ஆதிவம்சாவதரணப் பர்வம்

மஹாபாரதம்-46

கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி

………
மஹாபாரதம்
பேசுகிறது-சோ

……………………………..
உத்யோக பர்வம்
…………………..

கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி
………………………………………………….

காந்தாரியும், சபைக்கு அழைத்து வரப் பட்டாள். அவளிடம் திருதராஷ்டிரன், காந்தாரி துரியோதனன் என் கட்டளையை மீறுகிறான். பேராசையின் காரணமாக யுத்தத்தை விரும்புகிறான்.

இங்கே எல்லோரைரயும் அவமதித்துச் சபையை விட்டும் வெளியேறி விட்டான். நீ தான் அவனுக்கு நல்ல வார்த்தை சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
காந்தாரி திருதராஷ்டிரனை பார்த்துச் சொன்னாள், தர்மத்தின் வழியில் செல்ல மறுக்கிற துரியோதனனால், ராஜ்யத்தை அடைய முடியும் என்று நான் நம்பவில்லை.

என்னைக் கேட்டால் அவனுடைய நடத்தைக்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்வேன். துரியோதனன் மீது உமக்குள்ள பாசம் காரணமாக உமது அறிவு மழுங்கி விட்டது. அவன் செல்கிற வழி தவறானது என்று தெரிந்தும் கூட, நீர் அதைத் தடுக்காமல் விட்டு விட்டீர்.

தீயோர்களை உதவியாகக் கொண்ட துரியோதனனால் எல்லோருக்கும் அழிவு தான் விளையும். இப்படி காந்தாரி சொன்ன பிறகு திருதராஷ்டிரனும், காந்தாரியும் கேட்டுக் கொண்டதன் பேரில், துரியோதனன் மீண்டும் சபைக்கு அழைத்து வரப் பட்டான். மிகவும் கோபமுற்று இருந்த துரியோதனனுக்கு, காந்தாரி நீண்ட அறிவுரைகளைச் சொன்னாள்.

காந்தாரி கூறிய நல்ல வார்த்தைகளை வெறுப்புடன் கேட்டுக் கொண்ட துரியோதனன், துச்சானனையும் அழைத்துக் கொண்டு, சகுனி, கர்ணன், ஆகியவர்களோடு சபையை விட்டு மீண்டும் வெளியேறினான். ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று அவர்கள் ஆலோசனை செய்தார்கள். துச்சாதனன் சொன்னதன் பேரில் துரியோதனனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

பீஷ்மர், துரோணர், முதலியவர்களோடு சேர்ந்து கொண்டு கிருஷ்ணர் தன்னைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைத்து விடுவாரோ என்று அவன் சந்தேகிக்க ஆரம்பித்தான். இந்தச் சந்தேகத்தினால் தூண்டப் பட்ட துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாசனன் ஆகியோரைப் பார்த்து, கிருஷ்ணர் நம்மைப் பிடிப்பதற்கு முன்பாக நாமே அவரைப் பிடித்து விடுவோம் .

அவர் பிடிபட்டதை அறிந்த பாண்டவர்கள் ஊக்கம் குறைந்து, சக்தி இழந்தவர்களாவார்கள். அதன் பிறகு அவர்களின் யுத்த எண்ணத்தையும் கை விடுவார்கள் ஆகையால் நாம் முதலில் கிருஷ்ணனைக் கட்டிப் போடுவோம்” என்று கூறினான்.

துரியோதனனின் இந்தத் தீர்மானம் கிருஷ்ணரோடு ஹஸ்தினாபுரத்திற்கு வந்திருந்த சாத்யகிக்குத் தெரிந்தது. அவன் விதுரரிடமும், திருதராஷ்டிரனிடமும் இதைத் தெரிவித்தான். இப்படி நடந்தால் பெரும் கேடுவிளையும் என்று விதுரர், திருதராஷ்டிரனை எச்சரித்தார்.

மஹாபாரதம் கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி

அதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர் திருதராஷ்டிரனிடம், நான் விரும்பினால் இப்பொழுதே துரியோதனாதிகள் அனைவரையும் கட்டி, பாண்டவர்களிடம் ஒப்படைத்து விடுவேன். ஆனால் உங்கள் எதிரில் இப்படியெல்லாம் செய்ய நான் விரும்பவில்லை.

