ஆதிவம்சாவதரணப் பர்வம்-3

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-3
..

ஆதிவம்சாவதரணப் பர்வம்..

பெரும் புகழ் கொண்ட முனிவர் ஒருவர் ஆணிமாண்டவ்யர் என்ற பெயரில் இருந்தார்.
அவர் வேதங்களின் விளக்கங்களில் ஆழ்ந்த புலமை கொண்டு, சிறப்புற்றுப் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, பெரும் நற்பெயர் பெற்றிருந்தார்.
அப்பாவியாக இருந்தும், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, அந்த வயதான முனிவர் {ஆணிமாண்டவ்யர்}, கழுவிலேற்றபட்டார்.

அதனால் ஆணிமாண்டவ்யர் தர்மதேவனை வரவழைத்து, “எனது குழந்தைப் பருவத்தில் பறக்கும் ஒரு சிறு பூச்சியைக் கூரான புல் கொண்டு நான் துளைத்திருக்கிறேன்.

ஓ தர்மா! அந்த ஒரு பாவத்தை நான் நினைவு வைத்திருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்தப் பாவமும் எனது நினைவில் இல்லை. அப்படியிருந்தாலும், அது முதல் ஆயிரம் மடங்கு தவம் செய்திருக்கிறேன். இத்தனை தவங்களால் அந்த ஒரு பாவத்தை வெல்ல முடியவில்லையா?
கொலைகளிலேயே பிராமணனைக் கொல்வது மிகவும் கொடியது. ஆகையால், ஓ தர்மா, நீ பாவம் நிறைந்தவன். நீ பூமியில் சூத்திரனாகப் பிறக்கக் கடவாய்!” என்று சபித்தார்.

அந்தச் சாபத்தின் காரணமாகத் தர்மன் சூத்திரனாகவும், பாவங்களற்றவனாகவும், புனிதமான உடல் கொண்டவனும், அறிவுடையவனாகவும் விதுரன் பிறந்தான்.
பெரும் சக்தியும், புகழும் கொண்ட பீஷ்மர் அளவிடமுடியாத காந்தியைத் தன்னகத்தே கொண்டு, {பிரபாசன் என்ற வசுவின்} வசுக்களின் அம்சங்களைக் கொண்டு, கங்கையின் கருப்பையில் சந்தனுவால் பிறந்தார்.

பெரும் பலமிக்கவனான சூதன் {கர்ணன்}, குந்தியிடம் அவளது கன்னிமைக்காலத்தில் சூரியன் மூலம் பிறந்தான்.இயற்கையான மார்புக்கவசத்தோடும், முகத்தை மின்னச்செய்யும் காது குண்டலங்களோடும், தனது தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்தான்.

உலகம் முழுதும் புகழ்வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டவனுமான விஷ்ணு, மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் வசுதேவர் மூலம் தேவகிக்கு பிறந்தான். அவன் பிறப்பும் இறப்பும் அற்றவனும், சுடர்விடும் பிரகாசம் கொண்டவனும், இந்த அண்டத்தின் அதிபதியும், அனைவரின் தலைவனும் {தெய்வமும்} ஆவான்.

இந்திரஜித் மாண்டான் ஆதிவம்சாவதரணப் பர்வம் மஹாபாரதம் பாகம்-3

அவனே எல்லாக் காரியங்களுக்கும் மறைமுகக் காரணமாவான். அவன் அழிவற்றவன். அவன் எல்லா உயிருக்குள்ளும் இருப்பவன். நகரும் அனைத்துக்கும் மையம் அவனே. சத்வ, ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று} குணங்களின் இருப்பிடம் அவனே.

