இந்திரஜித்தின் மாயாஜாலம்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ
🌸..பாகம்-134

யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-26
…..
இந்திரஜித்தின் மாயாஜாலம்
…………………

வானரப் படையில் எல்லோரும் முழுமையான மனச்சோர்வை அடைந்து விட்ட நிலையில், ஹனுமான் முதலானோரைப் பார்த்து விபீஷணன்,” அச்சப் படவேண்டிய அவசியமில்லை. மனச்சோர்வு அடையுமாறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை” என்று தொடங்கி மேலும் சொன்னான்.

இந்திரஜித் ஏவியது ப்ரம்ம தேவனால் நிர்வகிக்கப் படுகிற அஸ்திரம் என்பதால், அதற்குக் கட்டுப் பட வேண்டிய அவசியம் ராம- லக்ஷ்மணர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது- அவ்வளவு தான்.
அப்போது ஹனுமான்,” அப்படியென்றால் இவர்களையும் இந்தப் படையில் இன்னமும் உயிருடன் இருக்கும் வானர வீரர்களையும், அந்த அஸ்திரத்தின் பாதிப்பிலிருந்து மீட்பது நமது கடமை” என்று சொல்ல, அந்த இரவு நேரத்தில் விபீஷணனும், ஹனுமானும் யுத்த களத்தின் நாற்புறங்களிலும் சென்று பார்த்தார்கள்.

ஏற்கெனவே விழுந்தவர்கள் தவிர, அங்கதன், நீலன், ஜாம்பவான், ஸுக்ரீவன், ஆகியோர் கூட வீழ்ந்து விட்டதை அவர்கள் பார்த்தார்கள். ஜாம்பவானை நெருங்கிய விபீஷணன், மரியாதைக்குரியவரே! இந்திரஜித்தின் பாணத்திற்கு நீங்கள் பலியாகி விட வில்லை அல்லவா? என்று விசாரித்தான்.

விழுந்து கிடந்த ஜாம்பவான், கஷ்டப் பட்டுப்பேசி பதில் கூறினார். உன்னுடைய குரலைத் தான் என்னால் கேட்க முடிகிறது. அதை வைத்துக் கொண்டு நீ விபீஷணன் என்று அறிகிறேன்.

உடலில் பல பாகங்களும் அம்பினால் துளைக்கப் பட்டதால் , எனது பார்வை மங்கி விட்டது. வாயுவின் மைந்தனும், வானரர்களில் சிறந்தவனுமாகிய ஹனுமான் உயிருடன் இருக்கிறானா?
இப்படிக்கேட்ட ஜாம்பவானைப் பார்த்து விபீஷணன், ” ராம – லக்ஷ்மணர்களைப் பற்றிக் கூட விசாரிக்காமல், ஹனுமானைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப் படுவது ஏன்? ஸுக்ரீவ மன்னனுக்கோ, அங்கதனுக்கோ கூட காட்டாத பரிவை, ஹனுமான் மீது நீங்கள் காட்டுவது ஏன்? என்று வியப்புடன் கேட்டான்.

ஜாம்பவான், அரக்கர்களில் மேம்பட்டவனே! ஹனுமான் உயிருடன் இருந்தால், பெரும் அழிவுக்குள்ளாகிய இந்த வானர சேனை, இன்னமும் கூட காப்பாற்றப் பட்டதாகவே திகழும். ஹனுமான் உயிர் இழந்திருந்தால், நாம் அனைவரும் வாழ்ந்தாலும் கூட உயிரற்றவர்களே! ஹனுமான் இறக்க வில்லையென்றால், நமக்கெல்லாம் நம்பிக்கைக்கு இடமிருக்கும்” என்று பதில் சொன்னான்.

இந்திரஜித்தின் மாயாஜாலம்

அப்போது ஹனுமான், மிகவும் பணிவுடன் ஜாம்பவானை நெருங்கி நலம் விசாரித்தார். ஹனுமானின் குரலைக்கேட்ட ஜாம்பவான், ” வானரப் புலியே! வா! நீ தான்! இப்போது எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

உன்னுடைய உண்மையான பலத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. வானரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியைத் தருவாயாக! ராம- லக்ஷ்மணர்களையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீட்பாயாக! என்று கூறி விட்டு மேலும் தொடர்ந்தார்.

