இந்திரஜித் மாண்டான்

🌸 வால்மீகி ராமாயணம்

🌸..பாகம்-137🌸
…..
யுத்த காண்டம்.
……………………

அத்தியாயம்29,
……………………..
இந்திரஜித் மாண்டான்
……………………..
விபீஷணன் பேசியதைக்கேட்ட இந்திரஜித் பெரும் கோபமுற்றான். கறுப்புக் குதிரைகள் பூட்டப் பட்டதும், மிகவும் சிறப்பான முறையில் அலங்கரிக்கப் பட்டதுமான தேரில் அமர்ந்து, எப்பேர்ப்பட்ட எதிரிகளாயினும் அவர்களை வீழ்த்துகிற வல்லமை படைத்த வில்லையும், அம்புகளையும் ஏந்தி, எமனைப்போலவே காட்சியளித்துக் கொண்டு எல்லோருக்கும் அழிவு காலம் நெருங்கி விட்டது என்பதை அறிவிப்பவன்போல, அங்கேநின்ற இந்திரஜித் ஹனுமானின் தோள் மீது அமர்ந்திருந்த லக்ஷ்மணனைப்பார்த்து, சில வார்த்தைகள் பேசினான்.

என்னுடைய சக்தியை இப்போது நீ பார்ப்பாய். வானத்திலிருந்து வீழ்கின்ற பெரும் மழையைப்போல், என் வில்லில் இருந்து அம்புகள் பொழியும் காட்சியை நீ காணப்போகிறாய். பஞ்சு மூட்டையைத்தீ எரித்துவிடுவது போல, என்னுடைய அம்புகள் உங்கள் அனைவரையும் எரித்துப் பொசுக்கப்போகின்றன.

சென்ற முறை நாம் யுத்த களத்தில் சந்தித்தபோது, பெரும் புகழ் பெற்ற நீயும், உன்னுடைய மூத்த சகோதரனும் என்னுடைய அம்புகளினால் வீழ்த்தப் பட்டு, சுய நினைவு இழந்து கிடந்தீர்கள். கோபம் கொண்ட கொடிய பாம்புக்கு நிகரான என்னை எதிர்க்க நீ மீண்டும் இங்கே வந்திருப்பதால், அந்த முந்தைய நிகழ்ச்சி உன் மனதில் இருந்து அகன்று விட்டது என்று நினைக்கிறேன். எமனுலகைக் காணும் ஆவலோடு வந்திருக்கிறாய் போலும்! உன்னை நான் அங்கே அனுப்பி வைக்கிறேன்.

எவனொருவன் வெறும் வார்த்தைகளினால் அன்றி செயல் மூலமாக, தன்னுடைய திறனைக் காட்டுகிறானோ, அவனே அறிவுடையவனாவான்” என்று இந்திரஜித்துக்குப் பதில் கூறத் தொடங்கிய லக்ஷ்மணன், மேலும் தொடர்ந்து சொன்னான். நினைத்த காரியத்தை சாதிக்கும் திறன் உன்னிடம் இல்லா விட்டாலும் கூட, நினைத்ததைச் செய்து முடித்ததாகவே நீ எண்ணுகிறாய்.

இந்திரஜித் மாண்டான்

இந்திரஜித் மாண்டான்

முன்பு நீயுத்த களத்தில் கையாண்ட வழி முறை என்ன? மறைந்திருந்து போர் செய்தாய். இது திருடர்களுக்கு உரிய அணுகுமுறை. இம்மாதிரி செயல்படுவது வீரர்களுக்கு அழகல்ல. இப்போது உன் எதிரிலே நான் நிற்கிறேன். உன்னுடைய போர்த்திறனை காட்டுவதற்குப் பதிலாக, எதற்காக வீண் பேச்சு பேசுகிறாய்?

