சோழர்களின் குலதெய்வம்

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

Nisumbasoodani of Tanjore

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி, தஞ்சை கீழவாசல் நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன், தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம்.

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் அமைந்துள்ளது இக்கோயிலின் மூலவராக நிசும்பசூதனி அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவரை வட பத்ரகாளி என்றும், ராகுகால காளியம்மன் என்றும் அழைக்கின்றனர். திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனிக்காக ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

சோழர்களின் குலதெய்வம்

ஆறடி உயரத்திற்கும் மேல் உயரமுள்ள அம்மன் தனது கரங்களில் பல படைக்கலங்களைக் கொண்டுள்ளார். தீச்சுடர் கேசம், முகத்தில் உறுதி, அசுரர்களை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம், வலது காதில் பிரேத குண்டலம், இடது காதில் பெரிய குழை, சதை வற்றிய உடல், திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள், அவற்றைச் சுற்றிலும் கச்சையாகக் காணப்படுகின்ற நாகம், உடலில் மண்டை ஓடுகள், எட்டுக் கரங்களிலும் ஆயுதங்களைக் கொண்டுள்ள அம்மனின் ஓர் இடக்கரம் காலின் கீழே கிடக்கும் அசுரரைச் சுட்டிக் காண்பிக்கிறது.

அவளது வலது திருவடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றப்பட்ட நிலையில் உள்ளது. இச்சிற்பத்தினைப் போன்ற வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சத்ருசம்ஹாரியாக, வெற்றித்தெய்வமாக காட்சி தருகிறாள் நிசும்பசூதனி. அன்னை பராசக்தி துர்க்கையாக, திரிபுரசுந்தரியாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் கொண்டு தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதை தேவி மகாத்மியம் தெளிவுபட உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை இராத்ரி சூக்தம் உட்பட வேறு பல நூல்களும் எடுத்துரைக்கின்றன.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

சோழர்களின் குலதெய்வம்

துர்கா சப்தசதி, தேவி மஹாத்மியம் ஆகியவை தேவியின் ஆற்றலைப் பலவாறும் விவரிக்கின்றன. இவை மார்க்கண்டேய புராணத்தில் ஒரு பகுதியாகும். தேவி மகாத்மியத்தில் ‘நிசும்ப வதம்’ ஒன்பதாவது சர்க்கமாகவும், ‘சும்ப வதம்’ பத்தாவது சர்க்கமாகவும் விவரிக்கப் பெற்றுள்ளன.

தேவியானவள் துர்கா பரமேஸ்வரியாக, ரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். தேவி, இறுமாப்புடைய அரக்கரிருவரையும் அழித்ததால் அவளுக்கு நிசும்பசூதனி என்கிற பெயர் வந்தது.

வெற்றிக்கு அதிதேவதையாக விளங்குபவள் ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி. எனவேதான், சோழப் பேரரசின் தொடக்கம், துர்க்கா பரமேஸ்வரியான நிசும்பசூதனியின் பிரதிஷ்டையில் உதித்தது.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

அவள் அருட்கருணை இருந்ததாலேயே சோழப் பேரரசின் மாட்சிமை கங்கை நதி வரையிலும், இலட்சத்தீவு, மாலத்தீவு, ஈழம், மலேயா, ஜாவா, சுமித்திரா, போர்னியோ போன்ற கடல் கடந்த நாடுகளுக்கும் சென்றடைந்தது. சோழர்களால் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை உருவாக்க முடிந்தது.

சுமார் 7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு காணப்படுகிறது. அன்னை, பீடத்தின் மீது ஒரு காலை மடித்து, மறு காலை தரையில் கிடக்கும் அசுரனின் தலைமீது பதித்தவாறு அமர்ந்துள்ளாள்.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

சோழர்களின் குலதெய்வம்

அவளின் திருக்கரங்களில் சூலம் மற்றும் வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தலையிலோ கேசம் தீச்சுடரென மேலெழுந்து நிற்கிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப்பூச்சிகளை அழிக்க வேண்டும் என்ற சீற்றம் தெரிகிறது. அவளது இருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மூச்சுத் திணறுகிறார்கள்.

தப்பியோட எத்தனிக்கிறார்கள். பெருமிதம் மிகுந்த வடிவம். சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் எனும் அசுரர்கள் அன்னையால் வீழ்த்தப்பட்டனர். தீமையை ஒடுக்கி, அருட்கருணை வழங்கும் துர்க்கா பரமேஸ்வரி இங்கு 1150 ஆண்டுகளுக்கும் மேலாக நிசும்பசூதனியாகக் காட்சியளிக்கிறாள்.

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

தொண்ணூற்றாறு விழுப்புண்கள் சுமந்த விஜயாலயன், காவிரிக்கரையில் எண்ணிலா கற்கோயில்களை எடுத்த ஆதித்தன், அவன் மகன் பராந்தகன், சிவஞானகண்டராதித்யன், செம்பியன் மாதேவியார், அரிஞ்சயன், சுந்தரன், ஆதித்த கரிகாலன், மதுராந்தக உத்தமன் என்ற சோழ மாமன்னர்களும் ஈடிணையற்ற இராஜராஜ சோழனும், கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனும், இராஜாதிராஜனும், குலோத்துங்கனும், பின்வந்த சோழப் பேரரசர்களும், தேவியர்களும், சேக்கிழார் பெருமானும், கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தரும், சோழ சாம்ராஜ்யத்து தளபதிகளும், போர்வீரர்களும் இந்த தேவியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் பெற்ற பேரரருள்தான், இன்று நாம் நூல்களில் காணும் சோழர் வரலாறு.

அந்த தேவியை வாழ்வில் ஒருமுறையேனும் நாமும் வழிபட்டு உய்யலாமே!

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here