கடலைக் கடந்து இமயமலைச் சாரலுக்குச் செல். அங்கே ரிஷிபம் என்ற மலையை நீ பார்ப்பாய். மிகவும் உயர்ந்திருக்கும் அந்த மலையின் மீது ஏறினால் கைலாச மலையை நீ காண்பாய்.

இந்திரஜித்தின் மாயாஜாலம்

அந்த இரண்டு மலைச் சிகரங்களுக்கிடையில், ஒளி விட்டுப் பிரகாசிக்கும் மூலிகைகளையுடடைய ஒரு மலையையும் நீ பார்க்கலாம். ம்ருதசஞ்சீவினி, விசல்யகரணி, ஸுவர்ணகரணி, ஸம்தாணி என்கிற நான்கு மூலிகைகள் அங்கே தென்படும். அவற்றை எடுத்துக் கொண்டு நீ விரைவாகத் திரும்பி வந்தால், நம் எல்லோரையும் காப்பாற்றி விடலாம்.

( இங்கே குறிப் பிட்டுள்ள மூலிகைகளின் விவரங்களைப் பற்றி வால்மீகி ராமாயணம் எதுவும் கூறவில்லை என்றாலும், ராமாயண விளக்கவுரைகள் சில விவரங்களைத் தருகின்றன.

ம்ருதசஞ்சீவினி என்ற மூலிகை- இறந்தவர்களையும் பிழைப்பிக்கும் சக்தி கொண்டது. விசல்யகரணி- ஆயதங்களினால் ஏற்பட்ட காயங்களை குணப் படுத்தக் கூடியது. , ஸுவர்ணகரணி- பாதிக்கப் பட்ட உடலை முன்பிருந்த தோற்றத்திற்குக் கொண்டு வருவது- ஸம்தாணி- வெட்டப் பட்ட அங்கங்களையும், முறிவடைந்த எலும்புகளையும் சேர்க்கக் கூடியது… என்ற விவரங்்களைச் சில விளக்க உரைகள் தருகின்றன)

ஜாம்பவானின் வார்த்தைகளைக்கேட்ட ஹனுமானுக்கு பெரும் சக்தி உண்டாகியது. த்ரிகூட மலையின் மீது நின்று, அந்த மலையே நடுங்குகிற வகையில் தனது கால்களை அழுத்தி, சமுத்திர ராஜனை வணங்கி, வானத்திலே தாவி, இமயமலைச் சாரலை நோக்கி அவர் விரைந்தார்.

வான வீதியில் பாய்ந்து சென்ற அவர் அப்போது, விஷ்ணுவினால் ஏவப் பட்ட சக்ராயுதம் போல் காட்சியளித்தார். மிகவும் விரைவாக ஜாம்பவான் கூறிய மலைச் சிகரத்தை அடைந்த ஹனுமான், குறிப்பிடப் பட்ட மூலிகைகளை அங்கே காண முடியாமல் கோபம் கொண்டு, பல விதமான மூலிகைகளைக் கொண்ட அந்த மலையின் சிகரத்தையே பிளந்தெடுத்துக் கொண்டு, மீண்டும் வான வீதியில் பறந்து, வானரசேனை இருந்த இடத்தை வந்தடைந்தார்.

ஜாம்பவானால் குறிப்பிடப் பட்ட மூலிகைகளைத் தாங்கி நின்ற மலைச் சிகரம். ஹனுமானால் இப்படி கொண்டு வரப் பட்ட உடனேயே அந்த மூலிகைகளின் வாசனை நாற்புறமும் பரவியது. வீழ்ந்து கிடந்த வானர வீரர்கள் தெளிவோடு எழுந்து நின்றார்கள். மரணமடைந்து தரையிலே கிடந்த வானரர்களும் கூட, உயிர் பெற்று எழுந்தனர். ராம- லக்ஷ்மணர்கள் மயக்கத்தில் இருந்து விடுபட்டு, காயங்கள் குணப் படுத்தப் பட்டு எழுந்தனர்.