இவ்வாறு விபீஷணன் பதில் கூறியவுடன்,இந்திரஜித் கொடிய பாம்புகளை நிகர்த்த அம்புகளை லக்ஷ்மணன் மீது ஏவினான்.பெரும் வேகத்தோடு லக்ஷ்மணனின் உடலில் வந்து பாய்ந்த அந்த அம்புகள், அவனை ரத்தத்தில் நீராட்டின. கூர்மையான அம்புகளினால் துளைக்கப் பட்ட லக்ஷ்மணனின் உடல் முழுவதும் ரத்தத்தினால் சிவப்பாகி, புகையே இல்லாத ஒரு நெருப்பு போல காட்சியளித்தது.

அந்த நிலையில் இந்திரஜித் ” பெயரளவில் மட்டுமே க்ஷத்ரியனாகிய தனது இளைய சகோதரன் இங்கே கொல்லப் பட்டான்- என்பதை அறிவு கெட்ட உன்னுடைய மூத்த சகோதரன் இன்று அறிவானாக! ஸுமித்திரையின் மகனே! உன்னுடைய கவசம் தரையிலே கிடக்க, உன்னுடைய வில் ஒடிந்து சிதறி விழ, உன்னுடைய தலை உன் உடம்பிலிருந்து அறுபட்டு ஒரு மூலையில் விழுந்து கிடக்கும் காட்சியை ராமன் இன்று காண்பான். நரிகளுக்கும், கழுகுகளுக்கும் உன்னுடைய உடல் இன்று உணவாகட்டும்” என்று கர்வத்தோடு கூறினான்.

மீண்டும் நீ வெறும் சொல்லையே நம்புகிறாய். மனித குலத்தின் விரோதியே! உன்னைப்போல் கொடுமையான வார்த்தைகளைப்பேசாமலேயே, உன்னை நான் தீர்த்துக் காட்டுகிறேன்” என்று கூறிய லக்ஷ்மணன், பல அம்புகளைஇந்திரஜித் மீது தொடுத்தான்.

இந்திரஜித் மாண்டான்

இந்திரஜித் மாண்டான்

இருவருக்குமிடையே பயங்கரமான யுத்தம் மூண்டது. பெரும் தைரியம் கொண்ட இந்த இரண்டு வீரர்களும், கோபம் கொண்ட இரண்டு சிங்கங்கள் மோதுவது போல்மோதினார்கள். லக்ஷ்மணனின் போர்த்திறன், இந்திரஜித்தின் மனதில் கவலையைத் தோற்றுவிக்க அவன் முகம் வெளுத்து விட்டது… இதைப் பார்த்த விபீஷணன் லக்ஷ்மணனிடம், இந்திரஜித்தின் முகத்தைப் பார்த்தாலேயே அவன் சோர்வடையத் தொடங்கி விட்டான் என்பது நன்றாகத்தெரிகிறது.

ஆகையால், விரைந்து அவனைக் கொன்று விட இது தான் தருணம். காரியத்தை முடித்து வைப்பாயாக! என்று கூறினான். இதைக்கேட்ட லக்ஷ்மணன், மீண்டும் இந்திரஜித் மீது கடுமையான பாணங்களைத் தொடுக்க அந்தத்தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல், இந்திரஜித் சற்று நேரம் தடுமாறி, பின்னர் மீண்டும் சுயநிலையைஅடைந்தான்.

இவ்வாறு தன்னை நிதானித்துக் கொண்ட இந்திரஜித் லக்ஷ்மணன், விபீஷணன், ஹனுமான் ஆகிய மூவர் மீதும் அம்புகளைஏவினான். லக்ஷ்மணனோ, சற்றும் கவலைப் படாமல் சிரித்துக் கொண்டே, யுத்த களத்தில் இப்படிப் பட்ட அம்புகளை ஒருவன் ஏவுவது எனக்கு வியப்பாக இருக்கிறது.

எந்த வித சக்தியுமில்லாத உன்னுடைய அம்புகள் என் மனதை மகிழ்விக்கின்றன. வீரர்கள் இவ்வாறு போர் புரிவதில்லை” என்று கூறிக் கொண்டே, தனது கடுமையான பாணங்களினால் இந்திரஜித்தின் கவசத்தை உடைத்தெறிந்தான். ரத்தத்தில் முழுமையாக நனைத்து விட்ட இந்திரஜித், கோபமுற்று லக்ஷ்மணனைக் கடுமையாகத் தாக்க, அவனுடைய கவசமும் உடைக்கப் பட்டது.