அவனே பிரபஞ்சத்தின் ஆன்மா, அவன் ஒருவனே மாற்றமில்லாதவன். அண்டத்தின் கட்டுமானப் பொருள் அவனே. அவனே படைப்பாளன், அவனே கட்டுப்படுத்துபவன், அவனே எல்லாப் பொருளிலும் மறைமுகமாக இருப்பவன்.
இந்த அண்டத்தின் ஐந்து பூதங்களுக்கும் ஆதி அவனே. அவன் உயர்ந்த ஆறு குணங்களைக் கொண்டவன்.

அவனே பிரணவம், அவனே வேதங்களின் ஓம், அளவில்லாதவன், தன் விருப்பத்தைத் தவிர வேறு எந்தச் சக்தியாலும் அசைக்கப்பட முடியாதவன்.
சிறப்பு மிகுந்தவன். சிறப்பு மிகுந்த சந்நியாசம் எனும் வாழ்க்கை முறையின் உடலே அவன். படைப்பிற்கு முன் அவன் நீரில் மிதந்து கொண்டிருந்தான். இந்தப் பெரும் கட்டமைப்புக்கு அவனே மூலம்.

அவனே சிறந்த ஒருங்கிணைப்பாளன், அவனே அனைத்தையும் அழிப்பவன். அனைத்திலும் மறைவான சாரம் அவன், அவனே மாற்றம் இல்லாத பெரியவன். புலன் நுகர்வால் அறியப்படும் குணங்கள் இல்லாதவன் அவனே.
அவனே அண்டம், ஆதி அந்தம் அற்று, பிறப்பு இறப்பும் அற்று, அளவிடமுடியாத செல்வங்களைக் கொண்டு, அனைத்து உயிர்களுக்கும் பெரும் தகப்பனாக இருப்பவன். அப்படிப்பட்டவன் அந்தக விருஷ்ணி குலத்தில் {யாதவக் குலத்தில்} அனைத்து அறங்களையும் வளர்க்கப் பிறந்தான்.

அனைத்து ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களும், பெரும் சக்தி கொண்டு விளங்கியவர்களும், அனைத்து ஞானக்கிளைகளிலும் புலமை கொண்டவர்களும், எல்லாவற்றிலும் நாராயணனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களும், அனைத்து ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவர்களுமான சாத்யகியும், கிருதவர்மனும்,
{முறையே} சத்யகன் மற்றும் ஹிருதிகனின் மூலம் பிறந்தனர்.
கடும் தவங்கள் செய்த முனிவர் பரத்வாஜரின் வித்து ஒரு குடத்துக்குள் வைக்கப்பட்டு, அது வளரத்துவங்கியது.

அந்த வித்தில் இருந்து தோன்றியவர்தான் துரோணர் (பானையில் பிறந்தவர்).
கௌதமரின் வித்து நாணல் கட்டில் விழுந்து, பிறந்த இரட்டையர்தான், அசுவத்தாமனின் தாயும் (கிருபியும்), பெரும் சக்தி வாய்ந்த கிருபரும் ஆவர்.
அதன் பிறகு, அக்னியின் காந்தியுடன் திருஷ்டத்யுமனன் வேள்வித்தீயில் பிறந்தான்.
அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன், பிறக்கும்போதே, துரோணரின் அழிவுக்காக வில்லைக் கையில் கொண்டு பிறந்தான். வேள்விப் பீடத்திலிருந்து கண்ணைக் கவரும் இளமையுடனும், பிரகாசமான அங்கங்களுடனும், பேரழகுடனும் கிருஷ்ணை {திரௌபதி} பிறந்தாள்.

அதன்பிறகு பிரகலாதனனின் சீடர்களான நக்னஜித்தும், சுபலனும் பிறந்தார்கள்
சுபலனுக்குத் தேவர்களின் சாபத்தால் அறத்திற்கு எதிரியாகவும், உயிரினங்களின் அழிவுக்காகவும் சகுனி என்ற மகன் பிறந்தான்
. சுபலனுக்கு ஒரு மகளும் (காந்தாரி) பிறந்தாள். அவள் துரியோதனின் தாயானாள் (
சகுனியும், காந்தாரியும் உலக லாபங்களைப் பெறும் கலையில் திறம்பெற்றிருந்தார்கள்.