ஆகையால் , துரியோதனன் என்ன நினைக்கிறானோ அதைச் செய்யட்டும். அதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்” என்று கூறினார்.
திருதராஷ்டிரனோ மிகவும் நடுங்கிப்போய் விதுரரிடம், விதுரா! துரியோதனன் உடனே இங்கு அழைத்து வா! அவனை நல்வழிக்குத் திருப்ப மீண்டும் முயற்சி செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான். துரியோதனன் மீண்டும் அழைத்து வரப் பட்டான்.

திருதராஷ்டிரன் அவனிடம், கிருஷ்ணரைப் பிடிக்கும் எண்ணத்தைக் கை விடுமாறு கெஞ்சினான்.

அப்போது கிருஷ்ணர் துரியோதனனைப் பார்த்து, நான் தனியாக இருக்கிறேன் என்று கருதி நீ என்னைப் பிடிக்க நினைக்கிறாய்.ஆனால், உலகமே இங்கு தான் அடங்கியிருக்கிறது என்பதைப் பார்” என்று கூறி, தனது விஸ்வரூபத்தைக் காட்டினார்.

பீஷ்மர், துரோணர் விதுரர், சஞ்சயன், மகரிஷிகள் , திருதராஷ்டிரன், ஆகியோரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியைக் காண முடியாதவர் களாகி கண்களை மூடிக் கொண்டார்கள். திருதராஷ்டிரனுக்கு கிருஷ்ணர் அந்நேரத்தில் பார்வையை அளித்தார்.

ஆகையால் அவனும் அந்த விஸ்வரூபத்தைப் பார்த்தான்.
முனிவர்கள் கிருஷ்ணரைத் துதித்து, மஹானுபாவரே! தயவு செய்து உங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு, இந்த உருவத்தை மறைத்து, பழைய படியே காட்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது பூமாரி பொழிந்தது.

திருதராஷ்டிரன் கிருஷ்ணரை வணங்கி, இந்தக் காட்சியைப் பார்த்த நான் வேறு எதையும் பார்க்க விரும்பவில்லை” என்று கேட்டுக் கொண்டான். கிருஷ்ணரும் அப்படியே செய்தார். சபையே ஆச்சரியமுற்றது. அங்கு கூடியிருந்த அரசர்கள் அதிர்ச்சியுற்றார்கள்.

கடல் கலங்கியது. பூமி அசைந்து கொடுத்தது. பிறகு அனைவருடைய வேண்டுகோளையும் ஏற்று கிருஷ்ணர் விஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் தனது பழைய உருவத்தையே எடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு சபையோரை பார்த்துக் கிருஷ்ணர் இங்கு நடந்ததை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். என்னை துரியோதனன் என்ன செய்ய நினைத்தான் என்பதையும் பார்த்தீர்கள். இதற்கு மேல் எனக்கு இங்கு காரியம் இருப்பதாக நினைக்கவில்லை.

நான் சென்று தர்ம புத்திரனிடம் இங்கு நடந்தவற்றை எல்லாம் விளக்குகிறேன். என்று சபையில் இருந்து வெளியேறி குந்தியின் இருப்பிடத்தை அடைந்தார். சபையில் நடந்தவற்றை எல்லாம் கிருஷ்ணர் குந்தியிடம் எடுத்துச் சொல்லி பாண்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல் ஏதாவது உண்டா என்று அவளிடம் விசாரித்தார்.

அப்பொழுது தன் மகனான தர்ம புத்திரனிடம் சொல்ல விரும்பிய வார்த்தைகளை கிருஷ்ணர் மூலம் சொல்லி அனுப்ப தீர்மானித்து கிருஷ்ணரிடம் சொன்னாள். கிருஷ்ணா! நான் சொல்வதை நீ தர்ம புத்திரனிடம் சொல், தர்ம புத்திரா! நீ முழுமையான தர்மத்தை அறியாமல் அதன் ஒரு பகுதியை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

மஹாபாரதம் கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி

ஒரு தேசத்தின் மக்களுடைய பாவங்கள் எப்படி அரசனைச் சார்கிறதோ அதைப்போலஅரசனுடைய குற்றத்தால் மக்களும் பாதிக்கப் படுகிறார்கள். தேசத்தின் நிலைமைக்கேட்ப அரசன் நடந்து கொள்கிறானா, அல்லது அரசன் நடத்தைக்கேற்ப தேசம் நிலைபெறுகிறதா என்பது பற்றி சந்தேகமே உனக்கு வேண்டாம்.

