ஆதிவம்சாவதரணப் பர்வம்-3

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-2

ஆதிவம்சாவதரணப் பர்வம்

வைசம்பாயனர் சொன்னார், “உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான்.
அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான்.

வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் உபரிசரன், இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான்.

சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், உபரிசரன் தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகினர்.

தேவர்கள், உபரிசரன் முன் தோன்றி, மென்மையாகப் பேசி அவனைத் தவத்தைக் கைவிடவைத்து வெற்றி பெற்றனர். தேவர்கள், “ஓ பூமியின் தலைவா! பூமியில் அறம் குறையாதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும்.
உன்னால் காக்கப்பட்ட அந்த அறம், பதிலுக்கு இந்த அண்டத்தையே காக்கும்” என்றனர்.

ஆதிவம்சாவதரணப்பர்வம்-1

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

அதன்பிறகு இந்திரன், “ஓ மன்னா! கவனமாகவும், உறுதியாகவும் இருந்து பூமியில் அறத்தைக் காப்பாற்றுவாயாக. அறம் சார்ந்து வாழ்வதாலேயே, மறுமையில் பல புனிதமான பகுதிகளை நீ நித்தியமாய்க் காண்பாயாக.

நான் தேவலோகத்தைச் சார்ந்தவனாகவும், நீ பூலோகத்தைச் சார்ந்தவனாகவும் இருப்பினும், நீ எனக்கு நண்பனாகவும், அன்புக்குரியவனாகவும் இருக்கிறாய். ஓ மனிதர்களின் மன்னா! இன்பந்தருவதும், விலங்குகள் நிறைந்ததும், புனிதமானதும், செல்வமும் , தானியங்களும் நிறைந்ததும், சொர்க்கத்தைப் போல் பாதுகாக்கப்பட்டதும், உவப்பான தட்பவெப்ப நிலை கொண்டதும் {சீதோஷ்ணமுள்ளதும்},
இன்பத்திற்குரிய அனைத்து பொருள்களாலும் அருளப்பட்டதும், செழிப்பானதுமான பூமியின் இந்தப் பகுதியிலேயே வாழ்வாயாக.

ஓ சேதியின் ஏகாதிபதியே! {உபரிசரனே} உனது ஆளுகைக்குட்பட்ட இந்த இடம் வளங்களால் நிறைந்துள்ளது. ரத்தினங்கள், விலைமதிப்பில்லாக் கற்கள், வளமான தாதுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் உள்ள நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் அறம் சார்ந்து இருக்கின்றன. மக்களும் நேர்மையாகவும், மனநிறைவுடனும் இருக்கின்றனர். அவர்கள் கேலிக்காகக் கூடப் பொய் பேசுவதில்லை.

மகன்கள் தங்கள் தந்தைகளிடம் இருந்து சொத்தைப் பிரித்துக் கொள்வதில்லை. அதுபோக, தங்கள் பெற்றோரின் நன்மையிலேயே எப்போதும் விருப்பங்கொண்டுள்ளனர். உழுவதற்காக ஏரில் பூட்டப்படவோ, வண்டியில் பாரம் சுமக்க வைக்கவோ உள்ள மாடுகள் மெலிந்தவையாக இல்லை.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

மாறாக அவை நன்றாகப் பேணப்பட்டுத் பருத்தவைகளாக இருக்கின்றன. சேதியில், நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்களும் அவரவர்களுக்கான தொழில்களையே செய்கின்றனர்.
மூவுலகங்களில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பாயாக.
ஆகாயத்தில் தேவர்கள் மட்டுமே பயணிக்கும் ஸ்படிகமயமான தேர் ஒன்றை நான் உனக்குத் தருகிறேன்.
உலக மனிதர்களிலேயே நீ ஒருவன் மட்டுமே, தேர்களிலேயே சிறந்ததான இந்தத் தேரில், உடல் கொண்ட தேவனைப் போலப் பறந்து செல்வாய்.
வாடாத தாமரைகளைக் கொண்ட வைஜயந்தி மாலை ஒன்றை உனக்கு நான் தருகிறேன்.