வியாசரின் மூலம், விசித்திரவீரியனின் மனைவிகளிடத்தில், மனிதர்களுக்குத் தலைவன் திருதராஷ்டிரனும்,
பெரும் பலம் கொண்ட பாண்டுவும் பிறந்தனர்.
அதே கிருஷ்ண துவைபாயனர் மூலம், சூத்திர வர்ணத்தில், விவேகியும், புத்திசாலியும் அறத்திலும் பொருளீட்டுவதிலும் திறம்பெற்றவனும், பாவமற்றவனுமான விதுரன் பிறந்தான்.

பாண்டு தனது இரு மனைவிகள் {குந்தி, மாத்ரி} மூலம் தேவர்களைப் போன்ற ஐந்து புதல்வர்களைப் பெற்றான். அவர்களின் மூத்தவன் பெயர் யுதிஷ்டிரன், அவன் தர்மதேவனின் மூலம் பிறந்தவனாவான்.

ஓநாயின் வயிறு கொண்ட பீமன் மாருதனாலும் (வாயு),
ஆயுதம் தாங்கியவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், நற்பேறு பெற்றவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இந்திரனாலும், அழகான குணங்கள் கொண்டு, எப்போதும் தங்கள் மூத்தவர்களுக்குப் பணி செய்யக் காத்திருக்கும் நகுல, சகாதேவர்கள் அசுவினி இரட்டையர்கள் மூலமும் பிறந்தார்கள்.
விவேகியான திருதராஷ்டிரனுக்கு, துரியோதனன் முதற்கொண்டு நூறு புதல்வர்கள் பிறந்தார்கள்.

கூடவே வைசியப் பெண்ணுக்கு யுயுத்சு பிறந்தான்.
அந்த நூற்றொருவரில், பதினொரு பேர் – துச்சாசனன், துச்சகன், துர்மர்ஷணன், விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, ஜயன், சத்தியவிரதன், புருமித்ரன், வைசிய மனைவி மூலம் பிறந்த யுயுத்சு ஆகியோர் மஹாரதர்கள் (பெரும் தேர் வீரர்கள்) ஆவார்கள்.

அபிமன்யு, வாசுதேவனின் தங்கை சுபத்திரைக்கு அர்ஜுனன் மூலமாகப் பிறந்தான்.
அதனால் அபிமன்யு சிறப்பு மிகுந்த பாண்டுவுக்குப் பேரனாவான்.
அந்த ஐந்து பாண்டவர்களுக்கும் பாஞ்சாலியின் மூலம் ஐந்து புதல்வர்கள் பிறந்தார்கள்.

அந்த இளவரசர்கள் அனைவரும் அழகானவர்களாகவும், அனைத்து ஞானக்கிளைகளிலும்
தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.
யுதிஷ்டிரனுக்கு, பிரதிவிந்தியனும், பீமனுக்கு சுதசோமனும், அர்ஜுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்குச் சதாநீகனும், சகாதேவனுக்குப் பெரும் சக்தி கொண்ட சுருதசேனனும் பிறந்தார்கள்.
பீமன், கானகத்தில் ஹிடும்பையுடன் {இடும்பியுடன்} கூடி கடோத்கஜன் என்ற மைந்தனைப் பெற்றான்.

துருபதனுக்குச் சிகண்டினி என்ற பெண் குழந்தையும் பிறந்தாள். அவள் பிற்காலத்தில் ஆணாக மாறினாள்.
சிகண்டினி, அவளுக்கு நல்லது செய்ய விரும்பிய ஸ்தூணன் என்ற யக்ஷன் மூலமாக ஆணாக மாறினாள்.
குருக்களின் அந்தப் பெரும் போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏகாதிபதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள வந்தனர்.

அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையைப் பத்தாயிரம் வருடங்கள் உட்கார்ந்து எண்ணினாலும் என்னால் எண்ண முடியாது. நான், இந்த வரலாற்றில் முக்கியமானவர்கள் பெயர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}.

ஜனமேஜயன், “ஓ பிராமணரே , நீர் பெயர் குறிப்பிட்டவர்களைப் பற்றியும், பெயர் குறிப்பிடாதவர்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பற்றியும் விவரமாகச் சொல்வீராக.
ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {வைசம்பாயனரே}, தேவர்களுக்கு இணையானவர்களான அந்த மஹாரதர்கள் பூமியில் பிறந்த காரணம் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள் ” என்று கேட்டான் ஜனமேஜயன்

வைசம்பாயனர், “ஓ ஜனமேஜயனே, உன்னால் கேட்கப்படும் இந்தக் கேள்வி தேவர்களுக்கே புதிரானது என்பதை நாம் அறிகிறோம். இருப்பினும், சுயம்புவான பிரம்மாவை வணங்கி, நான் அவற்றைக் குறித்தும் சொல்கிறேன்.

ஜமதக்னியின் மகன் பரசுராமர், உலகத்தை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்து,
மகேந்திரம் என்றழைக்கப்பட்ட மலைக்குச் சென்று, தமது தவத்துறவுகளை இயற்றினார்.

உலகத்தில் க்ஷத்திரியர்கள் இல்லாத அந்தக் காலங்களில், க்ஷத்திரியப் பெண்மணிகள், பிள்ளைப்பேறு கருதி, , கடுமையான உறுதிகளை ஏற்றிருக்கும் பிராமணர்களிடம், பிள்ளைப்பேறுக்காக மட்டும், அதற்குரிய காலத்தில் வந்தனர். காமங்கொண்டோ, தகுந்த காலம் இல்லாமலோ அவர்கள் அப்படி வந்ததில்லை.

ஆயிரக்கணக்கான க்ஷத்திரியப் பெண்மணிகள் இப்படிப் பிராமணர்களால் கருவுற்றனர். அதன்பிறகு, பெரும்சக்தி கொண்ட க்ஷத்திரிய ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் தங்கள் குலம் தழைக்கப் பிறந்தனர்.

இப்படித் தவத்துறவுகள் செய்யும் பிராமணர்கள் மூலம் க்ஷத்திரியப் பெண்ககளிடமிருந்து க்ஷத்திரிய குலம் மீண்டும் தோன்றியது. அந்தப் புதிய தலைமுறை, நீடித்த ஆயுளுடன், அறம் வளர்க்கத் தொடங்கியது. அதன்படி, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வர்ணங்களும் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது.

அந்தக் காலத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் மனைவியிடம், அவளது பருவ காலத்திலேயே சேர்ந்தான், காமத்தாலோ, பருவ காலமல்லாமலோ ஒரு போதும் சேர்ந்ததில்லை. , இதைப்போன்றே மற்ற உயிரினங்களும், ஏன் பறவைகளும் கூடத் தங்கள் துணையிடத்தில் தகுந்த காலத்தில் மட்டுமே சேர்ந்தன.
இவ்வழியிலேயே பிறந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அனைத்தும் அறம்சார்ந்து இருந்து, அறத்தை வளர்த்து, கவலை, நோய் ஆகியவற்றில் இருந்து விடுபட்டிருந்தன.

கடல்களைத் தன் எல்லைகளாகக் கொண்ட இந்த அகண்ட பூமியானவள், தனது மலைகளுடனும், கானகங்களுடனும், நகரங்களுடனும், மீண்டும் க்ஷத்திரியர்களால் ஆளப்பட்டாள்.
க்ஷத்திரியர்களால் அப்படி மறுபடியும் பூமி அறம்சார்ந்து ஆளப்பட்ட போது, பிராமணர்களை முதலாகக் கொண்ட மற்ற வகையினரும் {வர்ணத்தாரும்} பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.