அரசனைப் பொறுத்துத் தான் காலம் அமைகிறது.உங்களுக்குச்சேர வேண்டிய ராஜ்யத்தை நீ அடையாமல் விட்டால், அரசனுக்குரிய தர்மத்திலிருந்து நீ தவறியவனாவாய்.

ஒரு அரச குமாரன் ராஜ்யத்தை இழந்து போர் செய்ய விருப்பமில்லாமல் இருந்த போது, அவனுடைய தாயாரான விதுலை என்பவள், அவனுக்கு அரச தர்மத்தைப் பற்றி ப் பல விஷயங்களை எடுத்துரைத்தாள். அப்போது அவள்- க்ஷத்ரியன் முறிபட்டு விழுந்தாலும் விழலாமே தவிர, எவனையும் வணங்கக் கூடாது. என்று எடுத்துச் சொன்னாள்.

பகைவர்களைக் கொல்வதனாலேயே க்ஷத்ரியன் புகழ் பெறுகிறான் என்பதையும் அவள் விளக்கினாள். தனது வீரத்தைக் காட்ட வேண்டிய சமயத்தில் ஒரு க்ஷத்ரியன் கருணையைக் காட்டினால், அதனால் அவன் அவமதிப்பைத்தான் அடைவான் என்பதையும், அவள் கூறினாள்.

க்ஷத்ரியனுக்கும் மற்றவர்களிடம் கருணை காட்ட வேண்டிய நேரங்கள் வரும் என்பது உண்மையானாலும் , தகுதியானவர்களிடத்தில் தான் கருணை காட்ட வேண்டுமே தவிர, தகாதவர்களிடம் கருணை காட்டுவதால் புகழ் கிடையாது என்பதையும் அவள் சொன்னாள். வெற்றி பெற்றவனையே மந்திரிகளும், மக்களும் வணங்குவார்கள்.

என்பதைச் சுட்டிக் காட்டி, தன் மகனைப் போர் செய்து வெற்றி பெறுமாறு அவள் தூண்டினாள். பயந்த அரசனை விட்டு மக்களும், மந்திரிகளும் விலகுவார்கள் என்றும், பகைவர்களைக் கூட அவர்கள் அண்டிவிடக் கூடும் என்பதையும் அவள் எடுத்துச் சொன்னாள். விதுலையின் இந்த அறிவுரையைக் கேட்ட அவளுடைய மகன், போருக்கு ஆயத்தமாகி , அதன் பிறகு பல வெற்றிகளைக் கண்டான். பெரும் புகழ் பெற்றான்.

அது போல், தர்ம புத்திரா! நீயும் போர் செய்ய உன்னைத் தயார் செய்து கொள். அது க்ஷத்ரிய தர்மம். போரைத் தவிர்ப்பதால் புகழ் கிட்டும் என்று எண்ணாதே. இவ்வாறு நான் கூறியதாக தர்ம புத்திரனிடம் எடுத்துச் சொல். அர்ஜுனன், பீமன் ஆகியோருக்கும் அவர்களுடைய பராக்கிரமத்தை நினைவு படுத்து.

கௌரவர்கள் சபையில் திரௌபதிக்கு இழைக்கப் பட்ட அவமானத்தை அந்த ஐந்து சகோதரர்களையும் நினைத்துப் பார்க்கச் சொல். உயிரை விரும்புவதைக் காட்டிலும், வீரத்தினால் சம்பாதித்த வாழ்வை விரும்புவதே மேல் என்று நான் நினைப்பதாக என் மகன்களிடம் கூறு” இவ்வாறு குந்தி கூறிய பிறகு, கிருஷ்ணர் அவளிடமிருந்து விடை பெற்றார்.

