச் சென்றடைவது.

சார்ஸ் கோவி 2 வைரஸினால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து குறைவான தகவல்களே இதுவரை நமக்குக் கிட்டியுள்ளன. பல்வேறு நாடுகளில் நடந்த ஆய்வுகளையும், கிடைத்த தகவல்களையும் ஒருங்கிணைத்து பார்த்ததில் தலைவலி, தலைசுற்றல், வாசனை நுகரும் திறன் குறைதல், சுவை மங்குதல், ஸ்ட்ரோக் அதாவது பக்கவாதம், மூளைக்காய்ச்சல், ஒருவருடைய குணாதிசயங்களில் மாறுபாடு ஏற்படுதல், குழப்பம், கவனம் செலுத்துவதில் சிரமம், வலிப்பு, தண்டுவடத்தில் இருந்து வெளிவரும் நரம்புகளில் தாக்கம் ஏற்பட்டு உண்டாகும் குல்லியன்பாரி சிண்ட்ரோம்(Guillain-Barre Syndrome) எனும் நரம்பியல் கோளாறு, பலவீனம் மற்றும் தசை வலி ஆகிய தொந்தரவுகள் ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

தலைவலி…

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தொந்தரவுகளில் தலைவலி முக்கியமான ஒன்று. காய்ச்சல், இருமல், தொண்டை வலி மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் தலைவலியும் சேர்ந்து வரலாம். தலைவலியானது மூளைகாய்ச்சலின் ஒரு அறிகுறியாகவும் இருக்ககூடும். பேருண்ணிகள் என்று சொல்லக்கூடிய மேக்ரோஃபேசஸ் என்னும் செல்களில் இருந்து வெளி வரும் சைடோகின்ஸ்(Cytokines), கீமோகைன்ஸ் (Chemokines) என்னும் வேதியியல் பொருட்களினாலேயே தலைவலி உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சுவை மற்றும் வாசனை இழப்பு….

நரம்புகள்

ஜெர்மனியில் எடுத்த ஆய்வின்படி 60-70% சதவிகித கோவிட் நோயாளிகளுக்கு மூக்கில் வாசனை நுகரும் திறன் மற்றும் நாவில் சுவைக்கும் திறன் குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வாசனை நுகரும் திறன் குறைவது கோவிட் நோயின் மற்ற வெளிப்பாடுகளுக்கு முன்பே ஏற்பட்டு விடுவதால் இதனை கோவிட் நோயின் முதற்கட்ட அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுயநினைவு குறைதல்…

கவனக்குறைவு, குழப்பம், சுயநினைவு குறைதல், குணாதிசயங்களில் மாறுபாடு, முழுமையாக நினைவற்றுப் போகுதல்(Coma) இவை அனைத்தும் கீழ்வரும் காரணங்களால் ஏற்படலாம்.

*வைரஸ்கள் மூளையை நேரடியாகத் தாக்குவதினாலும்…
*ரத்தத்தில் உள்ள உயிர்வேதிப்பொருட்களின்(Metabolic) அளவில் மாறுபாடுகள் ஏற்படுத்துவதினாலும்…

*உடலில் சர்க்கரையின் அளவு கால்சியம்சத்து, சோடியம் சத்து, பொட்டாசியம் சத்து ஆகியவற்றில் ஏற்ற இறக்கம் உண்டாவதினாலும்…

*வைரஸின் தாக்கத்தினால் சைட்டோகைன்ஸ் என்று சொல்லக்கூடிய அழற்சிப்பொருட்கள் ரத்த அணுக்களில் இருந்து வெளியேறி மூளையை தாக்குவதினாலும் மூளையின் செயல்திறன் களில் தொந்தரவு ஏற்படலாம்.

வயதானவர்கள், நீரழிவு நோய் உள்ளவர்கள், ரத்தக்கொதிப்பு, இதயக்கோளாறு, சிறுநீரிக கோளாறு, புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுமாயின் மேற்கூறிய காரணங்களினால் எளிதில் நோய் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மூளையழற்சி (Encephalitis)..

மூளையை கிருமிகள்(பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள்) நேரடியாக தாக்குவதால் உண்டாவதே மூளையழற்சி நோய். கொரோனா வைரஸின் தாக்கம் மூளையழற்சி நோயாகவும் வரலாம் என்பதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்வு, களைப்பு, வலிப்பு, நினைவாற்றல் குறைதல், நினைவற்று போகுதல் ஆகியன மூளையழற்சியின் வெளிப்பாடுகள்.

ஸ்ட்ரோக் (பக்கவாதம்)..

கொரோனா வைரஸ் ரத்தநாளங்களின் சுவர்களில் இருக்கும் ஏசிஇ 2 ரிசப்டார் என்னும் ஏற்பிகள் வழியாகவே தனது ஆட்டத்தை ஆரம்பிப்பதால், ரத்தஓட்டம் தடைபட்டு ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. வயதானவர்கள், வைரஸின் தாக்கத்தினால் ரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகமாக உள்ளவர்கள், அலர்ஜி அறிகுறிகளான, சி ரியாக்டிவ் ப்ரொட்டீன்(C-reactive protein), பெரிட்டின்(Ferritin), இன்டர்லுகின்(IL-6)

ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் தன்மை அதிகமாக உள்ளதாகவும், அதனாலேயே மூளையில் ரத்த குழாய் அடைப்பு, நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஆகியன சர்வ சாதாரணமாக ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

உடல் நரம்புகளில் கோளாறு…

நரம்புகள்

தண்டுவடத்தில் இருந்து வெளிவந்து கை கால்களில் விரிந்து பரவும் நரம்புகளில் கோவிட் வைரஸ் தாக்குவதினால் நோயாளிகளால் எழுந்து நிற்க நடக்க முடியாமல் போகிறது. அவர்களது கை கால்களிலும் உணர்வுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இவ்வகை நோயாளிகளின் நரம்புகளை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு நரம்புகளின் செயல்திறன் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்தது.

மருத்துவரீதியாக இதனை குல்லியன்பாரி சிண்ட்ரோம்(Guillain-Barre Syndrome) என்று கூறுவோம். நோய் தொற்று ஏற்பட்டு முதல் 5 முதல் 10 நாட்களுக்குள் இத்தகைய தொந்தரவு ஏற்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக மருந்துகள் உள்ளன அதனை செலுத்துவதன் மூலம் இந்நோயை குணப்படுத்த முடியும்.

ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸும் தன்னை அடிக்கடி உருமாற்றி நோயின்தன்மையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறது. மருத்துவ அறிஞர்களுக்கும் இது பெரும் சவாலாக உள்ளது. மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இந்த நோயை எதிர்க்கும் பொறுப்பு உள்ளது.

வருமுன் காப்பதுதான் சிறந்தது. கொரோனாவிற்கென நிறைய புதுப்புது மருந்துகள் வந்தாலும், தனி மனித ஒழுக்கமே இந்த நோயை அடியோடு ஒழிப்பதற்கான தீர்வு. அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளிவிட்டு இருத்தல் தேவையானவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுதல், சரியான முறையில் முகக் கவசம் அணிதல் ஆகியவையே இந்த கொரோனா நோயினை வெல்வதற்கான முக்கிய ஆயுதங்கள்…

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here