இரண்டு நீர் வீழ்ச்சிகளிலிருந்து தண்ணீர் பாய்ந்து செல்வது போல, இருவர் உடல்களிலிருந்தும் ரத்தம் வழிய, சற்றும் சளைக்காமல் நீண்ட நேரம் இருவரும் போரிட்டுக் கொண்டே இருந்தனர். இருவரில் ஒருவரும் களைப்புறவில்லை. புறமுதுகு காட்டவில்லை , தளர்ச்சியுறவில்லை.

இப்படி அவர்கள் இருவரும் போரிட்டுக் கொண்டிருக்கையில், இந்திரஜித்தைச் சுற்றி நின்ற அரக்கர் கூட்டத்தைத் தாக்க முனைந்த விபீஷணன், வானரசேனைக்கும் உற்சாக மூட்டினான். ” ப்ரஹஸ்தன் கொல்லப் பட்டான். நிகும்பன் உயிரிழந்தான். கும்பகர்ணன் மாண்டான்.

இந்திரஜித் மாண்டான்

இந்திரஜித் மாண்டான்

தும்ராக்ஷன், ஜம்புமாலி, அகம்பனன்….. போன்ற பலரும் யுத்த களத்தில் உயிர் விட்டனர். இப்போது ராவணனைத் தவிர மீத மிருப்பது இந்த இந்திரஜித் ஒருவன் தான். இவனே ராவணனின் கடைசி நம்பிக்கை. இவனுடைய கதை முடிந்தால், அதோடு ராவணனின் கதையும் முடிந்தது. அப்படி யிருக்க, நீங்கள் எல்லாம் பேசாமல் இருப்பது ஏன்? முனைந்து அரக்கர்களைத் தாக்குங்கள்.

இந்திரஜித்தை நானே கூட கொன்றுவிடுவேன். ஆனால், அவன் என்னுடைய அண்ணன் மகன் என்பதால் அவனைப் பார்க்கும் பொழுது என் கண்கைளை கண்ணீர் மறைக்கிறது. லக்ஷ்மணனே இந்திரஜித்தைக் கொன்று வீழ்த்தட்டும். நாம் அவனுடைய பரிவாரங்களை ஒழித்துக் கட்டுவோம்” என்று வானரர்களிடம் கூறி, அவர்களை விபீஷணன் ஊக்குவித்தான்.

இதையடுத்து ஜாம்பவானின் தலைமையில், வானரர்கள் அரக்கர்கள் மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கினர். தேவர்களுக்கும், அசுரர்களுக்குமிடையேநடந்த யுத்தம்போல, அப்போது வானரர்களுக்கும், அரக்கர்களுக்கும் இடையே யுத்தம் மூண்டது.

ஹனுமானும், லக்ஷ்மணனைத் தரையில் இறக்கி விட்டு, அரக்கர்களைத் தாக்குவதில் முனைந்தார். மற்றொரு புறத்தில் இந்திரஜித்திற்கும், லக்ஷ்மணனுக்குமிடையே பெரும் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு பயங்கரமான யுத்தம் அங்கு நடந்தபோது, வானமே அம்புகளினால் மூடப் பட்டு விட்டது.

இருள் சூழ்ந்தது. இரு தரப்பினரும் சிந்திய ரத்தம், ஒரு நதியாகப் பாய்ந்து ஓடியது. கழுகுகளும், நரிகளும் ஊளையிட்டுக் கொண்டு பிணங்களைத் தின்பதற்காக அங்கே கூடி விட்டன. காற்று வீசவில்லை. இந்த பயங்கரக் காட்சியைக்கண்ட ரிஷிகள், உலகிற்கு நன்மை விளையட்டும், உலகிற்கு நன்மை விளையட்டும்” என்று வேண்டிக் கொள்ள த் தொடங்கினர். யுத்தத்தைக் காண்பதற்காக அங்கே வந்த கந்தர்வர்கள், இந்தக் காட்சிகளைக் காண சகிக்காமல் அங்கிருந்து விரைந்தனர்.