காமத்தினாலும், கோபத்தினாலும் உண்டாகும் களங்கங்கள் அனைத்தையும் கைவிட்ட மன்னர்கள், நீதியோடு தண்டிக்கத் தகுந்தவர்களுக்குத் தகுந்த தண்டனையளித்துப் பூமியைக் காத்தனர்.

க்ஷத்திரியர்கள் இப்படி அறம்சார்ந்து ஆள்வதைக் கண்டவனும் நூறுவேள்விகளைச் செய்தவனுமான அந்த ஆயிரம் கண்களை உடைய இந்திரன், சரியான நேரங்களிலும், இடங்களிலும் மழையைப் பொழிந்து உயிரினங்கள் அனைத்தையும் வாழ்த்தினான்.
அப்போது, முதிரா வயதுடையோர் எவரும் இறக்கவில்லை, மேலும் பருவமடையாத பெண்ணை மனைவியாக யாரும் அறிந்ததுமில்லை அடைந்ததுமில்லை.
ஓ பாரதக் குலத்தின் காளையே, இப்படியே கடற்கரை வரை பரந்த பூமி அறம் சார்ந்து நீடித்து வாழ்ந்த இப்படிப்பட்ட மனிதர்களால் நிரம்பியது.

க்ஷத்திரியர்கள் பெரும் செல்வங்களைத் தானமளித்துப் பெரும் வேள்விகளைச் செய்தனர். பிராமணர்கள் அனைவரும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் {கிளைகளையும்}, உபநிஷத்துகளையும் கற்றனர்.
அந்தக் காலத்தில் எந்தப் பிராமணனும் வேதத்தை விற்கவில்லை (பணம் பெற்றுக் கல்வி கொடுத்ததில்லை), அல்லது சூத்திரனின் முன்னால் வேதத்தைச் சத்தமாகப் படித்ததும் இல்லை.

வைசியர்கள், தங்கள் காளைகளின் உதவியைக் கொண்டு, நிலத்தை உழுதனர். அவர்கள் தங்கள் கலப்பையில் பசுக்களைப் பூட்டுவதில்லை. மேலும் வைசியர்கள், இளைத்திருந்த கால்நடைகளுக்குக் கவனத்துடன் தீனி கொடுத்தனர்
கன்றுகள், தங்கள் தாயின் பாலை மட்டுமே உணவாகக் கொள்ளும்வரை (புல்லோ, மற்ற உணவோ கொள்ளும் வரை), அந்தப் பசுவிடம் இருந்து மனிதர்கள் பாலைக் கறக்காதிருந்தார்கள். அந்நாட்களில், எந்த வியாபாரியும் தவறான அளவீடுகளைக் கொண்டு தன் பொருட்களை விற்காதிருந்தான்.

மனிதர்கள் அனைவரும் அறவழியில் நடந்து, அறத்தில் தங்கள் பார்வையை நிலைக்கச்செய்தபடியே அனைத்தையும் செய்தனர்.
அனைத்து வகை {வர்ண} மக்களும் தங்கள் கடமைகளில் கண்ணாயிருந்தனர்.
அந்தக் காலத்தில் அறமானது, எந்தக் குறைவுமற்றதாக இருந்தது.

பசுக்களும், பெண்மணிகளும் சரியான காலத்தில் தங்கள் பிள்ளைகளை ஈன்றனர்.
மரங்கள் பருவ காலத்திற்கேற்றபடி முறையாக மலர்களையும் கனிகளையும் கொடுத்தன.
இப்படியே கிருத யுகம் முறையாகத் தொடங்கியதும், மொத்த பூமியும் எண்ணற்ற உயிரினங்களால் நிரம்பியிருந்தது.