குந்தி கிருஷ்ணரிடம் பேசியதையெல்லாம் , பீஷ்மரும் , துரோணரும் கேட்டார்கள். அவர்கள் மனம் பெரும் கவலையுற்றது. பெரும் நாசம் விளையப்போகிறது என்பதை உணர்ந்த பீஷ்மரும் துரோணரும் பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்ளுமாறு துரியோதனனை மீண்டும் வற்புறுத்தினார்கள். துரியோதனன் அவர்களுடைய அறிவுரைகளை ஏற்க மீண்டும் மறுத்தான்.

இதற்கிடையில் குந்தியிடமிருந்து விடை பெற்றுச் சென்ற கிருஷ்ணர், கர்ணனை தன் தேரில் ஏற்றிக் கொண்டு அவனிடம் பேசினார். அவன் குந்தியின் மகனே என்பதை கர்ணனுக்கு அவர் விளக்கினார். சூரியனுக்குக் குந்தி பெற்றெடுத்த பிள்ளை அவன் என்பதையும் கூறினார்.

நீ வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் அறிந்தவன். ஒரு கன்னிகைக்கு மகன் பிறந்து விட்டால், அந்தக் கன்னிகையை யார் மணம் செய்து கொள்கிறானோ, அவனே அந்த மகனுக்குத் தந்தையாகிறான் என்பது நாட்டின் வழக்கு. குந்தி கன்னிகையாக இருந்த போது நீ அவளுக்கு மகனாகப் பிறந்தாய்.

அதன் பிறகு குந்தியை மணந்த பாண்டு, உனக்கும் தகப் பனாகிறான். பாண்டவர்கள் ஐவரும் உனக்கு இளைய சகோதரர்களாகிறார்கள்.

இந்த ராஜ்யம் பாண்டுவின் மகன்களையே சேர வேண்டும். அவர்களில் மூத்தவனான நீ, அரசனாக வேண்டியவன். உன்னை மன்னனாக ஏற்று நானே அபிஷேகம் செய்து வைக்கிறேன். தர்ம புத்திரர் உனக்கு இளவரசராவார். பீமன் உனக்குக் குடை பிடிப்பான். உன்னுடைய தேரை அர்ஜுனன் ஓட்டுவான்.

மஹாபாரதம் கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி

நகுல, சகதேவர்கள் உன் பரிவாரங்களை நடத்துவார்கள். நானும் உன் பின் வருவேன். பாண்டவர்கள் ஐவரையும் ஐந்து காலங்களில் சேரும் திரௌபதி, உன்னை ஆறாவது காலத்தில் சேருவாள். பாண்டவர்களோடு சேர்ந்து உன் தாயாரான குந்தியின் மனதை மகிழச் செய்வாயாக.

இப்படி கிருஷ்ணர் கூறியதையும், தான் பிறந்த விதத்தை அவர் விளக்கியதையும் கேட்ட கர்ணன் சொன்னான். சூரியனிடம் என்னைப் பெற்ற குந்தி தேவியார், என்னை ஆற்றிலே விட்ட பிறகு, அதிரதன் என்ற பெயர் கொண்ட தேரோட்டி என்னைக் காப்பாற்றி தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

அவருடைய மனைவி ராதை என்னைக் கையில் ஏந்தினாள். அப்போது அந்தப் பெண் மணிக்கு என் மீது ஏற்பட்ட அன்பின் காரணமாக ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அவளுக்குப் பால் சுரந்தது. என் மீது அவள் பாசத்தைப் பொழிந்து என்னை வளர்த்தாள். தான் பெற்றெடுத்த குழந்தை போலவே பாவித்து, என்னைச் சீராட்டினாள்.

தர்மத்தில் பற்றுள்ள நான், அப்படிப் பட்ட பெண்மணியைப் புறக்கணிக்க முடியுமா? அதிரதனும் என்னை மகனாகவே நினைக்கிறார். நானும் அவரைத் தந்தையாகவே கருதுகிறேன்.