போர்க்களங்களில் நீ அதை அணிந்திருந்தால், ஆயுதங்களால் காயமடையமாட்டாய்.
ஓ மன்னா {உபரிசரா}, ஒப்பற்றதும், அருளப்பட்டதுமான இந்த மாலை, பூமியில் இந்திரனின் மாலை {வைஜயந்தி மாலை} என்று அறியப்படும். அணிந்து கொள்ளும் உனக்கு இது தனி அடையாளமாகட்டும்” என்றான் இந்திரன்.

இந்திரன், அந்த மன்னனுக்கு , நேர்மையானவர்களையும், சாதுக்களையும் காப்பதற்காக ஒரு மூங்கில் தடியைக் கொடுத்தான்.
ஒரு வருடம் சென்ற பிறகு, அந்த மன்னன், அந்தக் கோலை நிலத்திலே நாட்டி அதைக் கொடுத்தவனான இந்திரனை வழிபட்டான்.

அப்போதிலிருந்து, ஓ ஜனமேஜயனே, மன்னர்கள் அனைவரும், உபரிசரனின் உதாரணத்தைத் தொடர்ந்து, தரையில் மூங்கில் தடியை நட்டு இந்திரனை வழிபட்டு, இந்திரவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்
அந்தத் தடியை நட்டு வைத்துவிட்டு, அதைத் தங்கமயமான துணியாலும், நறுமணத் தைலங்களாலும், மலர் மாலைகளாலும் மற்ற பல அணிகலன்களாலும் அலங்கரிக்கின்றனர்.

இப்படியே தேவனான வாசவன் {இந்திரன்} மலர்மாலைகளாலும், அணிகலன்களாலும் உரிய முறையில் வழிபடப்படுகிறான். இந்திரனும் அம்மன்னனை வாழ்த்துவதற்காக, அன்னத்தின் உருவைக் கொண்டு,
உபரிசரனின் வழிபாட்டை ஏற்றான்.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

அப்படி வந்த இந்திரன், வசுவினால் செய்யப்பட்ட வழிபாட்டைக் கண்டு, ஏகாதிபதிகளில் முதன்மையான மன்னன் வசுவிடம் {உபரிசரனிடம்}, “சேதி நாட்டின் மன்னனைப் போல இப்படி என்னை மகிழ்ச்சியுடன் வணங்கி, இந்த விழாவைக் கொண்டாடும் மன்னர்களும், பிற மனிதர்களும், பெரும்புகழையும், வெற்றியையும் தனது நாட்டிற்காகவும், அரசுக்காகவும் அடைவர்.

அவர்களது நகரங்களும் விரிந்து எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்றான் இந்திரன். மன்னன் வசு மனநிறைவு கொண்ட அந்தத் தேவர்களின் தலைவனான உயர் ஆன்ம மகவத்தின் இந்த வார்த்தைகளால் மகிழ்ந்தான். எந்த மனிதர்கள், நிலங்களையும், ரத்தினங்களையும், விலைமதிப்பில்லா கற்களையும் பரிசாகக் கொடுத்து இந்திரனுடைய விழாவை கொண்டாடினரோ, அவர்கள் உண்மையிலேயே உலகத்தோரால் மதிக்கப்பட்டனர்.

சேதி நாட்டின் தலைவனான வசு, இந்திரனால் வரங்கள் அருளப்பட்டு, பெரிய வேள்விகளைச்செய்தும், இந்திர விழாவைக் கொண்டாடினான். சேதி நாட்டில் இருந்து கொண்டு அவன் உலகத்தை ஆண்டான். இந்திரனை மனநிறைவு கொள்ளச் செய்ய வசு இந்திர விழாவைக் {இந்திரோத்சவத்தை ஒவ்வொரு ஆண்டும்} கொண்டாடினான். உபரிசரனுக்கு பெரும்பலமும் சக்தியும், அளவிடமுடியா வீரமும் கொண்ட ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.