இந்திரஜித் மாண்டான்இந்திரஜித் மாண்டான்

தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்தில், லக்ஷ்மணன் இந்திரஜித்தின் தேரோட்டியைக் கொன்று வீழ்த்தினான்.அப்போது இந்திரஜித், தானே தேரைச் செலுத்திக் கொண்டு, யுத்தம் புரியத் தொடங்கினான். காண்போர் வியக்க, தேரையும் செலுத்திக் கொண்டு, கையிலே வில் ஏந்தி போரையும் நடத்திக் கொண்டிருந்த அவனுடைய சாகசம், எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இந்திரஜித் தன்னுடைய தேரை இழுத்துக் கொண்டிருந்த குதிரைகளை செலுத்த முனைந்த போது, லக்ஷ்மணன் அவன் மீது அம்புகளைப் பாய்ச்சினான்! இந்திரஜித் அம்புகளை ஏவ முனைந்த போது, அவனுடைய தேர்க் குதிரைகள் மீது லக்ஷ்மணனின் அம்புகள் பாய்ந்தன. இந்திரஜித்திற்கு யுத்தத்தில் உற்சாகம் குறைய ஆரம்பித்தது. இந்தநேரத்தில் பொறுமையை இழந்த சில வானரர்கள், இந்திரஜித்தின் குதிரைகள் மீது தாவி, அவற்றைக் கொன்று விட்டனர்.

இந்திரஜித் தேரில் இருந்து இறங்கி, சிறிது நேரம் லக்ஷ்மணனோடு போரைத் தொடர்ந்து நடத்தினான். பின்னர் தன்னை சூழ்ந்திருந்த அரக்கர்களைப் பார்த்து, ” நம்மைச் சார்ந்த வர்கள் யார், எதிரியைச் சார்ந்தவர்கள் யார்- என்பது கூட தெரியாத அளவுக்கு இங்கே இருள் சூழ்ந்து விட்டது. இந்த வானரர்களை அழித்து விடுவதில் நீங்கள் முனையுங்கள், நான் சென்று வேறொரு தேரை எடுத்துக் கொண்டு திருமு்புகிறேன்- என்று கூறி விட்டு, நகருக்கு த் திரும்பினான்.

அங்கு ஆயுதங்களால் நிரப்பப்பட்ட ஓர் அழகான தேரை எடுத்துக் கொண்டு, மேலும் சிறந்த அரக்கர்களால் சூழப் பட்டு, மண்டோதரியின் மகனான இந்திரஜித் யுத்த களத்திற்குத் திரும்பி மீண்டும் லக்ஷ்மணன், விபீஷணன் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான்.

இந்திரஜித்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வானரர்கள் திணறி, லக்ஷ்மணனிடம் அடைக்கலமாகப் புகுந்தனர். இந்திரஜித் மூன்று அம்புகளால் விபீஷணனைத் தாக்க , உடலில் ரத்தம் கசிய, விபீஷணன் கோபம் கொண்டு கதை யினால் தாக்கி, இந்திரஜித்தின் தேரை இழுத்து வந்த குதிரைகளைக் கொன்றான். கோபம் கொண்ட இந்திரஜித் தேரில் இருந்து குதித்து, தரை மீது நின்றபடியே விபீஷணன் மீது தனது வேலை எறிந்தான்.