இந்திரஜித்தின் மாயாஜாலம்

அதே சமயத்தில் அரக்கர்களுக்கு இந்த மூலிகைகளினால் எந்த பலனும் விளையவில்லை. ஏனென்றால் யுத்தம் தொடங்கியதிலிருந்தே வீழ்ந்து விட்ட அரக்கர்கள் எல்லாம், ராவணனின் உத்தரவின் பேரில் கடலில் வீசி எறியப் பட்டு விட்டனர்.

அரக்கர் தரப்பில் உயிர் இழப்பு எந்த அளவில் நிகழ்ந்தது என்பது வானரர் தரப்புக்கும் தெரியக் கூடாது.- என்ற எண்ணத்தில் ராவணன் செய்த காரியம், இப்போது அவர்களுக்கு மூலிகையின் பலன் கிடைக்காமல் செய்து விட்டது.

இந்திரஜித்தின் மாயாஜாலம்

வானரர் தரப்பில் மூலிகைகளினால் பலரும் குணப் படுத்தப் பட்ட பிறகு, ஹனுமான் மூலிகைகள் நிறைந்த அந்த மலைச் சிகரத்தை சுமந்து, மீண்டும் வான வீதி வழியாகவே சென்று அது இருந்த இமயமலைப் பிரதேசத்திலேயே அதை வைத்து விட்டு, ராமர் முதலானோரை மீண்டும் வந்து அடைந்தார்.

பின்னர் ஹனுமானின் யோசனையின் போரில், இலங்கையின் மீது கடும் தாக்குதலை வானரர்கள் நிகழ்த்தினார்கள். இலங்கையில் பேரழிவு நிகழ்ந்தது. ராமரும், லக்ஷ்மணனும் எய்த பாணங்களும் இலங்கையை மேலும் அழிவுக்கு உள்ளாக்கின. கோபம் கொண்ட ராவணன், கும்பன், நிகும்பன் ஆகிய கும்பகர்ணனின மகன் களையும், யுபாக்ஷன், சோணிதாக்ஷன், ப்ரஜாங்கன், கம்பனன்- ஆகிய அரக்க வீரர்களையும் யுத்த களத்திற்கு அனுப்பினான்.

வானரர்களுக்கும், இந்த அரக்கர்களுக்குமிடையே கடும்போர் நிகழ்ந்தது. இறுதியில் அங்கதன், கம்பனனையும், ப்ரஜாங்கனையும் கொன்றான். த்விவிதன், சோணிதாக்ஷன் என்ற அரக்கனைக் கொன்றான். விருபாக்ஷனன் என்ற அரக்கனைமைந்தன் கொன்றான். பெரும் வீரனாகிய கும்பனை, ஸுக்ரீவன்,வீழ்த்திக் கொன்றான், நிகரற்ற போர்த்திறன் கொண்ட நிகும்பன், ஹனுமானால் கொல்லப் பட்டான்.

இவர்களுடைய மரணத்தைக்கேள்விப்பட்ட ராவணன், கரனுடைய மகனாகிய மகராக்ஷனை யுத்த களத்திற்கு அனுப்ப, பெரும்போர் புரிந்த அவன், வானர சேனையில் பேரழிவை உண்டாக்கி விட்டு இறுதியில் ராமரால் வீழ்த்தப் பட்டு இறந்தான்.

மகராக்ஷனும் இறந்த செய்தி ராவணனை எட்டியது. எல்லா யுத்தங்களிலும் வெற்றியையே கண்ட அவன், அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்த பின்னடைவுகளை நினைத்து, தன் பற்களை நறநறவென்று கடித்து, கோபம் பொங்கி யெழ இந்திரஜித்தை அழைத்து, அவனை யுத்த களத்திற்கு அனுப்பினான்.

பூஜைகளைச் செய்து, தெய்வங்களைத் தொழுது விட்டு, யுத்த களத்திற்குப் புறப் பட்ட இந்திரஜித் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு, எண்ணற்ற அம்புகளை ராம- லக்ஷ்மணர்கள்மீது பொழிந்தான். அவர்கள் இருவரும் ஏவிய அம்புகள், இந்திரஜித்தைத் தொடக் கூட இல்லை.