தன் மகன்கள் ஒவ்வொருவரையும், தனது அரசாங்கத்தின் ஒவ்வொரு பகுதிக்குப் பிரதிநிதியாக அமர்த்தினான் அந்த மன்னன். அவனது மகன் பிருஹத்ரதன் மகதத்துக்கு மன்னனாக நியமிக்கப்பட்டு மஹாரதன் என்று அழைக்கப்பட்டான்
பிராத்யக்ரஹாவும், மணிவாகனன் என்று அழைக்கப்பட்ட குசாம்பனும், மாவெலனும் {மத்சில்லனும்}, பெரும் வீரம் கொண்டவனும், போரில் தோல்வியடையச் செய்யமுடியாதவனுமான யதுவும் அம்மன்னனின் மற்ற மகன்களாவர்.
அந்த ஐந்து மகன்களும் அரசுகளையும், நகரங்களையும் தங்கள் பெயரில் உருவாக்கிக் கொண்டு,
பல காலங்களுக்கு நீடித்த தனிப்பரம்பரைகளை நிறுவினர்.

மன்னன் வசு {உபரிசரன்}, இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தனது தெய்வீக தேரில் அமர்ந்து வானத்தினூடே செல்லும்போது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் தேவலோக பாடகர்களும், ஆடல் கலைஞர்களும் அவனை அணுகினர். அப்படி அவன் மேலுகங்களில் உலவியதால் {மேலே சஞ்சரிப்பவன் என்ற பொருள்பட} உபரிசரன் என்று அழைக்கப்பட்டான்.

அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, ஒரு காலத்தில், காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கப்பட்டது.

மலையின் தவறான முயற்சியைக் கண்ட வசு , தனது காலால் அந்த கோலாஹல மலையை ஓங்கி உதைத்தான். வசு உதைத்ததனால் கோலாஹல மலையிலிருந்து ஆறு வெளியே வந்தது.

ஆனால் அந்த மலை, அந்த நதியிடம் இரட்டையரான இரு மக்களைப் பெற்றெடுத்தது.
கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த வசுவுக்கு {உபரிசரனுக்கு} நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த {சுக்திமதி} ஆறு அவனுக்கே கொடுத்தது.
அரசமுனிகளில் சிறந்தவனும், பொருளளிக்கும் வள்ளலும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான வசு அந்த {சுக்திமதி} ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான்.

கிரிகை என்ற அந்த சுக்திமதி நதியின் மகள், வசுவால் மணந்து கொள்ளப்பட்டாள்.
வசுவின் மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது நிலையைத் தனது தலைவனிடம் {உபரிசரனிடம்} தெரிவித்தாள்.

ஆனால், அதே நாளில் பித்ருக்கள், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், விவேகிகளில் முன்னவனுமான அந்த வசுவிடம் வந்து, தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள்.

மன்னனும் , பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி,
பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட, மற்றுமொரு ஸ்ரீயாக இருந்த கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.

அது வசந்த காலமாகையால், மன்னன் சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், செண்பகங்களும், மாமரங்களும், தினிசமரங்களும் நிறைந்திருந்தன. அங்கே புன்னை, கொன்றை, மகிழம், பாதிரிமரங்கள்,பலா, தென்னை, சந்தனம், மருதமரம் போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.

அந்த முழுக் கானகமே குயில்களின் இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மன்னன் மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு, அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

“தற்செயலாகப் புஷ்பங்களால் கிளைகளின் நுனிகள் மறைக்கப்பட்டதும், தளிர்களினால் சோபிக்கின்றதும், அழகானதும், பூங்கொத்துக்களால் மறைக்கப்பட்டதுமாகிய ஓர் அசோக மரத்தைக் கண்டான். அதன் கீழ் நிழலில் ஸுகமாக வீற்றிருந்த ராஜன் காற்றினால் கொண்டுவரப்பட்டதும், தேன்மணமுள்ளதுமாகிய அந்த இனிய புஷ்பவாஸனையை மோந்து ஸந்தோஷமடைந்தான்.