இதைக்கண்ட லக்ஷ்மணன் தனது அம்பினால், அந்த வேலைபத்து துண்டுகளாகப் பிளந்து எறிந்தான். அப்போது லக்ஷ்மணனும், இந்திரஜித்தும் ஏவிய பாணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, வானத்தையே ஒளி பெறச் செய்யும் வகையில், நெருப்பைக் கக்கின. இந்திரனின் தலைமையில்தேவர்களும், ரிஷிகளும்,, கந்தர்வர்களும் கூடி நின்று லக்ஷ்மணனை வாழ்த்தியவாறே அங்கு நடந்து கொண்டிருந்த அற்புதமான யுத்தத்தைக் கண்டு வியந்தனர்.

இந்திரஜித் மாண்டான்

லக்ஷ்மணன் தனது வில்லிலே நாணேற்றி, இது வரை எவராலும் வீழ்த்தப் படாததும், இந்திரனை அதிபதியாகக் கொண்டதுமான ஒரு பாணத்தைப் பூட்டி, அதை முழுமையாக இழுத்து, ராமர் தன்னிகரற்ற சக்தி படைத்தவர் என்பது உண்மையென்றால், ராமர் கொடுத்த வார்த்தை தவறாதவர் என்பது உண்மையென்றால் . ராமர் தர்மத்தின் பாதையிலிருந்து என்றும் விலகாதவர் என்பது உண்மை யென்றால், இந்த பாணம் ராவணனின் மகனாகிய இந்த இந்திரஜித்தைக் கொன்று வீழ்த்துவதாக! என்று வேண்டிக் கொண்டு அதை ஏவினான்.

பாய்ந்து சென்ற அந்த பாணம், இந்திரஜித்தின் தலையைக் கொய்து, அதைத் தரையில் கிடத்தியது.
பூமியில் விழுந்து விட்ட இந்திரஜித்தின் தலை ரத்தம் கசிய, தங்கக் குடம் போல் பிரகாசித்தது.
விபீஷணனும், வானரர்களும் , லக்ஷ்மணனைப் பாராட்ட, வானத்திலிருந்து ரிஷிகளும், தேவர்களும் அவனை வாழ்த்தினார்கள்.

பெரும் மகிழ்ச்சி எய்திய கந்தர்வர்கள், லக்ஷ்மணன் மீது பூமாரி பொழிந்தனர். வானம் தெளிவுற்றது.
அரக்கர் கூட்டமோ, பெரும் பயம் கொண்டு சிதறி ஓடியது.
வெற்றி வீரன் லக்ஷ்மணன் வாழ்க” என்று ஜாம்பவானும், ஹனுமானும், விபீஷணனும், வானரர்கள் பலரும் உவகை பொங்க, உரத்த குரலில் லக்ஷ்மணனைப் பாராட்டினார்கள்.

பின்னர் ஜாம்பவான், ஹனுமான் போன்றவர்கள் பின் தொடர, ராமரைச் சென்று அடைந்த லக்ஷ்மணன், அவரைச் சுற்றி வலம் வந்து வணங்கி நின்றான். இந்திரஜித் கொல்லப் பட்ட செய்தியை விபீஷணன், ராமரிடம் தெரிவித்தான். ராமர், பெரும் மகிழ்ச்சி கொண்டு அவனைப் பாராட்டி, சாதிக்க முடியாததைச் சாதித்திருக்கிறாய். இந்த யுத்தத்தில் நாம் வென்றோம் என்பது உன்னுடைய செயலால் உறுதியாக்கப் பட்டு விட்டது” என்று கூறி லக்ஷ்மணனை வாழ்த்தினார்.

மேலும், ” இந்திரஜித் மாண்டதால் ராவணனும் மாண்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன். ராவணனுடைய வலது கரத்தை நீ அறுத்து விட்டாய். ராவணன் நின்று கொண்டிருந்த அஸ்திவாரத்தை நீ தகர்த்து விட்டாய். லக்ஷ்மணா! எனக்குப் பாதுகாப்பாக நீ இருக்கும் பொழுது, ஸீதையை மீட்பதும் எளிதே! இந்தப் பூமியை பாதுகாப்பதும் எளிதே! என்று கூறிய ராமர், லக்ஷ்மணனை கட்டித் தழுவி, உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்.

………………………………………………………….

..

தொடரும்… 🌸

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here