இந்திரஜித்தின் மாயாஜாலம்

வானத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவன் நகர்ந்து கொண்டே இருந்தாலும், அவன் எங்கிருக்கிறான் என்பது அவர்களுக்கு பார்வையின் மூலமாகவோ, ஒலியின் மூலமாகவோ புரியவில்லை.

பிறகு இந்திரஜித்தின் அம்புகள் வரும் திசையை நோக்கி- ராம- லக்ஷ்மணர்கள் தங்களுடைய பாணங்களை ஏவினார்கள். இவ்வாறு அவர்கள் யுத்தம் புரிந்த போது, அவனைத் தாக்கிய அம்புகள் ரத்தம்தோய்ந்து தரையில் வீழ்ந்தன. ராம-லக்ஷ்மணர்களும் இந்திரஜித்தின் அம்புகளால் துளைக்கப் பட்டு, உடலில் ஆங்காங்கே ரத்தம் கசிய நின்றார்கள். இந்திரஜித்தின் பாணங்களினால் நூற்றுக் கணக்கில் வானரர்கள் வீழ்ந்து மடிந்தார்கள்.

யுத்தத்தின் நிலை கண்ட லக்ஷ்மணன் கோபமுற்று, பெரும் அழிவை உண்டாக்கக் கூடிய அஸ்திரத்தை ஏவத் தயாரானான். ராமர் அவனைத் தடுத்து, ” ஒருவனை எதிர் கொள்வதற்காக பலரை அழிப்பது நியாயமல்ல. எதிர்த்து யுத்தம் புரியாதவன், மறைந்திருப்பவன், கை கூப்பி அடைக்கலம் நாடுபவன்,போதையில் இருப்பவன், புறம் காட்டி ஓடுபவன்- ஆகியோரை தாக்கிக் கொல்வது முறையல்ல. மறைந்திருந்தே தாக்குதலை நடத்துகிற இவனை எப்படி வீழ்த்துவது என்று சற்று யோசிப்போம்” என்று கூறினார்.

ராமரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட இந்திரஜித், யுத்த களத்தை விட்டு விலகி மீண்டும் இலங்கைக்குள் நுழைந்தான். புலஸ்திய மஹரிஷியின் குலத்தில் உதித்தவனும், தேவர்களுக்கு அச்சத்தை விளைவிப்பவனும், பெரும் சக்திபடைத்தவனுமாகிய இந்திரஜித், தன்னுடைய மாயாஜாலத் திறனைப் பயன் படுத்த முடிவெடுத்தான்.

ஸீதையைப்போன்றே ஒருபெண்ணைத்தோற்றுவித்து, அந்த பொய்யான ஸீதையை தனது தேரில் இருந்த பெண்ணைப் பார்த்து ஸீதை என்று நம்பிய ஹனுமான், பெரும் கோபம் கொண்டார். அவர் அசோக வனத்தில் பார்த்த போது ஒரு கிழிந்த ஆடையுடன் ஆபரணங்கள் இல்லாமல், உடல் எல்லாம் தூசி படிந்து எப்படி ஸீதை காணப் பட்டாளோ, அப்படியோ இந்திரஜித்தின் தேரிலிருந்த பெண்ணும் தோற்றமளித்தாள்.

தான் பார்த்த போது, ஸீதையின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தையும் இந்தப் பெண்ணின் முகத்தில் பார்த்த ஹனுமான், இந்திரஜித்தைக் கொன்று விடும் எண்ணத்தோடு முன்னேறினார்.

பல வானரர்கள் பின் தொடர, தன்னை நோக்கி ஹனுமான் வந்து கொண்டிருந்த போது, இந்திரஜித் தன்னுடைய வாளை உருவி, அந்தப் பெண்ணைத் தாக்கி விடத் தயாரானான். அவளுடைய தலை முடியைப் பிடித்து இந்திரஜித் இழுத்தபோது,, அவள் ” ராமா” ராமா” என்று கதறினாள்.