ஓ ஜனமேஜயா, பூலோகமானது இப்படி அருளப்பட்டு இருந்த காலத்தில், மன்னர் பரம்பரைகளில் அசுரர்கள் பிறக்கத் தொடங்கினர்.
திதியின் மைந்தர்கள் (தைத்தியர்கள்), அதிதியின் மைந்தர்களால் (தேவர்களால்) தொடர்ந்து போரில் தோற்கடிக்கப்பட்டுத் தங்கள் அரசுரிமையையும், சொர்க்கத்தையும் இழந்து, பூமியில் அவதரிக்கத் தொடங்கினர்.

பெரும் சக்திகளைக் கொண்ட அசுரர்கள், அரசுரிமையில் விருப்பம் கொண்டு, பசுக்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருமைகள், யானைகள், மான்கள் என்று பல உயிரினங்களாகவும் மற்றும் ராட்சசர்களாகவும் பூமியில் பிறக்கத் தொடங்கினர்.

ஏற்கனவே பிறந்தவர்களாலும், பிறந்து கொண்டு இருப்பவர்களாலும் பூமாதேவி, தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளத் தடுமாறினாள்.
தேவலோகத்தில் இருந்து துரத்தப்பட்ட திதி மற்றும் தனுவின் மகன்களில் {தைத்தியர்கள் மற்றும் தானவர்களில்} சிலர், பெரும் பெருமையும் செருக்கும் கொண்ட மன்னர்களாகப் பூமியில் பிறந்தனர்.
பெரும் சக்திகளைக் கொண்ட அவர்கள், பல்வேறு வடிவங்களில் பூமியை மறைத்தனர்.

எதிரிகள் அனைவரையும் ஒடுக்கும் திறன் கொண்ட அவர்கள் கடலைத் தன் எல்லையாகக் கொண்ட பூமியை நிறைத்தனர்.
மேலும் அவர்கள், தங்கள் பலத்தால் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும், சூத்திரர்களையும் மற்ற பிற உயிரினங்கள் அனைத்தையும் ஒடுக்கத் தொடங்கினர்.

உயிரினங்கள் அனைத்தையும் பயமுறுத்தியும், கொன்றும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூட்டங்களாக இந்த உலகத்தில் திரிந்தனர்.
உண்மையும், அறமுமற்று, தங்கள் பலத்தில் பெருமை கொண்டு, செருக்கு என்னும் (மதுவின்) போதை கொண்டிருந்த அவர்கள், ஆசிரமங்களிலிருந்த பெரும் முனிவர்களைக்கூட அவமதித்தனர்.

பூமியானவள், பெரும் பலத்தையும், சக்தியையும் அபரிமிதமான பல்வேறு வழிமுறைகளில் பெற்ற வலிமைமிக்க அசுரர்களால் ஒடுக்கப்பட்டு, பிரம்மனுக்குப் பணிவிடை செய்ய பிரம்மனை நோக்கித் தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினாள்.
பூமியின் எடையை அவளால் தாங்கிக் கொள்ள இயலில்லை
பிறகு, சுமையினால் ஒடுக்கப்பட்டவளும், பயத்தினால் பீடிக்கப்பட்டவளுமான பூமியானவள் அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பனுடைய {பிரம்மனின்} பாதுகாப்பை நாடினாள்.

பூமாதேவி, உலகங்களைப் படைப்பவனும், அழிவறியாதவனும், தேவர்களாலும், பிராமணர்களாலும், நற்பேறுமிக்கப் பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டவனும், மகிழ்ச்சி நிறைந்த கந்தர்வர்களாலும், தேவர்களுக்குச் சேவை செய்வதில் எப்போதும் ஈடுபடும் அப்ஸரஸ்களாலும் போற்றப்படுபவனுமான தெய்வீகமான பிரம்மனைக் கண்டாள். பாதுகாப்பை விரும்பிய பூமியானவள், லோகபாலர்கள் அனைவரின் முன்னிலையில் அனைத்தையும் பிரம்மனிடம் சொன்னாள்.