மனைவியை நினைக்கும்போது அந்த ராஜாவுக்கு காமமென்னும் அக்னி விருத்தியாயிற்று. அவன் இருண்ட காட்டில் ஸஞ்சரிக்கும்போது அவனுடைய வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட மாத்திரத்தில், அந்த அரசன், “என்னுடைய வீரியம் வீணாகக் கூடாது” என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். ராஜா அந்த வீரியத்தில் தன் மோதிரத்தினால் முத்திரை வைத்துச் சிவந்த அசோக புஷ்பங்களாலும், தளிர்களினாலும் மூடிக் கட்டினான்.

“இந்த என் வீரியம் வீணாக விழுந்ததாகாமலும், அந்த என் பத்தினியின் ருது காலம் வீணாகமலும் எவ்வாறிருக்கும்” என்று அறம், பொருள் இவைகளின் நுட்பமான உண்மையை அறிந்திருந்த அந்த ஸமர்த்தனாகிய ராஜஸ்ரேஷ்டன் சிந்தித்துப் பலமுறை ஆராய்ந்து பார்த்து, தன் வீரியம் வீணாவதில்லையென்பதை நிச்சயித்து, அதைத் தன் பத்தினிக்கு அனுப்புவதற்கு, “இது காலம்: என்று நினைத்து, அதற்குக் கர்ப்பாதான மந்திரத்தை ஜபித்தான்”

துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் மற்றும் அர்த்தம் குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த மன்னன் உபரிசரன் பருந்திடம் சென்று,
“இனிமையானவனே, இந்த எனது உயிரணுவை எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது” என்றான்
அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.
அப்படிப் பறந்து செல்

கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.

உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.
வசுவின் வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.

சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த அப்சரஸ் அத்ரிகை மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.
அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன.

இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.
மீனவர்கள், “ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்” என்றனர். ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.

அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.

அப்சரஸ் அத்ரிகை முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் சபித்தவரால், தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.
அதன்பிறகு, அந்த அப்சரஸ் எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.

அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் கொடுத்து, “இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்” என்றான்.
அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்.

தனது வளர்ப்புத் தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை சத்தியவதி செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்.

முனிவர்களில் காளையான அந்த பராசரரால், தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் மகளிடம் {சத்தியவதியிடம்}, “ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.
அதற்குச் சத்தியவதி, “ஓ புனிதமானவரே! நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?” என்றாள் சத்தியவதி.

அவளால் இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே அதுவரை இல்லாத மூடுபனியை உண்டாக்கினார்.
மூடுபனி அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.
முனிவரால் உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட சத்தியவதி பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை
“ஓ புனிதமானவரே! நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக.

ஓ பாவங்களற்றவரே! உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.
ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே , எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றாள்.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, சத்தியவதி சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, “எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.
ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே , நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் பலனற்றதாக இருந்ததில்லை” என்றார்.

இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள்.
பராசரரும், அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.
கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் அணைப்பை அவள் ஏற்றாள்.

அதுமுதல் அவள் மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள்.
ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.
அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.

வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள்.

ஆதிவம்சாவதரணப் பர்வம்-1

அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.
அவன், “சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்” என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான்.
இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.
வியாசர் தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர் (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார்.

அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும்,வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக வேதங்களைத் தொகுத்தார்.

அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார்.
அந்த வரமளிக்கும் சிறந்த வியாசர், சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.
பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் சீடர்கள் மூலமாகவும், என் மூலமாகவும் வெளிப்பட்டது.
என்றார் வைசம்பாயனர்.…
தொடரும்..
..

நந்தி என்றால் என்ன

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

சைவசித்தாந்த சுருக்கம்

வால்மீகி ராமாயணம்

ஸ்ரீ சிவ கீதை

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here