கர்ணன் மேலும் சொன்னான், எனக்குப் பெயர் சூட்டும் சடங்கை நடத்தி வைத்ததும் கூட, தேரோட்டியான அதிரதன் தான். எனக்குத் திருமணம் செய்து வைத்ததும் அவர் தான். அச்சத்தின் காரணமாகவோ, பொருளுக்கு ஆசைப் பட்டோ, பூமி முழுவதையும் ஆளக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது என்பதாலோ- என்னை மகனாகவே கருதிய அதிரதன், ராதை ஆகியோருடைய தொடர்பைத் துண்டித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

இது ஒரு புறமிருக்க, துரியோதனன் பாண்டவர்களை எதிர்க்கத் தீர்மானம் செய்ததே, என்னால் தான். அர்ஜுனனை நான் வெல்வேன் என்ற நம்பிக்கையில் தான் துரியோதனன், பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டான்.

துரியோதனனின் நட்புக் காரணமாகத் தான் எனக்கு அரச பதவியே கிட்டியது- அப்படிப்பட்ட நண்பன் விஷயத்தில், பொய்யாக நடந்து கொள்ள என் மனம் என்றுமே இடம் தராது. நான் குந்தியின் மூத்த மகன் என்பதை அறிந்தால், தர்ம புத்திரன் ராஜ்ய பாரத்தை ஏற்காமல், அதை என்னிடமே கொடுக்கத் தான் முனைவான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஆனால் ஒன்று சொல்கிறேன், மிகப் பெரியதான அந்த ராஜ்யத்தைப் பெற்றாலும் கூட, உடனே அதைத் துரியோதனன் காலடியில் நான் சமர்ப்பித்து விடுவேன்.

இருபுறமும் க்ஷத்ரியர் கூட்டம் தயாராக நிற்கிறது. யுத்தமெனும் யாகம் நடக்கத் தான் போகிறது. அதுவும் உமது மேற்பார்வையில் நடக்கப் போகிறது. இந்த யாகத்தில் ஹோமம் செய்யப் போகிறவன் அர்ஜுனன்.

போர் வீரர்களின் வலிமையே இந்த யாகத்தில் அர்ப்பணம் ஆகப் போகிற நெய். இரு தரப்பிலும் உள்ளவர்கள் யாகத்தின் பல்வேறு அங்கங்கள், உபகரணங்கள் . யாக முடிவில் துரியோதனன் அழியப் போவது உறுதி.

நானும் இந்த யுத்தத்தில் கொல்லப் படுவேன். பாண்டவர்கள் தரப்புக்கே வெற்றி என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. யுத்தத்தின் முடிவில் மன்னர் திருதராஷ்டிரருடைய மருமகள்களும், அவருடைய பேரன்களின் மனைவி மார்களும் , கணவர்களை இழந்தவர்களாகி கதறப்போகிறார்கள்.

அந்தக் காட்சியையும் நான் மனக் கண்ணில் பார்க்கிறேன். ஆனால், என்னை நம்பியிருக்கும் துரியோதனன் நினைக்கிற மாதிரி, அர்ஜுனனை எதிர்த்து நான் கடும் யுத்தம் செய்யப் போகிறேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை.

இந்த யுத்தத்தில் உயிர் இழக்கப்போகும் வீரர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடையுமாறு செய்ய வேண்டியது உமது பொறுப்பு. நமக்குள் நடந்த இந்த உரையாடல் ரகசியமாகவே இருக்கட்டும். யுத்தத்திற்குத் தயாராக இருக்கும் என்னை எதிர்க்க அர்ஜுனனை அழைத்து வாருங்கள்.

ஹாபாரதம் கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி

இப்படிக் கூறிய கர்ணனைப் பார்த்து கிருஷ்ணர், ” கர்ணா! இந்தப் பூமி முழுவதையும் ஆள வாய்ப்பு க் கிட்டியும் நீ அதை விரும்பவில்லையா? யுத்தம் நடந்தால் பாண்டவர்களுக்குத் தான் வெற்றி என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்று கூறினார்.

கர்ணன் சொன்னான், எல்லாம் அறிந்தவரான நீங்களே, எனக்கு மன மயக்கத்தை உண்டாக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது. ஏற்படப்போகும் நாசம் எங்களுக்கு மட்டுமல்ல, பூமி முழுமைக்கும் தான். நான் பல துர் நிமித்தங்களைக் காண்கிறேன்.