இதைப் பார்த்து துடித்த ஹனுமான் உன்னுடைய அழிவிற்காகத் தான் நீ ஸீதையின் தலை முடியைப் பிடித்து இழுக்கிறாய். வீட்டை இழந்து, ராஜ்யத்தை இழந்து, ராமரின் பாதுகாப்பையும் இழந்து நிற்கும் இந்த ஸீதை, உனக்கு என்ன தீங்கு செய்தாள்? ஸீதையை நீ கொன்று விட்டால், அதன் பிறகு உன் உயிரும் உன் உடலில் தங்கப்போவதில்லை. ஒரு பெண்ணைக் கொல்வது என்பது, எல்லோராலும் வெறுக்கத் தக்க காரியங்களைச் செய்பவர்கள் கூட வெறுக்கிற காரியம்” என்று கோபத்துடன் எச்சரித்தார்.

இந்திரஜித்தின் மாயாஜாலம்

இப்படிக் கூறிவிட்டு ஹனுமான், இந்திரஜித்தை நோக்கிப் பாய்ந்தார். அப்போது இந்திரஜித், ஹனுமானைப் பார்த்து, நீ பார்க்கும் பொழுதே ஸீதையை நான் கொல்லத் தான்போகிறேன். யாரைக் காப்பாற்றுவதற்காக ஸுக்ரீவனும், ராமனும், நீயும் வந்திருக்கிறீர்களோ, அந்த ஸீதையை நான் கொல்லத் தான்போகிறேன்.

அதன் பிறகு, ராமன், லக்ஷ்மணன், நீ, ஸுக்ரீவன், விபீஷணன் எல்லோருக்கும் முடிவு கட்டுகிறேன். நீ கூறியபடியே ஒரு பெண்ணைக் கொல்லக் கூடாது என்பது உண்மை தான். ஆனால், எதிரிக்கு எது பாதிப்பை ஏற்படுத்துமோ அது செய்யத் தக்கது தான் என்பதை மறந்து விடாதே” என்று சொல்லி விட்டு, தன்னுடைய வாளினால் ஸீதை போன்று விளங்கிய அந்த மாயப் பெண்ணை வெட்டி இரண்டு துண்டாக்கி வீழ்த்தினான்.

ஹனுமான் பதறிப் பதை பதைத்து நிற்க, அவரைப் பார்த்து, ராமனின் மனைவி என்னால் கொல்லப் பட்டதைப் பார்த்தாய்” இனி ஸீதையைக் காப்பாற்றுகிற உங்கள் எண்ணம்அர்த்தமற்றது” என்று இந்திரஜித் கொக்கரித்தான்.

கோபம் கொண்டு ஹனுமானும், மற்ற வானரர்களும் இந்திரஜித்தையும், மற்ற அரக்கர்களையும் தாக்கினார்கள். இரு தரப்பிலும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. அப்போது ஹனுமான், ஸீதை மரணமடைந்த செய்தியை ராமரிடம் தெரிவிக்க நினைத்து, வானரர்களோடு அந்த இடத்தை விட்டு அகன்றார். இந்திரஜித், ஒரு யாகத்தை ச் செய்து முடிக்கும் எண்ணத்தோடு நிகும்பலம் என்ற இடத்தை அடைந்தான்.

விரைவாக ராமரைச் சென்று அடைந்த ஹனுமான், யுத்த களத்தில் நாங்கள்போரிட்டுக் கொண்டிருந்த போது, ராவணனின் மகன் இந்திரஜித் ஸீதையைக் கொன்றுவிட்டான். என்ன செய்வது என்று புரியாமல், ஸ்தம்பித்து விட்ட மனதுடன், நான் உங்களுக்குச் செய்தி தெரிவிக்க உங்கள் முன் வந்து நிற்கிறேன்” என்று கூறினார்.

ஹனுமான் கொண்டு வந்த செய்தியைக்கேட்டு துக்கம் தாங்க முடியாமல், வேரறுந்த மரம்போல் ராமர் கீழே வீழ்ந்தார். நாற்புறத்திலிருந்தும் வானரர்கள் தண்ணீர் கொண்டுவந்து ராமர் முகத்தில் தெளித்தனர். லக்ஷ்மணன் ராமரை வாரி எடுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டான்.

..

தொடரும்… 🌸

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here