ஆனால் அனைத்தும் அறிந்தவனும், தான்தோன்றியுமான அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்} பூமாதேவியினது நோக்கத்தை முன்பே அறிந்திருந்தான்.
பிரம்மாவே அண்டத்தைப் படைத்தவனாதலால், தேவர்கள், அசுரர்கள் முதலான தன் உயிரினங்களின் மனதில் உள்ளதை அவன் ஏன் அறிந்திருக்கமாட்டான்?
பூமியின் தலைவனும், ஈசன் என்றும் சம்பு என்றும் பிரஜாபதி என்றும் அழைக்கப்பட்டவனும், அனைத்து உயிர்களின் படைப்பாளியானவனுமான பிரம்மன் பூமியிடம் பேசினான்.

பிரம்மன், “ஓ செல்வங்களைத் தாங்குபவளே, நீ எந்நோக்கோடு என்னிடம் வந்தாயோ, அதை நிறைவேற்றத் தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் நியமிக்கிறேன்” என்றான்

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பூமியிடம் இப்படிக் கூறிவிட்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீகப் பிரம்மன் அவளுக்கு விடைகொடுத்தான்.
அந்தப் படைப்பாளன் {பிரம்மன்} தேவர்கள் அனைவரிடமும், “பூமியின் சுமையைக் குறைக்க, நீங்கள் சென்று, உங்கள் அம்சங்களுடன் அவளிடம் {பூமியிடம்} பிறந்து ஏற்கனவே பிறந்துவிட்ட அசுரர்களுடன் சச்சரவில் ஈடுபடுவீராக” என்று கட்டளையிட்டான்.

மேலும் பிரம்மன், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இனங்கள் அனைத்தையும் அழைத்து, “மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் விரும்பிய வடிவில் உங்கள் அம்சங்களுடன் பிறப்பீராக! செல்லுங்கள்” என்று ஆழ்ந்த பொருளுடன் உரைத்தான்.
இந்திரனோடு கூடிய தேவர்கள் அனைவரும், உண்மையானதும், அந்தச் சூழ்நிலையில் விரும்பதக்கதும், பயனோடு கூடியதுமான தேவர்கள் தலைவனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அஃதை ஏற்றனர்.

தங்கள் அம்சங்களுடன் பூமிக்கு வரத் தீர்மானித்த தேவர்கள் அனைவரும், வைகுண்டத்தில் இருப்பவனும், சக்கரத்தையும், கதையையும் தனது கைகளில் தாங்கியவனும், ஊதா வண்ண ஆடைகளை அணிந்தவனும், பெரும் காந்தி கொண்டவனும், நாபியில் {தொப்புளில்} தாமரையைக் கொண்டவனும், தேவர்களின் எதிரிகளை அழிப்பவனும், யோக நிலையில் தனது அகன்ற மார்பில் தனது பார்வையைத் தாழ்த்தியிருப்பவனும்,

பிரஜாபதிக்கே {பிரம்மனுக்கே} தலைவனும், வலிமையும் பலமும் கொண்ட தேவர்கள் அனைவரின் இறையாண்மையும், மார்பில் மங்கலக் குறியை {ஸ்ரீவத்ஸமென்னும் மருவைக்} கொண்டவனும்{ஸ்ரீவத்ஸமென்னும் இந்த மருதான் மகாலஷ்மியின் வாசஸ்தலம் எனப் புராணங்கள் சொல்கின்றன}, ஒவ்வொருவரின் நுண்திறனிலும் செயல்படுபவனும், அனைத்து தேவர்களாலும் போற்றப்படுபவனுமான நாராயணனிடம் சென்றனர்.

அனைவரிலும் மேன்மைமிகுந்த இந்திரன் விஷ்ணுவிடம், “அவதாரம் எடுப்பீராக” என்று வேண்டினான். அதற்கு ஹரி {விஷ்ணு}, “அப்படியே ஆகட்டும்” என்றான்”


தொடரும்..

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here