அவையெல்லாம் துரியோதனனுக்குப் பெரும் தோல்வி நேரிடப் போகிறது என்பதையே எனக்குச் சுட்டிக் காட்டுகின்றன. துரியோதனனும், அவனுடைய தரப்பில் உள்ள நானும், பீஷ்மரும், துரோணரும் அஸ்வத்தாமா , கிருபர் போன்றவர்களும் , மற்றும் பல அரசர்களும் அழியப் போகிறோம். இதை தெரிந்தேதான் நான் யுத்தத்திற்குத் தயாராக இருக்கிறேன்.

கிருஷ்ணர், கர்ணா! நீ என்னுடைய பேச்சைக்கேட்க மறுப்பதிலிருந்தே இந்தப் பூமிக்கு ப் பெரும் நாசம் விளையப் போகிறது என்பது உறுதியாகிறது. அழிவிற்கான காலம் வந்து விட்டதால் தான், தர்மத்தை உணர்ந்த உனக்கு அநீதியே நீதியாகக் காட்சியளிக்கிறது” என்று மனம் வருந்திச் சொன்னார்.

க்ஷத்ரியர் கூட்டத்தையே நாசம் செய்யப்போகும் இந்த யுத்தத்திலிருந்து மீண்டால் உம்மை உயிருடன் பார்ப்பேன்” இல்லாவிடில், சொர்க்கத்தில் உம்மை நான் சந்திப்பேன்” என்று கூறி கிருஷ்ணரிடம் விடை பெற்ற கர்ணன், அவருடைய தேரில் இருந்து இறங்கி, தன்னுடைய தேரில் ஏறி ஹஸ்தினாபுரம் திரும்பினான்.

 

கிருஷ்ணருடைய உபதேசத்தைக் கர்ணன் ஏற்க மறுத்த பிறகு விதுரர் குந்தியைச் சந்தித்துத் தன்னுடைய கவலையை வெளிப் படுத்தினார். என் சொல்லை துரியோதனன் ஏற்க மறுத்து விட்டான். திருதராஷ்டிர மன்னரோ, மகன் மீது கொண்ட பாசத்தினால் தர்மத்தின் பாதையில் செல்லவில்லை. யுத்தம் மூளப் போகிறது கௌரவர் கூட்டம் அழியப் போகிறது. இதை நினைத்து நான் உறக்கம் இல்லாமல் தவிக்கிறேன்.

விதுரர் வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மனம் யோசனையில் ஆழ்ந்தது. ” யுத்தம் செய்யாமற் போனால் அவமானம் . யுத்தம் செய்தாலோ பெரும் நாசம். யுத்தத்தினால் ஏற்படும் நாசத்தையும் வெற்றி எனச் சொல்ல முடியாது. துரோணர், பீஷ்மர், ஆகியோர் சமாதானத்தை விரும்புகிறவர்கள். துரியோதனனுக்கு நிகராகச் சமாதானத்தைப் புறக்கணித்தவன் கர்ணன் ஒருவன் தான்.

பாண்டவர்களை அழிப்பதில் அவன் துரியோதனனுக்குச் சமமான முனைப்புக் கொண்டிருக்கிறான். சூரியன் வழியாக அவனைப் பெற்றெடுத்த தாய் நான் தான் என்பதை அவனுக்கு உணர்த்தினால், அவன் பாண்டவர்களிடம் அன்பு செலுத்த வழி ஏற்படலாம்.

அவனே என்னுடைய மூத்த மகன் என்பதை அவன் உணர்ந்தால், தன்னுடைய உடன் பிறந்தவர்களாகிய பாண்டவர்களுக்கு நன்மை செய்ய அவன் முடிவெடுப்பான்- இவ்வாறு சிந்தித்த குந்தி, கர்ணனைச் சந்திக்கும் எண்ணத்துடன் புறப் பட்டாள்.

அப்போது கர்ணன், சூரியனை நோக்கி துதித்துக் கொண்டிருந்தான். அவனுடைய முதுகைச் சூரியன் சுடும் வரையில் துதி செய்து கொண்டு நின்ற அவன், அதன் பிறகு திரும்பியபோது, அங்கே குந்தி நின்று கொண்டிருந்தாள்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here